அள்ள அள்ளக் குறையாத அட்சய திருதியை

By குமார சிவாச்சாரியார்

அட்சய திருதியை குறித்து காளிதாசர் எழுதிய உத்தர காலமிருதம் என்ற உயரிய நூலில், ஸ்லோகம் எண் 39-ல்

திரேதாதிர் ப்ருகுராம ஜன்ம திவசோ வைசாகா மாஹே சுப:

என்று சொல்லப்பட்டிருக்கிறது. திரேதா யுகம் ஆரம்பமான நாளைத்தான் திரேதாதி என்று சொல்வார்கள். இறைவனைப் பற்றிய சில நிகழ்வுகள் நடந்த நாள்தான் அட்சய திருதியை என்று சில புராணங்கள் சொல்கின்றன. பரசுராமன் அவதரித்ததும் அட்சய திருதியை நாளில்தான்.

பொதுவாக வைகாசி மாத வளர்பிறை மூன்றாம் திதியில் வருகிற திருதியைதான் அட்சய திருதியை திருநாள். இன்று நடுப்பகலில் திருதியை திதி இருந்தாக வேண்டும். இந்த நாளில் சுவாதி நட்சத்திரம் இணைந்துவிட்டால் அந்த நாள் நன்மை பயக்கக்கூடியது அல்ல. அதனால் சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திருதியையே அட்சய திருதியையாகக் கொண்டாடுகிறார்கள்.

நிறைவான திருதியை

சயம் என்றால் தேய்ந்துவிடுதல் என்று பொருள். அட்சயம் என்றால் வளர்ச்சி அடைதல் என்று பொருள். ‘திருதியை திதியில் செய்யக்கூடிய காரியம் விருத்தி’ என்று பழமொழியுண்டு. இது வளர்பிறை திதியாக இருத்தல் வேண்டும். மூன்றாம் பிறை தேய்கின்ற நாளான வளர்பிறை திருதியை நாளில் எந்தக் காரியம் செய்தாலும் அது வளர்ச்சியடையும் என்று உத்திரகாலாமிருதம் சொல்கிறது. மூன்றாம் பிறை பார்த்துவிட்டு அம்மனைத் தொழுதால் எந்தக் காரியமும் வெற்றியடையும் என்பது பெரியவர்கள் கருத்து.

திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் எருவைத் தூவி மூன்றாம் பிறையை வழிபடும் வழக்கம் இருந்ததை ஆசாரக்கோவை சொல்கிறது. சிலப்பதிகாரத்தில் கோவலன் - மாதவிக்குப் பிறந்த மணிமேகலைக்குக் கிடைத்த அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் என்ற வார்த்தையும் அட்சய திருதியை நாளை நினைவுபடுத்துகிறது.

அட்சய திருதியைக்குச் சில விதிமுறைகள் உண்டு. உதய காலத்தில் திருதியை திதி இருந்தாக வேண்டும். பகல் பொழுதில் 1.12 முதல் 3.36 வரை திருதியை திதி இருந்தாக வேண்டும். இந்தக் காலத்தில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணங்கள் செய்ய வேண்டும். இந்த நன்னாளில் சுவாதி நட்சத்திரம் இணைந்துவிட்டால் வைணவ முறையில் நரசிம்ம ஜெயந்தி கொண்டாட வேண்டும் என்று பஞ்சாங்க விதிகள் சொல்கின்றன.

நல்லன எல்லாம் தரும் நாள்

அட்சய திருதியையன்று செய்யக்குடிய சுபகாரியங்கள் அனைத்தும் மென்மேலும் வளர்ச்சியடையும். தகுதியான நபர்களுக்கு தான, தர்மம் செய்ய வேண்டும் என்பது நம்பிக்கை. பசுமாட்டுக்குக் கைப்பிடி அளவு புல், வாழைப்பழம் கொடுப்பது மகாலட்சுமியின் திருவருளைப் பெற வழி வகுக்கும். வற்றாத கடலில் இருந்து பெறப்படுகிற, எப்போதும் வீட்டில் இருப்பு வைத்திருக்கக்கூடிய உப்பைத் தானம் செய்வது எல்லோராலும் சாத்தியப்படக்கூடியது அல்ல. காரணம் உப்பை யாரும் தானமாகத் தர விரும்ப மாட்டார்கள். அதனால் உப்பு பயன்படுத்தப்பட்ட உணவை தானமாகக் கொடுத்துவிட்டு, லஷ்மி பூஜை செய்ய வேண்டும். ஏழையாகப் பிறந்த குசேலன், தன் நண்பன் கிருஷ்ணபரமாத்மாவைக் கண்டு செல்வம் பெற்றது இந்த நாளில்தான். பாஞ்சாலி துகிலுரியப்படும் நேரத்தில், குறையாத புடவையைக் கொடுத்து அவள் மானம் காத்தது இதே நாளில்தான். இன்றைய தினத்தில் கிருஷ்ணபரமாத்மாவுக்கு அவல் படைத்து பூஜை செய்தால் அஷ்டலஷ்மி கடாட்சம் கிடைக்கும்.

ரிஷிகள் போற்றும் அட்சயம்

வடநாட்டில் இந்த நாள் அகதீஜ் என்று கொண்டாடாப்படுகிறது. மங்களனாகிய சிவனை வணங்கினால் பெரும் பாக்கியத்தைப் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. இன்றைய தினம் மேற்கொள்ளப்படக்கூடிய தவம், பூஜை, ஹோமம், தானம், பித்ரு பூஜை, தர்ப்பணம், தீர்த்த ஸ்நானம் ஆகியவை குறைவற்ற பலனைக் கொடுக்கும். அக்னியில் ஆகிருதி செய்யப்பட்ட பொருட்களும் தானம் செய்த பொருட்களும் குறைவதே இல்லை. இந்த நாளைத்தான் ரிஷிகள் ‘அட்சய’ என்று போற்றினார்கள். இன்று தேவர்களுக்காகவும் பித்ருக்களுக்காகவும் தானம் செய்யப் பட்டவை மென்மேலும் பெருகும்.

என்ன தானத்துக்கு என்ன பலன்?

ஆடைகள், பழங்கள் - சிறப்பான வாழ்க்கை

அன்னதானம் - உணவுக்குப் பஞ்சமிருக்காது

நீர்மோர், பானகம் - குழந்தைகள் கல்வியில் உயிர்நிலை பெறுவர்

அரிசி, கோதுமை போன்ற உணவு தானியங்கள் - அகால மரணங்கள் ஏற்படுவதில் இருந்து நிவர்த்தி

தயிர் சாதம் - பாவங்கள் ஒழியும்

இந்தப் புனித நாளில்தான் பிரம்ம தேவன் பூமியைப் படைத்தான் என்று பதினெண் புராணங்களும் பேசுகின்றன. இந்த நாளில் புதிதாகத் தொழில் தொடங்க ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். வேலை தேடுகிறவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். கூட்டுத் தொழிலுக்கும் ஒப்பந்தம் செய்யலாம். திருணத்துக்கு வரன் பார்க்கத் தொடங்கலாம். கல்வி தவிர பிற கலைகளில் குழந்தைகள் மிளிர்வதற்காக வாய்ப்பாட்டு, வீணை போன்ற வகுப்புகளில் சேர்க்கலாம். வீட்டுக்குத் தேவையான பொருட்களைக் கவனித்து வாங்கலாம். ஏழைகளுக்குத் தானம் செய்வதால் எதிர்காலம் செழுமையாக இருக்கும், வசதியான வாழ்க்கை கிட்டும்.

அம்பிகையின் அருள்

ஒவ்வொரு மூன்றாம் பிறையின் போதும் அம்பிகை காட்சி கொடுத்து எல்லோருக்கும் அருள்புரிவதாகச் சித்தர்களும், யோகிகளும் சொல்கிறார்கள். அன்று சித்தர்கள் வானத்தில் வலம் வருவதாகவும் சொல்கிறர்கள். அதனால்தான் அந்தக் காலத்தில் மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்வது சிறந்தது என்று சொன்னார்கள். அன்று எதை வாங்கினாலும் செல்வம் பெருகும்.

ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது?

ராஜ கிரகங்களான சூரியனும் சந்திரனும் உச்சம் பெறும் காலம் சித்திரை மாதம். அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை நாள்தான் அட்சய திருதியை எனப்படுகிறது. அமாவாசையன்று மேஷ ராசியில் உச்சம் பெறும் சூரியனுடன் சேரும் சந்திரன், மூன்றாவது நாளில் அதாவது திருதியையன்று ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகும்போது அங்கும் உச்சம் பெறுகிறார். இங்கு சந்திரனுக்கு வீடு கொடுத்த சுக்கிரனும் இணைந்து பலம் பெறும் அமைப்பு, திருதியை நாளில்தான் நடக்கிறது. தங்கத்தின் காரகன் குரு என்றாலும் அது ஆபரணமாக மாறும்போது சுக்கிரனைக் குறிக்கும்.

ஒரு விஷயத்தை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். ஆபரணம் என்று சொல்லும்போது தங்கத்தைத்தான் வாங்க வேண்டும் என்று இல்லை. முந்தைய காலத்தில் வெண்கலம்கூட விலை அதிகமாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாகத்தான் பொதுமக்கள் தங்கம் வாங்க முயற்சி மேற்கொள்கிறார்கள். இந்த நாளில் தானம் செய்து, தனவளங்களையும் பெறலாம் என்பது ஜோதிட சாஸ்திரம் கூறும் நிதர்சனமான உண்மை.

பகவானின் பசி தீர்த்த நாள்

(அட்சய திருதியை, மே-2)

அட்சய திருதியை நாளன்று பலன் கிடைக்கும் என்பதற்கு ஒரு உதாரண கதையும் உண்டு. பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் போனபோது அவர்களுக்கு சூரிய பகவான் ஒரு அட்சய பாத்திரத்தைக் கொடுத்தார் என்று மகாபாரதம் சொல்கிறது. அள்ள அள்ள உணவைக் கொடுக்கும் இந்தப் பாத்திரத்துக்கு அமுத சுரபி என்ற பெயரும் உண்டு. இந்தப் பாத்திரத்தை திரௌபதி ஒரு நாளுக்கு ஒரு முறைதான் பயன்படுத்த வேண்டும் என்பது விதி. முடிந்ததும் கழுவி, கவிழ்த்துவிடுவார். ஒருநாள் மதியம் கிருஷ்ண பரமாத்மா பசியால் வருகிறார். பாத்திரத்தைக் கழுவி, கவிழ்த்துவிட்ட திரௌபதிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மகாவிஷ்ணுவைப் பிரார்த்தனை செய்து கொண்டு கழுவிய பாத்திரத்தை எடுத்துப் பார்க்கிறார். ஒரே ஒரு கீரைத்துண்டு மட்டும் அதில் இருக்கிறது. அதையும் பக்தியுடன் இலையில் வைத்துப் பரிமாறுகிறார். கிருஷ்ணபரமாத்மாவுக்கு வயிறு நிறைகிறது. இதன் மூலம் அட்சய திருதியை நாளில் இறைவனுக்குச் செய்யப்படுகிற நிவேதனம், பூஜை ஆகியவை வளத்தையும் நலத்தையும் தரும் என்று மகாபாரதம் சொல்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

6 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்