மவுனத்தால் பேசிய மகான்

By வா.ரவிக்குமார்

நான் யார்?

- இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடும் உள்ளொளிப் பயணத்தில் திருச்சுழியைச் சேர்ந்த வேங்கடராமன் என்னும் இளைஞன் சென்றடைந்த இடமே திருவண்ணாமலை. 17 வயதில் வேங்கடராமனுக்கு ஒரு மரண அனுபவம் ஏற்படுகிறது. மரணம் உடலுக்கு மட்டுமே. ஆன்மாவுக்கு அல்ல என உணர்ந்தார். எண்ணற்ற சித்தர்களின் யோக பூமியான திருவண்ணாமலையை அடைந்ததும், `இந்தக் கட்டைக்கு எதுக்கு இத்தனை உடை?’ என்று ஆடையின் தேவையைக் குறைத்துக்கொள்கிறார். பல இடங்களிலும் மாறி மாறித் தன்னுடைய யோகத்தைத் தொடர்கிறார் வேங்கடராமன். சீடர்களால் ரமணர் என அழைக்கப்படுகிறார்.

பாறை இடுக்குகள், குகைகள் எனப் பல இடங்களில் பல நாட்கள் நீண்ட தவத்துக்குப் பின், கிரி வலம் வருகிறார். பெரும்பாலான நாட்களில் மவுனமாகவே இருக்கும் இயல்புடையவரான இவரை, மவுன குரு என்றே பலரும் ஆரம்பத்தில் அழைத்தனர். இவரின் மவுனத்தைக் கலைத்ததும் திருவண்ணாமலையின் பிரம்மாண்டம்தான்.

“அருணாசலத்தைப் பாராய் சும்மாயிருக்குதே – அதுபோல்

மனம் சும்மா இருக்க ஏங்குதே”

நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரிடமிருந்து எழுகிறது இப்படியான ஒரு வாக்கியம்.

சீடர் வழங்கிய பெயர்

காவ்ய கண்ட கணபதி மாபெரும் பண்டிதராக விளங்கியவர். பல மொழிகள் தெரிந்தவர். இப்படிப்பட்டவருக்கு மனதில் தவத்தைக் குறித்த சஞ்சலம் இருந்தது. அவர் மவுன குரு வேங்கடராமனைச் சரணடைந்தார். நான் யார்? என்ற கேள்வி பிறக்கும் இடத்தைத் தேடு அதுதான் தவம்” என்கிறார். மனத் தடை நீங்கிய காவ்ய கண்ட கணபதி மவுன குருவின் சீடராகிறார். இவர்தான் தனது குருவான வேங்கடராமனை, முதன்முதலாக `ரமண மகரிஷி’ என்று அழைக்கிறார்.

மவுனத்தால் பேசிய மகான்

காஞ்சிபுரத்தில் வாழ்ந்த மகா பெரியவருக்கும் திருவண்ணாமலையில் வாழ்ந்த ரமணருக்கும் உள்ளுணர்வுத் தொடர்பு இருந்ததைப் பலரும் வியந்து பேசுகின்றனர். ஒருசமயம் மகா பெரியவர், திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து கொண்டிருக்கிறார். ரமணரின் சீடர்கள், மகா பெரியவர் செல்லும் வழியில் எதிர்ப்படுகின்றனர். மகா பெரியவரிடம் தாங்கள் ரமணரின் சீடர்கள் என அறிமுகப்படுத்திக்கொண்டு, குறிப்பிட்ட ஒரு குகையில் ரமணர் தங்கியிருப்பதாகக் கூறுகின்றனர்.

மவுனமாக அவர்கள் கூறியதைக் கேட்டுக்கொண்ட மகா பெரியவர், ரமணரின் சீடர்களுக்கு ஆசி வழங்குகிறார். ஆனாலும் `‘தங்களின் குருவைப் பற்றி மகா பெரியவர் ஏதும் விசாரிக்கவில்லையே…’’ என்று ரமணரின் சீடர்களுக்கு ஒரு நெருடல். தங்களின் இந்த மன வருத்தத்தை ரமணரிடமும் தெரிவித்துள்ளனர்.

அதற்கு ரமணர், “நாங்க எப்பவும் பேசிக் கிட்டுத்தான் இருக்கோம். இப்பவும் எங்களோட சம்பாஷணைய தொடர்ந்துட்டுத்தான் இருக்கோம்..” என்றாராம். சந்தோஷத்தில் மனம் நிறைந்தார்களாம் ரமணரின் சீடர்கள்.

மேற்கிலிருந்து இந்தியாவை நுனிப்புல்லாக மேய்ந்துவிட்டுப் போய் சிலர், `இந்தியா ஒரு பாம்பாட்டிகளின் நாடு’ என்னும் கருத்தைப் பலமாகப் பரப்பியிருந்த காலமது. லண்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற ஒரு பத்திரிகையின் பத்திரிகையாளர் பால் பிரன்டன் இந்து மதம் சார்பாக நிறைய கேள்விகளுக்குத் தெளிவான பதில்களைப் பெறவேண்டி மகா பெரியவரைச் சந்தித்தார்.

மகா பெரியவரிடம் தன்னுடைய நோக்கத்தைக் கூறினார். அதற்குப் பெரியவர், நான் கர்ம மார்க்கத்தில் ஈடுபட்டிருக்கிறேன். திருவண்ணாமலையில் ஞான மார்க்கத்தில் ஈடுபட்டிருக்கும் ரமணரிடம் உன்னுடைய சந்தேகங்களைக் கேள் என்று சொல்கிறார்.

மனதில் எண்ணிலங்கா கேள்விகளுடன் ரமணரைப் பார்க்க திருவண்ணாமலை செல்கிறார் பால் பிரன்டன். ரமணரின் சீடர்களிடம் தான் வந்த நோக்கத்தைக் கூறுகிறார். யோகத்தில் அமர்ந்திருக்கும் ரமணரின் முன்னால் அமர்கிறார் பால் பிரன்டன். கண் திறந்து அவரைப் பார்க்கிறார் ரமணர். நேரம் செல்லச் செல்ல, பால் பிரன்டனின் கண்களில் இருந்து தாரை தாரையாக நீர் பெருகுகிறது. மனதில் ஏகப்பட்ட கேள்விகளுடன் வந்தவர் எந்தக் கேள்வியையும் ரமணரிடம் கேட்கவில்லை. எல்லாக் கேள்விகளுக்கும் எனக்குப் பதில் கிடைத்துவிட்டது என்று அந்த இடத்தை விட்டுச் செல்கிறார் பால் பிரன்டன். பின்னாளில் இவர் ரமணரைச் சந்தித்த அனுபவத்தைப் புத்தகமாகவே எழுதியிருக்கிறார்.

எல்லாருக்கும் அருளும் மனம்

பாம்பு, குரங்கு, பசு எல்லாவற்றுக்கும் பெயர் வைத்து மகிழ்வார். காலை எழுந்ததும் சிறிது நேரம் ஆசிரமத்துக்கு வெளியே திருவண்ணாமலை ஊரை நோக்கியிருக்கும் பெரிய பாறையில் அமர்ந்துவிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார் ரமணர். எதற்காக இப்படி உட்காருகிறார் என்று சீடர்களுக்குப் புரியவில்லை. ஒரு சமயம் கனமழை பெய்து கொண்டிருந்தபோதும் அப்படி உட்கார்ந்துகொண்டிருந்தாராம். பொறுமை இழந்த சீடர்கள் அவரிடம் மழை பெய்யும் நாளிலாவது இப்படி உட்காருவதைத் தவிர்க்கலாமே என்றார்களாம்.

அப்போது ரமணர், “அதோ அடிவாரத்தில் சௌபாக்கியத்தம்மாள் என்னும் முதிய பெண்மணி இருக்கிறார். தினமும் என்னைப் பார்த்துவிட்டுத்தான் செல்வார். ஒருநாள் வரவில்லை. மறு நாள் வந்தவரிடம் ஏன் நேற்று வரவில்லை என்று கேட்டேன். வயசாயிடுச்சு சாமி மேலேறி வரமுடியல. ஆனா உங்களை தரிசிச்சுட்டுதான் தினமும் சாப்பிடறது பழக்கம். அதனால காலைல நீங்க பாறையில உக்காந்திருந்தப்ப பார்த்திட்டு சாப்பிட்டேன் என்றார். வயசான அந்தப் பெண்மணிய கஷ்டப்படுத்தக் கூடாதேன்னுதான் தினமும் நான் இந்தப் பாறையில உட்கார்ந்திடறேன்” என்றாராம்.

இப்படிப்பட்ட மகான் தன்னுடைய உடலை விட்டுப் பிரியும் நாள் வந்தது. அவரின் சீடர்களோ வாடினர். எங்களை வழிநடத்த நீங்கள் தேவை என்றனர். அதற்கு பகவான் சொன்னாராம்: “நான் எங்கே செல்லப் போகிறேன். இங்கேயேதான் எப்போதும் இருப்பேன்!”

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

6 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்