ஜபத்தின் மகிமையை நன்றாக அறிந்தவர் வசிஷ்டர். ஸ்ரீராமாயணத்தில் 'வசிஷ்டம் ஜபதாம் வரம்' என்று ஜபம் செய்கிறவர்களில் சிரேஷ்டர் அவர்தாம் என்று சொல்லியிருக்கிறது.
மகாபாரதத்தில் ஜபம் செய்கிறவர்களின் கதி என்ன என்று யுதிஷ்டிரர் கேட்க, பீஷ்மர் சொல்கிறார், ஆசமனம், பிராணாயாமம், அங்கந்யாசம் முதலிய அங்கங்களின்றி ஜபம் செய்கிறவன், சிரத்தையில்லாமலும் சந்தோஷமில்லாமலும் ஜபிக்கிறவன், அகங்காரமுடையவன் இவர்கள் நரகம் செல்வர்.
எந்த விஷயத்தில் அவனுக்கு ஆசை விழுகிறதோ அதில் பிறப்பான். சஞ்சல புத்தியுடன் செய்பவன் சஞ்சல கதியடைவான். காமகாமியாக இருந்து பிரணவத்தை ஜபம் செய்தவனும் நரகத்துக்கே போவான் என்கிறார்.
இவரிடம், ''நரகம் என்றால் என்ன?'' என்ற கேள்விக்குப் பதில் சொல்கிறார், தேவர்களுடைய ஸ்தானங்கள், திவ்ய விமானங்கள், தேவ சபைகள், தேவலோகத்திய உத்தியானங்கள், விளையாட்டுப் பூமிகள், தாமரையோடைகள், இந்திரன், பிருகஸ்பதி, மருத், விச்வதேவர், சாத்யர், வசு, ருத்ர, ஆதித்யர் இவர்களுடைய லோகமும் நரகம்தான் என்றார்.
சாஸ்திரப்படி ஜபம் செய்பவனுக்கு மோக்ஷமும், விதிக்கு மாறுபாடாகவோ, பல காமனையாலோ ஜபம் செய்பவனுக்குத் தேவாதிலோகப் பிராப்தியும் கிடைக்கும் என்று ஏற்பட்டது. பின் யுதிஷ்டிரர், காலம், யமன், மிருத்யு இவர்களுடைய ஜப விஷயமான சம்வாதத்தைக் கேட்க, பீஷ்மர் சொல்கிறார், இஷ்வாகு, பிராம்மணன், காலம், யமன் இவர்களின் வரலாற்றைச் சொல்கிறேன் கேள்.
ஒரு காலத்தில் வேத வேதாந்தங்களை அறிந்த மகாபுத்திமானான ஒரு பிராம்மணன் இருந்தான். அவன் தவம் புரிந்துகொண்டு ஆயிரம் வருஷங்கள் வேதமாதாவான காயத்திரீயை ஜபம் செய்தான். கடைசியில் காயத்திரீதேவி அவனுக்குப் பிரத்யட்ஷமானாள்.
அவனோ ஜபத்தையே செய்துகொண்டு தேவியிடம் ஒன்றும் பேசவில்லை. தேவி அவனிடம் கருணை கொண்டாள். அவன் ஜபத்தை முடித்துக்கொண்டு தேவியின் காலில் விழுந்து, ''எனது பாக்கியத்தால் பிரசாதத்தை அடைந்தாய். எனக்கு எப்பொழுதும் ஜபத்தில் மனம் ரமிக்கும்படி அநுக்கிரகிக்க வேண்டும்'' என்றான்.
தேவி, ''பிரம்ம ரிஷே! உனக்கு வேண்டிய வரத்தைக் கேட்டுக்கொள்'' என்றாள். பிராம்மணன், ''எனக்கு ஜபத்தில் ஆசை வளரட்டும். மனம் எப்போதும் சமாதியில் லயிக்கட்டும்'' என்று வேண்டினான். ''அப்படியே ஆகட்டும். ஒருபோதும் நரகம் அடைய மாட்டாய். பிரம்மாவின் ஸ்நானத்தையே அடைவாய். காலம், மிருத்யு, யமன் இவர்களுடன் உனக்கு வாதம் ஏற்படும்'' என்று உரைத்துத் தேவி மறைந்தாள்.
பிராம்மணன் காம குரோதாதிகளை ஜெயித்து சத்யசந்தனாக மறுபடியும் நூறு வருஷம் தவம் செய்தான். அதன் பிறகு தர்மதேவதை நேராகத் தோன்றி, ''பிரம்மணா, நான் தர்மதேவதை. இந்த ஜபத்தின் பயனாக சத்ய லோகத்தை சம்பாதித்திருக்கிறாய். உடனே பிராணனை விட்டு சரீரத்தையும் விட்டு அந்த லோகங்களை அடைவாயாக'' என்றது.
பிராம்மணனோ தர்மமே, எனக்கு லோகம் எதற்கு? துக்க சுக சம்பந்தமுள்ள தேகத்தை மறுபடியும் அடைய மாட்டேன். நேராக மோட்சம் போவேன். நீ செல்வாயாக. தர்மம், அவசியமாகச் சரீரத்தை விட வேண்டும். ஆகவே சுவர்க்கத்துக்குப் போ என்றது. பிராம்மணன், தேகமில்லாமல் சுவர்க்கத்தையும் நான் இச்சிக்கவில்லை. ஆதலால் எனக்கு சுவர்க்கம் வேண்டாம்.
தர்மம், தேகத்தில் ஆசையை விடு. தேகத்தை விட்டு, ரஜஸ் இல்லாத லோகத்துக்குச் செல் என்றது. பிராம்மணன், ஜபத்தில் ரமிக்கிறேன். அந்த சநாதன உலகங்கள் எனக்கு வேண்டாம். சரீரத்துடன் சுவர்க்கம் போனால் போவேன். இல்லையேல் வேண்டாம். தர்மம், உனக்கு சரீரத்தை விட இஷ்டமில்லாவிட்டால் இதோ காலன், மிருத்யு, யமன் மூவரும் உன்னிடம் வருகிறார்கள் என்று சொல்லி மறைந்தது.
அப்படியே ஆயுளை நிர்ணயிக்கும் காலதேவதையும் பிராணனைக் கொண்டு போகும் மிருத்யுவும் புண்ய பாபங்களுக்குப் பலனைக் கொடுக்கும் யமதேவதையும் அவனிடம் வந்தனர். நீ செய்கிற நல்ல தவத்திற்குப் பலன் கிடைத்திருக்கிறது. நான் யமன். உனக்கு சுவர்க்கம் ஏற இதுவே காலம். நான் மிருத்யு. காலத்தால் ஏவப்பட்டு உன்னை அழைத்துப் போக வந்திருக்கிறேன். பிரம்மணன் அவர்களுக்கு சுவாகதம் உரைத்து அர்க்கியம், பாத்தியம், ஆசமனீயம் இவற்றை அளித்தான். அப்பொழுது தீர்த்த யாத்திரை செய்துகொண்டிருந்த இஷ்வாகு என்ற அரசனும் அவ்விடம் வந்தான்.
பிராம்மணன் இஷ்வாகுவையும் பூஜித்து, ''அரசரே, நான் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?'' என்றான். அரசனோ, ''நான் அரசன். நீர் பிராம்மணர். உமக்குப் பணம் வேண்டியதைக் கொடுக்கிறேன்'' என்றான். பிராம்மணன் தான் நிவிருத்தி மார்க்கத்தில் இருப்பதால் பணம் வேண்டாமென்றும், தன் தவத்தால் அரசனுக்கு வேண்டியதை அளிப்பதாகவும் கூறினான். அரசன், ''நான் யாசிப்பதில்லை. ஆனால், நீங்கள் பிரதிக்ஞை செய்வதால் தங்களுடைய ஜப பலனைக் கொடுங்கள்'' என்றான். பிராம்மணன் அப்படியே தான் செய்த ஜப பலத்தை அவனிடம் அர்ப்பணம் செய்தான்.
அரசன், ''உன் ஜபத்திற்குப் பலன் என்னவென்று தெரியாதபடியால் அதைச் சொல்'' என்று வினவ, பிராம்மணன், ''நான் ஜபத்திற்குப் பலனை உத்தேசிக்கவில்லை. ஆனால் எனக்குத் தெரியாது. நீர் பலனைக் கேட்டபடியால் கொடுத்துவிட்டேன். அசத்தியம் மிகவும் கொடியது. சத்தியம் தவங்களைக் காட்டிலும் பெரிய தவம். ஆதலால் நான் தவற மாட்டேன்'' என்றான்.
ராஜா, ''அறிவதும் உலகை ரக்ஷிப்பதும் எங்கள் தர்மம், க்ஷத்திரியர்கள் கொடையாளிகள். வாங்குபவரல்ல'' என்றான்.
பிராம்மணன் ''அரசே, நான் தங்கள் வீடு தேடிவந்து 'வாங்கிக்கொள்ளுங்கள்' என்று நிர்பந்திக்கவில்லை. நீர் இவ்விடம் வந்து கேட்ட பின் கொடுத்தேன். நீங்கள் வேண்டாமென்பது எங்ஙனம்?'' என்றான்.
இந்தத் தருணத்தில் தர்ம தேவதை, ''நீங்கள் இருவரும் விவாதம் செய்கிறீர்கள். பிராம்மணனுக்குத் தான பலனும், ராஜனுக்கு சத்திய பலனும் கிடைக்கட்டும்'' என்றது. இவ்விதம் பிராம்மணன் நிர்பந்திக்க, ராஜன் அதை நிராகரித்துத் தன் புண்ணியத்தைக் கொடுப்பதாகப் பிரதிக்ஞை செய்ய, அரசனுடைய கோபமும் பிராம்மணனுடைய கோபமும் உருவம் கொண்டு, விரூபன் என்றும் விகிருதன் என்றும் பெயருடன் தோன்றி விவாதம் செய்தன.
ஒருவன், ''நான் உனக்குக் கொடுக்க வேண்டிய பசுவைக் கொடுக்கிறேன் எடுத்துக்கொள்'' என்கிறான். மற்றவன், '' நீ கொடுக்க வேண்டாம்'' என்கிறான். இந்த உதாரணத்தால், கடனாளி கொடுக்க வேண்டிய கடனைக் கொடுத்தால் பெற்றுக்கொள்வது அவசியம் என்று ஏற்பட்டது.
ஆகவே ராஜன் பிராம்மணன் கொடுத்த புண்ய தானத்தைக் துக்கத்துடன் பெற்றுக்கொண்டான். பின்னர் அவனிடமே எல்லாவற்றையும் திருப்பி அளித்தான். இருவரும் சமமாகவே பிரம்ம லோகம் சென்றனர். ஆகவே ஜபத்தின் முடிவான பலன் மோட்ஷமே என்று பீஷ்மர் தர்மபுத்திரருக்கு உரைத்தார்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
12 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago