தீர்க்காயுசு என்ற முழுமையான வாழ்வுச் சுற்றான 120 ஆண்டுகள் வாழ்ந்தவர் ஸ்ரீராமானுஜர். ஸ்ரீரங்கம் திருக்கோயிலுக்குள் இன்றும் காட்சி அளிப்பவர். விசிஷ்டாத்துவைதத்தைப் பிரபலப்படுத்தியவர். பிரம்ம சூத்திரத்துக்கு ஸ்ரீபாஷ்யம் என்ற உரையை எழுதியவர். சீர்திருத்தவாதியான இராமானுஜரின் காலம் 1017- 1137. இவரது வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.
பிறப்பும் வளர்ப்பும்
ஸ்ரீபெரும்புதூர் என்ற திருத்தலத்தில் அனந்தன் அம்சமாகப் பிறந்தவர் ராமானுஜர். சர்வக்ரது ஆசூரி கேசவ சோமயாஜிக்கும் காந்திமதிக்கும் மகனாகப் பிறந்தவர். பின்னாளில் மதப் புரட்சி செய்த ராமானுஜர் பிறந்த ஆண்டு 1017. கடக லக்னத்தில் பிறந்த அவர் சாதித்த நிர்வாகச் சீர்திருத்த முறைகள் இன்றும் ஸ்ரீரங்கம் கோயிலில் நடைமுறையில் உள்ளன. இவருடைய தந்தையே இவருக்கு ஆரம்ப கால குருவாக இருந்தார். அவரது காலம் முடிந்த பின் வேறு ஒரு குருவை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது ராமானுஜருக்கு.
அந்தக் குருவின் பெயர் யாதவப் பிரகாசர். குருவிடம் பாடம் கற்கச் சென்ற ராமானுஜர், தனது அறிவின் விலாசத்தால் குருவை விஞ்சும் சீடரானார். இதனால் குருவின் மனதில் வன்மம் ஓங்கியது. ராமானுஜரைக் கொலை செய்யத் திட்டமிட்டார். காசிக்கு அழைத்துச் சென்று கங்கை நீரில் தள்ளிக் கொலை செய்ய நினைத்தார். அதனால் ராமானுஜர், அவரது உறவினர் கோவிந்தன் உட்பட தனது சீடர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு காசிக்குப் புறப்பட்டார் யாதவப் பிரகாசர். ராமானுஜரைத் தவிர அனைத்துச் சீடர்களுக்கும் குருவின் இந்தக் கயமை எண்ணம் தெரிந்திருந்தது.
ராமானுஜரின் உறவினர் கோவிந்தன் உட்பட.
உயிர் தப்பித்தல்
கோவிந்தனின் மனம் பரிதவித்தது. எப்படியாவது ராமானுஜரைக் காக்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் யாதவப் பிரகாசரின் உத்திரவுப்படி மற்ற சீடர்கள் கோவிந்தனையும் ராமானுஜரையும் ஒன்றாக இருந்துவிடாமல் பார்த்துக்கொண்டனர்.
ஒரு நாள் இரவு, இந்த மனச் சஞ்சலத்தால் தூங்க இயலாமல் படுத்திருந்த கோவிந்தன், ராமானுஜரை எழுப்பி அருகில் இருந்த காட்டுக்கு அழைத்துச் சென்றார். குருவின் கொடிய எண்ணத்தை ராமானுஜரிடம் கூறினார். இப்படியே காட்டின் மறுபுறமாகச் சென்று தப்பிவிடுமாறு கேட்டுக்கொண்டார்.
அப்போது வேடுவன் வேட்டுவச்சியாக வந்த பெருமாளும் தாயாருமே அவருக்குக் காஞ்சிக்குச் செல்ல வழிகாட்டியதாகக் கூறுவார்கள். ராமானுஜர் பிழைத்தார்.
நிர்வாகச் சிறப்பு
ராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் இருந்த காலகட்டத்தில், அதன் நிர்வாகத்தைச் சீர்மைப்படுத்தினார். நேரம் காலம் தவறாமல் பூஜைகள் நடைபெற, பூஜா காலங்களை முறைப்படுத்தினார். பல குழுக்களை அமைத்து அதற்குத் தமது சீடர்களையே தலைவர்களாக அமர்த்தினார். இந்தக் கட்டுதிட்டங்களை விரும்பாத சிலர், ராமானுஜரை ஒழிக்கத் திட்டமிட்டனர்.
ராமானுஜர் பிச்சை எடுத்து உண்ணும் வழக்கம் கொண்டவர். நாளொன்றுக்கு ஏழு இல்லங்களில் மட்டுமே பிச்சை எடுப்பார். இவரை விரும்பாத சிலர் அவருடைய அன்னத்தில் விஷம் கலக்க முடிவு செய்தனர். அதனால் இவர் தினமும் செல்லும் ஒரு இல்லத்தின் பெண்மணியை மிரட்டி விஷம் கலந்த அன்னத்தை அளிக்கும்படிச் செய்தனர். மிரட்டலுக்குப் பயந்து விஷம் கலந்த அந்தப் பெண்மணி ராமானுஜரை எப்படியாவது காப்பாற்ற விரும்பினார். அன்னத்தில் விஷம் இருப்பதைத் ராமானுஜருக்குத் தெரிவிக்க உத்தி ஒன்றைக் கையாண்டார். ராமானுஜருக்குப் பிச்சை அளித்து விட்டு, என்றுமில்லாத வழக்கமாக அவரை நமஸ்கரித்து அழுதுகொண்டே உள்ளே சென்றுவிட்டார் அப்பெண்மணி. இதனை கவனித்த ராமானுஜர், ஆபத்தை உணர்ந்து இந்தச் சூதிலிருந்து தப்பினார்.
பொதுநலனே பிரதானம்
மனிதர் அனைவரும் சமம் என்ற சமத்துவக் கொள்கை கொண்டவர் ராமானுஜர். இவர் யமுனாசாரியாரின் சீடரான திருக்கோட்டியூர் நம்பியிடம் திருவெட்டெழுத்து மந்திரத்தைக் கற்க விரும்பினார். அவரும் நிபந்தனையின்பேரில் கற்றுக் கொடுக்க முன் வந்தார். எவரிடமும் இம்மந்திரத்தை வெளியிட்டுவிடக் கூடாது என்பதே அந்த நிபந்தனை. அதை ஏற்றுக்கொண்ட அவர், உபதேசமும் பெற்றார். உபதேசம் பெற்ற உடன் திருகோட்டியூர் கோயில் கோபுரத்தின் மீதேறி அந்தத் திருமந்திரத்தை அனைவரும் கேட்கும் வண்ணம் உரக்கக் கூறி ஊருக்கே உபதேசம் செய்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த திருக்கோட்டியூர் நம்பி கோபமடைந்தார். ராமானுஜரை அழைத்து குரு வாக்கை மீறியதால் நரகம் புக நேரிடும் என்று கூறினார். அனைவரும் முக்தி அடைவார்கள் என்றால் தான் ஒருவன் மட்டும் நரகம் செல்வதைப் பற்றிக் கவலை இல்லை. மேலும் அது தன் பாக்கியம் என்றார் ராமானுஜர்.
இதனைக் கேட்ட திருக்கோட்டியூர் நம்பி ஆனந்தப் பரவசமடைந்தார். கருணாமூர்த்தியான அரங்கனின் கருணையைவிட இது உயர்ந்தது என்று எண்ணினார். பின்னர் ராமானுஜரை எம்பெருமானார் என்று கூறி ஆரத் தழுவிக்கொண்டார்.
ஆண்டாளுக்கு அண்ணன்
ராமானுஜரை ஆண்டாளுக்கு அண்ணன் என்று சொல்லும் வழக்கம் இருக்கிறது. ஆண்டாள் ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். ராமானுஜரோ பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர் அன்பினால் ஆண்டாளுக்குத் தம்பியாகலாம்.
ஆனால், அண்ணன் ஆனது எப்படி?
ஆண்டாள் அரங்கனை மணந்தால் நூறு தடா (பாத்திரம்) அக்கார அடிசில் நிவேதனம் செய்வதாக மனமார வேண்டிக்கொண்டாள். ஸ்ரீரங்கம் சென்றவள் அரங்கனுடன் கலந்துவிட்டாள். அதனால் அவளுக்குத் தன் பிரார்த்தனையை நிறைவேற்ற அவகாசம் கிடைக்கவில்லை. இதனைத்தான் ராமானுஜர் பாண்டிய நாடு வந்தபோது நிறைவேற்றிவைத்தார்.
பின்னர் சில காலம் கழித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் வட பத்திரசாயி கோயிலுக்குச் சென்றார் ராமானுஜர். அப்போது கோயிலின் உள்ளே நுழைந்த அவரை, சிலாரூபமாக இருந்த ஆண்டாள் வாருங்கள் எம் அண்ணாவே என்று நேரிடையாக அழைத்தாகக் கூறுவர். அதனால் ராமானுஜர் ஆண்டாளுக்கு அண்ணன்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago