தெய்வத்தின் குரல்: வெள்ளரிப் பழ முக்தி

By செய்திப்பிரிவு

இந்திரஜாலமான இந்த த்வைத உலகம் அப்படியே வீழ்ச்சியடையும்படியான ப்ரௌடமான அநுபூதியில் உள்ளார் ஒரு மகான். ‘ப்ரௌடம்' என்றால் முற்றிக் கனிந்தது என்று அர்த்தம். ‘ப்ரௌட ப்ரௌடம்' முற்றிக் கனிந்து காம்பையும் விட்டு விட்டது.

ஆனாலும் இந்த இந்திரஜால த்வைத லோகத்திலிருந்து அவர் ‘இற்று விழுந்தார்' என்று சொல்வதுகூட அவ்வளவு சரியில்லை. அவருக்கு ஞானம் முற்றிக் கனிந்தவுடன் அவர் என்னமோ இற்றுப் போகிறது. விழுகிறது என்றெல்லாம்கூடப் பண்ணாமல் அவர் பாட்டுக்குத் தன்னுடைய அநுபூதி நிலையில்தான் சகஜமாக இருந்தார்.

மாயையை விட்டு ஞானி விலகுகிறானென்றில்லாமல் ஞானியை விட்டே மாயை விலகுகிறது என்ற இந்த விஷயம் த்ரயம்பக மந்திரத்திலும் சொல்லியிருக்கிறது.

‘பந்தத்திலிருந்து உர்வாருகம் மாதிரி விடுபடணும்' முக்கண்ணனான பரமேச்வரனைப் பிரார்த்திக்கும் மந்திரம் அது. பந்தம் என்பது சம்சார மாயை. அதுதான் த்வைத இந்திர ஜாலம். உர்வாருகம் என்பது வெள்ளரி.

வெள்ளரிப் பழம் மாதிரி விடுபட வேண்டும் என்றால் என்ன? சொல்கிறேன். அந்தப் பழம் முற்றிக் கனிந்த பிற்பாடும் மற்றப் பழங்கள் மரத்திலிருந்து விழுகிறாற்போல் விழுவதில்லை. என்ன காரணமென்றால் அது பழுப்பது, காய்ப்பது எல்லாமே மரத்தில் இல்லை கொடியில்தான்.

வெள்ளரி என்பது கொடியே தவிர செடியோ மரமோ இல்லை. அந்தக் கொடியையும் பந்தல் போட்டு படர விடும் வழக்கம் கிடையாது. முழுக்க பூ ஸ்பரிசம் இருந்தால்தான் அந்தக் கொடியின் வளர்ச்சிக்கு நல்லதென்பதால் நிலத்திலேயேதான் படரவிடுவது. அதனால் என்னவாகுமென்றால் ஒரு வெள்ளரிக்காய் நன்றாகக் கனிவதும் நிலமட்டத்தில்தான். உசரக்க ஒரு கிளையிலோ, பந்தலிலோ இல்லை. இப்படிப் பழம் முற்றிக் கனிந்தவுடன் காம்பு தானே இற்றுப் போய்விடும். ஆனாலும் பழம் இருந்த இடத்திலேயேதான் இருக்கும்.

ஏனென்றால் அதுதான் விழ முடியாமல் நில மட்டத்திலேயே இருக்கிறதே. கொடி பாட்டுக்கு படர்ந்து கொண்டே இருக்கும். அப்போது பழம் எந்த இலைப் பாகத்தோடும் காம்போடும் ஒட்டிக் கொண்டிருந்ததோ அவையும் அந்தண்டை நகர்ந்து போய்விடும். அதாவது காம்புதான் இதை விட்டு விலகிற்றே தவிர இது விலகுவது, விடுபடுவது என்ற காரியத்தைக் கூடப் பண்ணுவதில்லை.

இதே போலத்தான் ஞானி சம்சார பந்தத்திலிருந்து விடுபடுவதென்பது, அது ஒரு விருக்ஷம் மாதிரியும், இவன் அதில் முற்றிப் பழுத்து விழுவது மாதிரியும் இல்லை. ஞானத்தில் அவன் பழுத்த பழமான பின்னும் தான் பாட்டுக்கு இருந்தபடியேதான் இருப்பான். வெளியிலே காரியம் பண்ணினாலும் உள்ளே அசலமாக, சலனமேயில்லாமல் தான் இருப்பான். சம்சாரத்திலிருந்து விடுபட்டு அப்புறம் மோட்சம் என்று எங்கேயோ ஒரு லோகத்திற்குப் போவது என்ற காரியம் அவனுக்கில்லை.

த்வைதிகள் தான் அப்படி எங்கேயோ உள்ள ஒரு மோட்சத்திற்கு போவது. அத்வைத ஞானி இங்கேயே, இந்த லோகத்திலேயே, சரீரத்திலே இருப்பதாகத் தெரியும்போதே ஆத்ம சாட்சாத்காரம் பெற்றவன்.

அதுதான் விடுபட்ட நிலையான மோட்சம் என்பது. விடுபட்ட என்றாலும் இவன் ஒன்றும் விடுபடும் காரியம் பண்ணவில்லை. இவன் பண்ணியது ஆத்மாவே குறியாக விசாரம் செய்ததுதான்.

அதனால் சாட்சாத்காரம் வந்து, தான் ஆத்மாவே என்று தெரிந்து கொண்டு அதுவாகவே இருப்பான். அப்போது பந்தம், சம்சார மாயை என்பது அதுவே கத்தரித்துப் போய்விடும். த்வைதம் நகர்ந்து ஒடிப்போய்விடும். வெள்ளரிப்பழம் பூமியிலே இருப்பது போல இவனும் லோகத்தில் முந்தி எங்கே இருந்தானோ அங்கேயே ஜீவன் முக்தன் என்ற பெயரில் தொடர்ந்தும் இருந்து கொண்டிருப்பதாகத் தெரியும்.

ஆனாலும் லோகத்தில் தனி ஜீவ மனசின் வாழ்க்கை என்று வேரோடிப் படர்ந்திருந்த ஒரு கொடியோடு இவனுக்கு முந்தி இருந்த பிணைப்பு இப்போது கத்தரித்துப் போயிருக்கும். இவனாக விடுபடாமலே, இவனை விடுவித்துவிட்டு, அது ஒடிப் போயிருக்கும்.

இதுதான் வெள்ளரிப்பழ முக்தி.

தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

23 hours ago

ஆன்மிகம்

23 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்