இஸ்லாம் வாழ்வியல்: கடமை உள்ள இடத்தில் அறிவிருக்கும்

By இக்வான் அமீர்

நெருப்புக் கங்குகளைப் போல, சூரியன் வெப்பக் கதிர்களை வீசிக் கொண்டிருந்தான். அதனால், பாலைப் பெருவெளி அனலாய்த் தகித்தது. சிதறிய வர்ணம் போல ஆங்காங்கே பச்சையும், சாம்பலுமாய்ப் புற்களும், புதர்களும் முளைத்திருந்தன. மேய்ச்சலுக்கு அவற்றைத் தேடிச் சென்ற ஆடுகள் வெப்ப மிகுதியால் மேலோட்டமாக மேய்ந்தன. பிறகு அடுத்த புல்பரப்புக்கு அவசரம் அவசரமாக விரைந்தன.

ஆட்டு மந்தையை ஒரு சிறுவன் காவல் காத்துக்கொண்டிருந்தான். அவன் அமர்ந்திருந்த பாறையிலும் வெப்பம் கசிந்தது. அவனது பார்வை ஆட்டு மந்தையிலேயே லயித்திருந்தது. ஓர் ஆடு காணாமல் போனாலும், அதன் உரிமையாளருக்குப் பதில் சொல்லியாக வேண்டுமே! மந்தையிலிருந்து பிரிந்து செல்லும் ஆடுகளை விரட்டுவதும், ஒன்று சேர்ப்பதுமாய் அவர் இருந்தார். கொஞ்சம் அசந்தாலும் ஓநாய் கவ்விச் சென்றுவிடும். தீவிரமான கண்காணிப்பின் காரணமாக வேறு சிந்தனை மனதில் எழவில்லை.

இன்னும் சிறிது நேரத்தில் ஆட்டு மந்தையை நீர் நிலைக்கு ஓட்டிச் செல்ல வேண்டியிருக்கும். பாவம்! தாகம் தணித்துக்கொள்ளட்டுமே அந்த வாயில்லாப் பிராணிகள்.

பார்வையும், கவனமும் ஆட்டு மந்தையில் லயித்திருந்த அந்த நேரத்தில்தான், ‘தம்பி!’ என்ற குரல் கேட்டது.

சிந்தனையிலிருந்து விடுபட்டுத் திரும்பியவனுக்கு, பாறையின் மறுபக்கம் இருவர் நிற்பது தெரிந்தது. இருவரின் முகங்களிலும் களைப்பு வெளிப்பட்டது. அவர்கள் நெடுந்தொலைவு நடந்து வருகிறார்கள் போலும்! அந்த வழிப்போக்கர்கள் அருந்துவதற்கு நீராவது தரலாம் என்று நினைத்துத் தோல் பையை எடுத்தான். அதில் நீர் இல்லை. உதடுகளைப் பிதுக்கிக்கொண்டான். “பெரியோரின் தாகம் தணிக்கவும் இயலாத துரதிர்ஷ்டசாலியாகிவிட்டேனே!” என்று முணுமுணுத்துக்கொண்டான்.

நிலைமையை வந்தவர்கள் புரிந்து கொண்டார்கள். “பரவாயில்லை தம்பி!” என்று சமாதானமும் சொன்னார்கள். அவர்களில் ஒருவர் கேட்டார். “தம்பி! தாகம் உயிரைப் பறிக்கிறது. ஆட்டுப் பாலையாவது கறந்து குடிக்கிறோம். அதற்குக் கொஞ்சம் அனுமதியேன்” என்றார்.

மனம் வருந்திய சிறுவன்

வழிப்போக்கர்களின் நிலைமை சிறுவனைப் பெரிதும் வருத்தியது. அவர்களுக்கு உதவ மனம் துடித்தது. ஆனால், இதை எப்படி அனுமதிப்பது? எஜமானரின் அனுமதியில்லாமல் ஆட்டுப் பால் கறக்க முடியாதே! அந்தப் பையன் சங்கடத்துடன் தனது நிலையை வெளிப்படுத்தினான். “பெரியவர்களே! என்னை மன்னிக்க வேண்டும்! ஆட்டின் உரிமையாளர் அனுமதியின்றி பால் கறக்க இயலாது. உங்களுக்கு உதவ முடியாமைக்கு மன்னிக்க வேண்டும்!” என்றான்.

“உரிமையாளர்தான் இங்கே இல்லையே தம்பி! பால் கறப்பதை அவர் பார்க்கவா போகிறார்?”

சட்டென்று நிமிர்ந்து நின்ற சிறுவனிடமிருந்து பளிச்சென்று பதில் வந்தது. “அய்யா ! உண்மைதான்! ஆட்டு உரிமையாளர் இங்கில்லை; அவர் பார்க்கவும் முடியாது என்பது உண்மைதான்! ஆனால், எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறானே! நான் இந்தத் தவறை எப்படிச் செய்வேன்?”

சிறுவனின் தெளிவான பதிலைக் கேட்டதும், வழிப்போக்கர்களின் முகத்தில் புன்முறுவல் இழையோடியது. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். கண்களால் ஏதோ சாடையாகச் சொல்லித் தலையாட்டினர்.

கடைசியில், இருவரில் ஒருவர் சொன்னார். “சரி! போகட்டும் தம்பி! குட்டி போடாத ஆட்டிலிருந்து பால் கறந்து குடிப்பதில் உனக்கு ஆட்சேபணை இல்லையே!”

“என்ன? குட்டி போடாத ஆட்டிலிருந்து பால் கறப்பதா? நடக்குமா இது? அப்படி நடக்குமானால்… எனக்கேதும் ஆட்சேபணையில்லை!” என்றான் அந்தச் சிறுவன்.

குட்டிபோடாத ஆடு

வழிப்போக்கரில் ஒருவர் கண்களை மூடிப் பிரார்த்தித்தார். குட்டி போடாத ஒரு ஆட்டின் மடியில் கை வைத்தார். என்ன விந்தை! மடி பெருத்துப் பால் சுரக்கலாயிற்று. இருவரும் பாலைக் கறந்து வயிறு நிரம்பக் குடித்தனர். சிறுவனுக்கும் கொடுத்தனர். திரும்பவும் ஏதோ சொல்லி பிரார்த்திக்க, பால் மடி பழையபடி வற்றிவிட்டது.

நடப்பதை நம்ப முடியாத விழிகளுடன் அந்தச் சிறுவன் பார்த்தான். சற்று நேரத்தில் வந்தவர்கள் யார் என்று அடையாளம் கண்டுகொண்டான். அவர்களைத் தேடிச் சென்று பணிவோடு சொன்னான். “இறைவனின் தூதரே! நான் தங்கள் திருச்சமூகத்தில் இருந்து எப்போதும் பணிவிடை செய்ய விரும்புகின்றேன். அதுபோலவே, தங்களோடு தங்கியிருந்து கல்வி அறிவு பெறவும் ஆசைப்படுகின்றேன். தாங்கள் இதற்கு அனுமதி தர வேண்டும்!”

“மகனே! அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்! தாராளமாக இருக்கலாம். நீர் கல்வி அறிவுகளில் சிறந்து விளங்குவீர் என்பதில் சந்தேகமேயில்லை! ஏனென்றால், கடமை தவறாத உணர்வு எங்கிருக்கிறதோ அங்கு அறிவும் தங்குதடையின்றி இருக்கும்!” என்று நபிகளார் அந்த அருமைச் சிறுவனைக் கட்டியணைத்து வாழ்த்தினார்.

பின்னாளில் புகழ் வாய்ந்த நபித்தோழராக வளர்ந்த அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதை தம்முடன் இருக்க அனுமதியும் தந்தார். பக்கத்திலிருந்த நபித்தோழர் அபூபக்கரும் அதை ஆமோதிப்பதைப் போலத் தலையசைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

மேலும்