தர்மபுத்திரர் அசுவமேத யாகத்துக்கு அங்கமாக ஏராளமான அன்னதானம் பண்ணினார். அந்த மாதிரி சகல ஜனங்களுக்கும் வயிறும் மனசும் ரொம்பிப் போகிற முறையில் எவருமே அன்னதானம் பண்ணினதில்லை என்று எல்லோரும் ஏகமாகக் கொண்டாடினார்கள். வயிறு ரொம்பப் போட்டுவிடலாம். அது பெரிசில்லை. அதே சமயத்தில் மனசும் ரொம்புகிற மாதிரி பரம அன்போடு போடுவதுதான் விசேஷம்.
'இது யாகத்தின் அங்கம். இதைப் பண்ணினால்தான் தனக்குப் பலன் கிடைக்கும்' என்று காரியார்த்தமாக மட்டுமில்லாமல், கடனே என்று இராமல், நிஜமான பரிவோடு பாண்டவர்கள் இப்படிப் பெரிய அன்னதானம் செய்து லோகமெல்லாம் ஸ்தோத்திரம் பண்ணுகிறபோது, இதனால் அவர்களுக்கு கர்வம் வந்துவிடக் கூடாதே என்று பகவான் பார்த்தார். கர்வம் வந்ததோ அத்தனை தர்மமும் அதிலே “ஸ்வாஹா'' ஆகிவிட வேண்டியதுதான்.
அதனால் இந்த சமயத்தில் அவர்களைக் கொஞ்சம் மட்டம் தட்டினாலும் நல்லதுதான் என்று பகவான் நினைத்தார். வெறுமனே மட்டம் தட்டினால் மட்டும் போதாது. அதோடு சர்வ லோகத்துக்கும் தானத்தின் உத்க்ருஷ்டமான தத்துவம் தெரியும்படியாகவும் பண்ண வேண்டும் என்றும் நினைத்தார். இந்த இரண்டு லட்சியங்களையும் பூர்த்தி பண்ணுகிற ஒரு சம்பவம் அப்போது பகவத் சங்கல்பத்தால் நடந்தது.
ஏகப்பட்ட ஜனங்கள் சேர்ந்து தர்மபுத்திரரை ஸ்தோத்ரம் பண்ணிக்கொண்டிருந்த அந்த சந்தர்ப்பத்தில் அங்கே திடீரென்று ஒரு விசித்திரமான கீரிப்பிள்ளை தோன்றிற்று. விசித்திரம் என்னவென்றால் அந்தக் கீரிப்பிள்ளையின் உடம்பில் சரியாக ஒரு பாதி மட்டும் பளபளவென்று தங்கம் மாதிரி பிரகாசித்தது.
அந்தக் கீரிப்பிள்ளை போஜனசாலையில் சிந்தியிருந்த அன்னாதிகளின்மேல் புரண்டுவிட்டு, மநுஷக் குரலில், ''இது என்ன பெரிய தானம்? இதென்ன பெரிய யாகம்? அந்தக் குருக்ஷேத்திரத்து உஞ்சவ்ருத்தி பிராம்மணர் பண்ணின தானத்துக்கு இது வீசம் கூடக் காணாது'' என்று தூக்கி எறிந்து பேசிற்று.
பார்வைக்கே பாதித் தங்கமாக அது விசித்திரமாக இருந்தது என்றால், மநுஷக் குரலில் பேசினது அதைவிட விசித்திரம். பேசிய விஷயமோ எல்லாவற்றையும் விட விசித்திரமாக இருந்தது. லோகம் முழுவதையும் கட்டி ஆள்கிற தர்மபுத்திரர் செய்ததைவிடப் பெரிய தானத்தை உஞ்சவ்ருத்தி பிராம்மணன் எப்படிப் பண்ண முடியும்?
ஆதி காலத்தில், நம் தர்ம சாஸ்திரங்களின்படி பார்த்தால், உஞ்சவ்ருத்தி என்பதற்கு அர்த்தமே வேறே. சாஸ்த்திரப்படி, களத்திலே நெல்லடித்து, சொந்தக்காரன் அந்த தானியத்தைக் கொண்டு போகிறபோது, அடிவரைக்கும் வழித்து வாரிக்கொண்டு போகாமல், கொஞ்சத்தை அப்படியே களத்திலேயே விட்டுவிட வேண்டும். இதைத்தான் சோற்றுக்கு வேறு வழி இல்லாத பிராம்மணர்கள் பொறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும் 'உஞ்சம்' என்றால் 'சிதறிப் போனதைத் திரட்டி எடுப்பது' என்றே அர்த்தம்.
அப்போது குருக்ஷேத்திரத்தில் ஒரு பெரிய பஞ்சம் ஏற்பட்டது. பெரிய பெரிய பிரபுக்களே அன்னத்துக்குப் பரிதவிக்கும்படியான நிலை ஏற்பட்டது. அப்போது உஞ்சவ்ருத்தி பிராம்ணன் நிலை எப்படி இருக்கும்? எப்போதோ எங்கேயோ பொறுக்கி வந்த கோதுமையில் தான் கொஞ்சம் குப்பையும் கூளமுமாக மட்கி, நாற்றமெடுத்துக் கை வசம் இருந்தது.
அதை மாவாக அரைத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். அவனுடைய குடும்பத்திலே நாலு ஜீவன்கள். பிராம்ணன், அவனுடைய பத்தினி, பிள்ளை, மாட்டுப்பெண் என்ற இந்த நாலு பேருக்கு ஒரு வேளைக்குத்தான் இந்த மாவு போதும். 'ஏதோ இந்த வேளையை இப்படித் தள்ளுவோம். அடுத்த வேளை இதுவும் இல்லாமல் பிராம்ணன் போக வேண்டியதுதான்' என்று நினைத்து நாலு பேரும் வெறும் மாவை ஆளுக்கு ஒரு பிடி தின்னலாம் என்று உட்கார்ந்தார்கள்.
இந்த சமயம் பார்த்து ''தேஹி!'' என்று சொல்லிக்கொண்டு ஒரு யாசகர் அங்கு வந்து சேர்ந்தார். 'கலத்திலே சோற்றை இட்டுக் கைப்பிடித்து இழுப்பது' என்பார்களே, அந்த மாதிரியான சந்தர்ப்பம். அந்த சந்தர்ப்பத்திலுங்கூட அந்தக் குடும்பத்தில் ஒருத்தராவது விருந்தோம்பல் பண்பில் பின்வாங்கவில்லை. பிராம்ணன், அவனுடைய பத்தினி, புத்திரன், மாட்டுப்பெண் ஆகிய நாலு பேருமே போட்டி போட்டுக்கொண்டு அதிதிக்குத் தங்கள் பங்கு மாவைக் கொடுக்க முன்வந்தார்கள்.
‘’ நீங்கள் கொடுத்த பிடி மாவு உங்களுக்கு ஸ்வர்க்கத்திலேயே இடம் 'பிடி'த்துக் கொடுத்துவிட்டது. எல்லாரும் ஆனந்தமயமான தேவலோகத்துக்கு வந்து சேர்வீர்களாக'' என்று அசரீரி கூறிற்று.
உடனே தேவர்கள் அங்கே அலங்கார விமானத்தோடு வந்தார்கள். உஞ்சவ்ருத்தி பிராம்மணக் குடும்பத்தினர் அதிலே ஏறிக்கொண்டு சுவர்க்கத்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.
இந்தக் கதையைச் சொன்ன கீரிப்பிள்ளை, ''அந்த சமயத்தில் நான் குருக்ஷேத்திரத்தில் அந்த வீட்டில்தான் இருந்தேன். அவர்கள் தானம் கொடுத்த மாவில் துளி கீழே சிந்தியிருந்தது. நான் அந்த இடத்துக்கு மேலாக ஓடுகிறபோது என் சரீரத்தின் இந்தப் பக்கத்தில் அந்த மாவு பட்டதனால்தான் இந்தப் பக்கமே ஸ்வர்ண வர்ணமாகிவிட்டது''.
“இப்படி ஒரு பக்கம் மட்டும் தங்கமாக இருக்கிறதே, இதே மாதிரி வேறெங்காவது பரம உத்க்ருஷ்டமான தானம் நடக்கிற இடத்தில் சிந்திப்போனது இன்னொரு பக்கத்தில் பட்டால் அதுவும் தங்கமாகி, முழுக்கத் தங்கமாகலாமே என்கிற ஆசையில் நானும் பெரிய பெரிய சந்தர்ப்பணைகள், அன்னசாலைகள், தர்மசத்திரங்களுக்கெல்லாம் போனபடிதான் இருக்கிறேன். ஆனால் என் மறுபாதி தங்கமாக மாறவேயில்லை. தர்ம புத்திரர் மகா பெரிய யாகம் பண்ணி, அன்னதானம் செய்கிறாரே இங்கே சிந்திப் போனதிலாவது என் சரீரத்தின் பாக்கி பாதி தங்கமாகுமாக்கும் என்றுதான் இங்கும் வந்து புரண்டு பார்த்தேன். இங்கேயும் பலனைக் காணோம்!'' என்று கீரிப்பிள்ளை முடித்தது.
தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
5 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago