நீ தேடும் இறைவன் உனக்குள்

By என்.சுவாமிநாதன்

அய்யாவைகுண்டர் அவதார தினவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20-ம் தேதி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இதனை முன்னிட்டு சுவாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டர் தலைமை பதி நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது.

புதன் கிழமை காலை நாகர்கோவிலில் இருந்து சுவாமிதோப்புக்கு அவதார தின ஊர்வலம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கைகளில் காவிக் கொடி ஏந்தி, “அய்யா சிவ... சிவ அரோகரா...” என பக்தி கோஷமிட்டாவாறே முழங்கியும், முத்துக்குடை ஏந்தியும் சென்றனர். ஊர்வலத்தில் சிறுவர், சிறுமிகள் கோலாட்டம் ஆடியவாறு சென்றனர்.

சுவாமிதோப்பிலிருந்து ஆன்மீக நெறி

அய்யா வைகுண்டர் அவதார தினத்திற்கு லட்சோப, லட்சம் பக்தர்கள் சுவாமிதோப்பு நோக்கிச் செல்லும் அளவுக்கு அய்யா வைகுண்டர் செய்த விஷயம்தான் என்ன? ஒவ்வொன்றாய் அடுக்குகின்றார்கள் அய்யா வழி பக்தர்கள்.

சமத்துவம் நிறைந்த சமுதாயத்தை அமைக்கப் பாடுபட்டவர் அய்யா வைகுண்டர். கொல்லம் ஆண்டு 1008 மாசி மாதம் 20-ம் நாள் திருச்செந்தூர் கடலில் இருந்து சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும், ஒரு மூர்த்தியாக வைகுண்ட பரம்பொருளாக அவதரித்து வெளியே வந்தார் என்பது ஜதீகம்.அந்த நாளே அய்யா அவதார தினமாக கொண்டாடப்படுகின்றது.

நடந்தது, நடப்பது, நடக்க இருப்பது என முக்காலத்தையும் சொன்ன அய்யா வைகுண்டரின் தலைமைபதி சுவாமிதோப்பில் ஆன்மீக நெறி பரப்பிக் கொண்டிருக்கின்றது. மக்கள் மனதில் குடி கொண்டிருக்கும் கலி என்னும் மாய அரக்கனை அழித்து அவர்களை தர்ம யுக வாழ்வுக்கு அழைத்து செல்ல வந்த நாராயணன் எடுத்த அவதாரமே வைகுண்ட அவதாரம் என்பது அய்யா வழி பக்தர்களின் நம்பிக்கை.

வைகுண்ட சாமி அவதரித்தார்

1809-ல் சுவாமி தோப்பு கிராமத்தில் பொன்னு மாடன் மற்றும் வெயிலாள் தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு பெற்றோர் “முடி சூடும் பெருமாள்” என பெயரிட்டனர். இந்த பெயர் வைப்பதற்கே கடும் எதிர்ப்பு கிளம்ப பெற்றோர் “முத்துக்குட்டி” என மாற்றிப் பெயரிட்டனர்.

முத்துக்குட்டிக்கு 22 வயதில் உடல் சுகவீனம் ஏற்பட்டது. நடக்கக்கூட முடியாத முத்துகுட்டியை அவரது தாய் வெயிலாளும், மனைவி திருமால்வடிவும் தொட்டில் கட்டி அதில் படுக்க வைத்து திருச்செந்தூர் கோவில் மாசித் திருவிழாவுக்குத் தூக்கிச் சென்றனர்.

உணவு அருந்த வழியில் இறக்கியபோது படுத்த படுக்கையாய் இருந்த முத்துக்குட்டி எழுந்து, நடந்து திருச்செந்தூர் கடலுக்குள் சென்றார். அவரது தாய் கடற்கரையிலேயே ஏக்கத்துடன் காத்திருந்தார்.கடலுக்குள் சென்ற முத்துக்குட்டிக்கு திருமால் மூன்று நாள்கள் கலிகாலம் போதித்து வைகுண்டர் என்று நாமகரணம் சூட்டி அனுப்பி வைத்தார்.

கடலில் இருந்து வெளியே வந்த வைகுண்ட சாமி அவரது தாய் வெயிலாளைப் பார்த்து, “அம்மா, நான் இப்போது வைகுண்டராக வந்திருக்கிறேன். நான் இந்த பூவுலகிற்கே சொந்தம்.”என்றார்.

புலியும் பூனையாகும்

சாதிய, மதக் கொடுமைகளுக்கு எதிரான அவரது போதனைகள் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு எரிச்சலூட்டின. பலநாள் பட்டினி போடப்பட்ட புலிக் கூண்டிற்குள் தூக்கி வீசப்பட்டார். அமைதியே சொரூபமான அய்யா வைகுண்டரின் காலடியில் அகோரப் பசி கொண்ட புலியும், பூனையைப் போல் வந்து சாந்தமாய் படுத்தது.

அய்யா வைகுண்டர் தனது வாழ்நாளின் வெவ்வேறு நிலைகளைக் கடந்த இடங்கள் பதிகள் என்று அழைக்கப்படுகின்றன. அந்தப் பதிகளிலும், தினசரி ஐந்து வேளை அன்னதானமும் நடைபெறுகிறது. “பிச்சையெடுத்து மிச்சமில்லாமல் அறப்பணியாற்று”என்பதே அய்யா வைகுண்டரின் வாக்கு.

மேல் நோக்கிய திருநீற்று நாமம்!

அய்யா வழி பக்தர்கள் புருவ மத்தியில் இருந்து நெற்றியில் மேல் நோக்கித் திருநீரால் நாமம் இட்டுக் கொள்வார்கள். இந்தத் திருநீறு பூமிக்கு அடியில் உள்ள தூய்மையான வெள்ளை மண்ணில் இருந்து தயாரிக்கப்படுகிறது.அய்யா வழி பக்தர்களின் திருமண நிகழ்வுகளையும் சமூகப் பெரியவர் ஒருவரே தலைவராக நின்று நடத்தி வைக்கிறார்.

சமத்துவம் போற்றும் கிணறு

சாதிப் பாகுபாடு தலை விரித்து ஆடிய காலகட்டத்தில் சுவாமிதோப்பில் அய்யா வைகுண்டர் சமத்துவ கிணறு ஏற்படுத்தினார். இந்தக் கிணறுக்கு முத்திரிக் கிணறு என்று பெயர். அய்யா வழி பக்தர்கள் சுவாமிதோப்பு தலைமை பதிக்கு செல்வதற்கு முன்பு இந்த முத்திரிக் கிணற்றில் நீர் இறைத்து நீராடி அந்தக் கிணற்றுக்கு மரியாதை செலுத்தி விட்டுத்தான் சுவாமிதோப்பு பதிக்குள் நுழைகின்றார்.

முத்திரி என்ற சொல்லுக்கு உத்தரவாதம் தருதல், நியமித்தல் என்று பொருள்படுகிறது. சுவாமி தோப்பு தலைமைப் பதி மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அனைத்து அய்யா பதிகளிலும் இதே போல் முத்திரிக் கிணறு அமைக்கப்பட்டிருக்கின்றது.

அய்யா வைகுண்டரின் சிந்தாந்தம் “நீ தேடும் இறைவன் உனக்குள்ளேயே இருக்கின்றான்” என்பதுதான். அதைக் குறிப்பால் உணர்த்துவதுதான் இந்த வழிபாட்டு முறை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்