தென்கோடியில் அருளும் அம்மை

By என்.சுவாமிநாதன்

மாசி கொடை விழா

காமாட்சி, மீனாட்சி, இசக்கி, முத்து,மாரி என அம்மன் தெய்வத்தின் உருவங்கள் தமிழகத்தில் ஏராளம். ஒவ்வொரு அம்மனுக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டில் உள்ள பகவதி அம்மனின் சிறப்பே புற்று தான்.

15 அடிக்கு உயர்ந்து நிற்கும் புற்றின் மேல் பகவதி அம்மனின் முகம் சந்தனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக வெள்ளியில் பகவதி அம்மன் சிலையும், அதற்கும் முன்பாக வெண்கலத்தில் நின்ற நிலையிலும் பகவதி அம்மன் அருள் மழை பொழிகிறாள். இங்கு வந்து வழிபட்டால் வேண்டியது நடக்கும் என்பது ஜதீகம்.

பெண்களின் சபரிமலை

கேரள கோவிலை போன்று அமைப்பு கொண்ட மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வருகின்றனர். சபரிமலைக்கு ஆண்கள் 41 நாள்கள் விரதம் இருந்து,பயபக்தியுடன் சென்று வழிபட்டு வருவதைப் போல, ஒவ்வொரு ஆண்டும் மாசி கொடை விழாவை ஒட்டி கேரளத்து பெண்கள் 41 நாள்கள் பயபக்தியுடன் விரதம் இருந்து, இருமுடி கட்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்கிறார்கள். இந்த ஆண்டுக்கான மாசி கொடை விழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி,10-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

மண்டைக்காடு ஆன கதை

முந்தைய காலகட்டத்தில் இந்த இடம், காடாக இருந்திருக்கிறது. கால்நடைகளை இங்கே மேய்ச்சலுக்குக் கொண்டுவந்ததால், இதை மந்தைகாடு என அழைத்துள்ளனர்.அதுவே காலப்போக்கில் மருவி மண்டைக்காடு ஆனதாகச் சொல்லப்படுகிறது. ராஜேஸ்வரி குடியிருப்பதாக சொல்லப்படும் சக்கரத்தை கையில் ஏந்தி ஆதி சங்கரரின் சீடர் ஒருவர் இங்கே வந்தார்.

ஸ்ரீசக்கரத்தை தரையில் வைத்து விட்டு பூஜையில் ஆழ்ந்துவிட, அவரை சுற்றிலும் சில நேரங்களில் புற்றுக்கள் வளர்ந்துவிட்டன. ஆடுமேய்க்கும் சிறுவர்கள் அவரை எழுப்பிவிட்டனர். ஸ்ரீசக்கரமோ மண்ணை விட்டு வரவில்லை. அவரும் அங்கேயே இருந்து ஜீவ சமாதி ஆகிவிட்டார். இந்த விஷயம் மன்னர் மார்த்தாண்டவர்மாவுக்கு தெரிய வந்ததும் அப்பகுதியில் கோவில் கட்டினார். மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உருவான வரலாறு இது தான்.

பிரார்த்தனைகளும் பிரசாதமும்

கல்யாண வரம், குழந்தை வரம், உடல் உறுப்புகளில் குறைபாடு, கண் திருஷ்டி தோஷம், தலைவலி நிவாரணம் போன்றவற்றிற்காக இங்கு பிரார்த்தனை செய்யப்படுகின்றது. இக்கோயிலில் கொடுக்கப்படும் மண்டையப்பம் மிகவும் பிரசித்தி பெற்றது. அரிசிமாவில் வெல்லம்,பாசிப் பருப்பு,ஏலம்,சுக்கு ஆகியவை சேர்ந்து நீராவியால் அவித்துத் தயார் செய்யப்படுகிறது இந்த மண்டையப்பம்.

அம்மனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது. மாசி கொடை விழாவின் போது வேண்டுதல் நிறைவேற ஆலய வளாகத்தை சுற்றிலும் பொங்கல் வைத்தும் வழிபாடு செய்கின்றனர். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோயிலிருந்து மீண்டபிறகு இங்கே வந்து, முத்தப்பம் என்னும் அப்பத்தை நைவேத்தியம் செய்கின்றனர்.

தலவிருட்சம்

வேப்ப மரம் கோவிலின் தல விருட்சமாக உள்ளது. செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் அதிகம் பேர் மண்டைக்காடு அம்மன் கோவிலில் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். அதிலும் தமிழ்மாதக் கடைசி செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் வழிபடுவது மிகவும் சிறப்பு.

இதே போல் பவுர்ணமி நாளிலும் கூட்டம் அலைமோதுகிறது. கோவிலின் அற்புதங்கள் ஆயிரம் சொன்னாலும் மனதில் நினைத்து வேண்டி உருகி, வணங்கி எந்த அம்மனாகப் பார்த்தாலும், அந்த அம்மனாகத் தெரிவது ஆச்சரியம் கலந்த உண்மை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்