அது கடுமையான கோடைக்காலம். கொளுத்தும் வெயிலில் ஒரு வழிப்போக்கர் நடந்து கொண்டிருந்தார். வெயிலின் கடுமையை அவரால் தாள முடியவில்லை. நாக்கு வறண்டு தாகம் உயிரை எடுத்தது.
அவர் தண்ணீர் தேடி அங்கும், இங்குமாய் அலைந்தார். வெகு சீக்கிரத்திலேயே ஒரு கிணற்றையும் கண்டார். ஆனால், அந்தக் கிணற்றில் தண்ணீர் இல்லை. வறண்டு கிடந்தது. மறுபடியும் தண்ணீருக்காக அலைந்தார். தொலைவில் ஒரு கிணறு தெரிந்தது. அதன் அருகில் ஓடினார். ஆனால், அதுவும் வறண்டிருந்தது. மீண்டும் தண்ணீரைத் தேடி அலைந்தார்.
இறுதியில் தண்ணீர் உள்ள ஒரு கிணறையும் கண்டுபிடித்துவிட்டார். ஆனால், தண்ணீர் கிணற்றின் ஆழத்தில் இருந்தது. அத்துடன் நீரை இறைக்க வாளியோ, கயிறோ எதுவும் இல்லை. கடைசியில், வேறு வழியில்லாமல் ரொம்பவும் சிரமப்பட்டுக் கிணற்றில் இறங்கினார். உள்ளே வெயிலின் கடுமை இல்லை. தண்ணீரும் ஜில்லென்று குளிர்ச்சியாக இருந்தது.
இரு கரங்களால் தண்ணீரை அள்ளி தாகம் தீரக் குடித்தார். அதன் பிறகுதான் அவருக்கு உடலில் தெம்பு பிறந்தது. இறைவனுக்கு நன்றி செலுத்தியவர் கிணற்றிலிருந்து வெளியே வந்தார்.
நாயின் முனகல்
கிணற்றின் பக்கத்தில் ஒரு நாய் நின்றிருந்தது. வெயிலின் கொடுமையைச் சமாளிக்க முடியாமல் நாக்கைத் தொங்கப் போட்டு மூச்சிரைக்கத் தவித்துக்கொண்டிருந்தது. கிணற்றைச் சுற்றியிருந்த மணலைக் கால்களால் பிராண்டியது. மணலின் அடிப்பகுதியில் இருந்த ஈரத்தை நக்கியது. தாகம் அடங்காமல் பலவீனமான குரலில் முனகியது.
இந்தக் காட்சியைக் கண்டதும் வழிப்போக்கரின் உள்ளம் இளகிவிட்டது. “ஐயோ பாவம்! வாயில்லாத ஜீவன்! தண்ணீர் தாகத்தால் தவித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்சம் நேரத்தில் தண்ணீர் கிடைக்காவிட்டால் நாய் நிச்சயமாக செத்துவிடும்!” என்று கருதினார்.
நாயை இரக்கத்துடன் பார்த்தார். கிணற்றில் மீண்டும் கஷ்டப்பட்டு இறங்கினார். தண்ணீரை மொண்டு மேலே கொண்டுவருவது எப்படியென்று கொஞ்சம் நேரம் யோசித்தார்.
பின்பு ஒரு திட்டத்துடன் காலில் மாட்டியிருந்த தோலால் ஆன காலுறைகளைக் கழற்றினார். இரண்டு காலுறைகள் நிரம்பத் தண்ணீரை நிரப்பினார். அவற்றை வாயில் கவ்விக் கொண்டு கிணற்றிலிருந்து மெதுவாக வெளியே வர ஆரம்பித்தார்.
அது அவ்வளவு எளிதாக இல்லை. தண்ணீர் நிரம்பிய காலுறை கனத்தது. வாயும், பல்லும் வலித்தது. பேசாமல் முயற்சியைக் கைவிட்டு விடலாமா என ஒரு கணம் தோன்றியது. ஆனால், மனக் கண்ணில் தாகத்தால் தவிக்கும் நாய் தெரிந்தது. கஷ்டத்தை மறந்து, பெரு முயற்சி எடுத்து ஒருவாறு ஏறி கிணற்றிலிருந்து வெளியே வந்துவிட்டார்.
கிணற்றருகே அமர்ந்து, முதல் காலுறை நீரை நாய்க்குப் புகட்டினார். நாய் மகிழ்ச்சியுடன் தண்ணீரை நக்கி நக்கி குடிக்க ஆரம்பித்தது. உயிரைக் காத்ததற்கு அடையாளமாக நன்றியுணர்ச்சியுடன் வாலை ஆட்டியது. ஒரு சொட்டுத் தண்ணீரையும் பாக்கி வைக்காமல் இரண்டு காலுறை நீரையும் அது குடித்து முடித்தது. அவ்வளவு தாகம் அதற்கு!
வழிப்போக்கரின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. நாயின் தாகத்தைத் தீர்த்த மகிழ்ச்சியுடன் அவர் நடக்க ஆரம்பித்தார்.
வழிப்போக்கரின் இந்த செயல், இறைவனுக்குப் பிடித்துப் போனது. சக உயிரினமான நாயிடம் அவர் காட்டிய கருணையால் இறைவன் அவருடைய பாவங்களை மன்னித்தான். அவருக்குச் சொர்க்கம் வழங்கினான்.
நபிகளார் படிப்பினை மிக்க இந்தக் கதையைச் சொல்லி முடித்தார்.
அதைக் கேட்டுக்கொண்டிருந்த தோழர்களில் ஒருவர், “இறைவனின் தூதரே! நாம் உயிரினங்களிடம் நல்ல விதமாக நடந்துகொண்டால், இறைவன் நம் பாவங்களை மன்னிப்பானா?” என்று சந்தேகம் கேட்டார்.
“நிச்சயமாக! உயிரினங்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்வோருக்கு இறைவன் அருள்மாரி பொழிவான்” என்று நபிகளார் பதிலளித்தார்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
17 hours ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago