நிலமங்கை நாயகனின் நீராட்டம்

By மாமல்லை முரளி

திருக்கடல் மல்லை. ஆழ்வார்களின் அமுத வாக்கால் கொண்டாடப்பட்ட பெயர். அதுவே தற்போதைய மாமல்லபுரம். பல்லவ மன்னன் நரசிம்ம வர்மன் மல்யுத்தங்களில் வென்று மாமல்லன் என்று அழைக்கப்பட்டான்.

மகாபலிபுரம் என்று புராண காலத்தில் அழைக்கப்பட்ட பல்லவ மன்னர்களின் துறைமுக நகரம் நரசிம்மவர்மன் காலத்திற்கு பிறகு மாமல்லபுரம் என்றாயிற்று. இந்த மாமல்லபுர கடற்கரையில் நிலமங்கை நாயகனுக்கு மாசி மகப் பௌர்ணமி அன்று காலை நீராட்டம் என்னும் தீர்த்தவாரி நடைபெறுகிறது..

புண்டரீக வரத கோவிந்தா என்ற நாமாவளியால் திருமாலை துதிக்கின்றோம். அந்தப் புண்டரீக மாமுனிக்கு வரம் தந்த திருமாலே மாமல்லைக் கடற்கரையில் தரையிலே பள்ளிகொண்டான்.

பக்தன் பணி செய்த பரந்தாமன்

பண்டைய நாளில் மகாபலிபுர திருத்தலத்தில் அமைந்திருந்த திருக்குளத்தில் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலர் ஒன்று மலர்திருந்ததைக் கண்டார். புண்டரீக மாமுனிவர்.

திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீ மன் நாரயணன் திருவடியில் அம்மலரை அர்பணிக்க எண்ணி, திருக்குளத்திலிருந்த தாமரை மலரைக் கொய்து, வங்காள விரிகுடா கடற்கரைக்கு வந்தார், திருப்பாற்கடலை அடைவதற்காக, இந்தக் கடலைத் தன் கைகளால் வாரி, வாரி, இரைத்து, இரைத்துச் சோர்ந்து போனார்.

ஆயினும் பரந்தாமன் தரிசனம் காண தன் முயற்சியைச் சற்றும் விடாமல் இரைத்துக் கொண்டிருந்தைப் பார்த்த பாற்கடல் வாசன் தன் பக்தனைக் காணப் பரம வயோதிகனாய் பாம்பணையை விட்டு வந்தான்.

பரம பக்தியுடன் கடல் நீரை வாரி இரைக்கும் புண்டரீக மாமுனிவன் முன்பு வந்து, தன் பசியைப் போக்க உணவு வேண்டி நின்றான் உலகுக்கெல்லாம் உணவளிக்கும் உத்தமன். தன் பசிக்கு உணவைக் கொண்டு வரும் வரை, தன் பக்தன் கடல்நீரை இரைக்கும் தூய தொண்டினைத் தான் செய்வதாக புண்டரீக மாமுனிக்கு வாக்களித்தான் புருஷோத்தமன்.

அவ்வாறே முதியவராய் வந்த முகுந்தனின் வாக்கின்படி, மாமல்லை நகருக்குள் சென்று, உணவுடன் திரும்பி வந்த மாமுனிவர், பசியடன் வந்த முதியவரைக் காணாமல் திகைத்தார்.

அதிசயம் நிகழ்ந்தது

தான் பாற்கடலில் காண விரும்பிய எம்பெருமான், கடற்கரை மணலிலே, பஞ்ச ஆயதங்கள், ஆதிசேஷன், ஏன், தன் நாயகி திருமகளும் இல்லாமல் தரையிலே படுத்திருக்கும் கோலத்தைக் கண்டார். தான் கொய்த ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரினை வரம் தரும் மாமணிவண்ணன் பாதங்களில் வைத்து வணங்கி நின்றார். அவ்வாறு தரையிலே சயனம் கொண்ட எம்பெருமானுக்கு ஸ்தலசயனம் என்ற திருநாமம் ஏற்பட்டது.

அவன் நாயகி, மகாலஷ்மியும் தன் தாமரை மலர் ஆசனத்தை விட்டு பூமியிலே அமர்ந்ததால் நிலமங்கை என்ற திருநாமத்துடன் இத்தலத்திலே எழுந்தருளினாள். புண்டரீக மாமுனிவன் வேண்டுகோளின்படி இன்றளவும் அர்ச்சாமூர்த்தியாய் கிழக்கு நோக்கி கிடந்த கோலத்தில் காட்சி தருகிறார் எம்பெருமான்.

அர்த்த சேது

வடமொழியில் ஸ்தலம் என்ற சொல்லுக்கு நிலம் என்று பொருள். எனவேதான் அவன் நாயகி தமிழ்ப் பெயர் தாங்கி நிலமங்கை என்ற திருநாமம் கொண்டுள்ளாள். ஸ்ரீமன் நாரயணனே தன் திருக்கைகளை தொட்டு வங்கக் கடலை வாரி இரைத்ததால், இந்த கடல்மல்லைக் கடற்கரை அர்த்த சேது என்று அழைக்கப்படுகிறது.

எனவே இந்தக் கடற்கரையில் எந்த காலத்திலும் நீராடலாம். என்றாலும் மாசிப் பௌர்ணமி புண்ய காலத்திலே ஆதவன் தோன்றும் வேளையில் நிலமங்கை நாயகனுடன் நீராடும்போது பல மடங்கு பலன் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

மங்களாசாசனம்

பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்களால் பாடல் பெற்ற தலம். ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில் கொண்டான் எனத் திருமொழி பாடினார் திருமங்கையாழ்வார். 108 திவ்ய தேசங்களில் 63 - ம் திவ்ய தேசம்..

பரிகாரம்

நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்க்கும் பரிகாரத் தலம். தலசயனத்துறைவாரைக் கொண்டாடும் நெஞ்சுடையார் இம்மண்ணுலகை ஆள்வார். இதுவே ஆழ்வார்களின் வாக்கு..

நீராட்டம்

1.3.2015 ஞாயிறு காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை ஏகதின லட்சார்ச்சனை. 4.3.2015 புதன் இரவு 8.00 மணிக்கு புண்டரீக புஷ்கரணியில் தெப்போற்சவம். 5.3.2105 வியாழன் காலை 7.00 மணிக்கு கடற்கரையில் தீர்த்தவாரி. அன்றைய தினம் ஸ்தலயனப் பெருமாள், ஆதிவராகப் பெருமாள் ஆகியோரின் கருடசேவை காணக் கண் கொள்ளாக் காட்சி. கண்டார் கண்ணுக்கு இனியன் நிலமங்கை மணாளன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

19 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்