தெய்வத்தின் குரல்: அவதார புருஷர் ஆசார்யாள்

By செய்திப்பிரிவு

ஆசார்யாள் என்று நாம் பூஜிக்கிற ஆதிசங்கர பகவத்பாதர்கள் சாட்சாத் பரமேச்வரரின் அவதாரம். தன்னுடைய சித்சக்தி (ஞான சக்தி) யை உள்ளுக்குள்ளே அடக்கிக் கொண்டு ஒரு காரியமும் இல்லாமல் மௌனமாக உட்கார்ந்து கொண்டிருந்த தட்சிணாமூர்த்திதான் அப்படி அவதாரம் பண்ணினார்.

எத்தனைக்கெத்தனை மௌனமாக இருந்தாரோ அத்தனைக்கத்தனை பாஷ்யம், ஸ்தோத்ரம், வாதம் என்று பேசித் தீர்த்தார். எத்தனைக்கெத்தனை காரியமே இல்லாமலிருந்தாரோ அத்தனைக்கத்தனை காரியம் பண்ணினார். இடத்தை விட்டு நகராமல் ஆலவிருட்சத்தடியில் உட்காரந்திருந்தவர் மூன்று தரம் காலால் நடந்தே ராமேசுவரத்திலிருந்து இமயமலை வரை சஞ்சாரம் பண்ணினார்.

காரியமில்லாத பிரம்மம்தான் சிவன். காரியம் பண்ணுகிற பிரம்மம் சக்தி. சித்சக்தி விலாசத்தால்தான் காரியப் பிரபஞ்சம் நடக்கிறது. ஆசார்யாள் இத்தனை காரியம் பண்ணினார் என்றால், தட்சிணாமூர்த்தியாக இருந்தபோது உள்ளே அடக்கிக் கொண்டிருந்த சித்சக்தியான அம்பாள் இப்போது வெளியிலே ஆவிர்பவித்து விட்டாள் என்றே அர்த்தம்.

ஆகையால் ஆசார்யாளை ஈச்வரன், அம்பாள் இரண்டு பேரும் சேர்ந்த அவதாரம் என்று சொல்ல வேண்டும். மாதா, பிதா, குரு என்கிறோம். ஜகன்மாதாவும் ஜகத்பிதாவும் சேர்ந்து இப்படி ஜகத்குருவாக வந்தார்கள்.

காரியம் பண்ணாத தட்சிணாமூர்த்திக்குள் காரியசக்தியான அம்பாள் இருந்த மாதிரியே, ஆசார்யாள் ஒயாமல் ஒழியாமல் எத்தனையோ காரியம் பண்ணிக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள்ளே ஒரு காரியமும் பண்ணாத பிரசாந்த நிலையில்தான் இருந்து கொண்டிருந்தார். காரியமில்லாமல் தான் தானாக இருப்பதுதான் பிரம்மம்.

அதுவேதான் ஜீவனுடைய ஆத்மாவின் சத்தியமான நிலையும் என்ற அத்வைத வேதாந்தத்தை அசைக்கமுடியாத சித்தாந்தமாக நிலைநாட்டிய அவர், தாமும் அப்படிப்பட்ட பிரம்மானுபவத்திலேயே உள்ளூர இருந்தார்.

அப்படி பிரம்மமாக இருந்துகொண்டே, வெளியிலே மனுஷ்யாவதாரம் எடுத்ததால் மனுஷ்ய ரீதியிலே அநேக காரியங்களைச் செய்தார். டிராமாவில் எந்த வேஷத்தை எடுத்துக் கொள்கிறோமோ அதற்குத் தகுந்தபடிதான் ஆட வேண்டும். சொந்த ரூபத்தைக் காட்டக்கூடாது. லட்சாதிபதியான நடிகனானாலும் குசேலர் வேஷம் போட்டால் கிழிசல் வேஷ்டிதான் கட்டிக்கொள்ள வேண்டும்.

ஆனாலும் அவன் எத்தனை உருக்கமாகக் குசேலர் வேஷம் போட்டாலும் அவனுக்கு வாஸ்தவத்தில் தான் தரித்திரன் இல்லை என்பது தெரியும். இப்படித்தான் இந்த பிரபஞ்ச நாடகத்தில் அவதார புருஷர்கள் ‘ஆக்ட்' பண்ணுவார்கள். தங்களுடைய யதார்த்த சுயரூபத்தை உள்ளுக்குள்ளே கொஞ்சங்கூட மறக்காமலே, வெளிப்பார்வைக்கு மறந்த மாதிரி மனுஷ்ய ரீதியில் ஆக்ட் பண்ணுவார்கள்.

‘மாயா மாநுஷ', ‘லீலா மாநுஷ', ‘கபட நாடக வேஷ' என்றெல்லாம். இதை வைத்துத்தான் கிருஷ்ண பரமாத்மா போன்றவர்களைச் சொல்கிறோம். ராமர் மகாவிஷ்ணுவின் அவதாரமானாலும், சீதையை ராவணன் தூக்கிக் கொண்டு போனபோது சமான்ய மனுஷ்யர் மாதிரி துக்கப்பட்டார். லங்கையில் யுத்தபூமியில் லக்ஷ்மணர் மூர்ச்சையானபோது ஒரேடியாக அழ ஆரம்பித்து விட்டார்.

அவதாரங்கள் ஏன் இப்படிப் பண்ண வேண்டுமென்றால், அவர்கள் அவதரித்ததே ஜனங்களுக்கு வழி காட்டத்தான். ஜனங்கள் தங்களுடைய மனுஷ்ய சக்தியை வைத்துக் கொண்டே, சுவபாவத்தை ஒட்டிப் போயே, ‘நேச்ச'ரை ‘வயலண்டா'க பலாத்காரமாக எதிர்க்காமல், படிப்படியாக உயர்த்திக் கொண்டு போயே முடிவிலே பூர்ணநிலை அடைய வேண்டும்.

இதிலே அவர்களுக்கு வழிகாட்டுவதற்காகத்தான், பிரக்ருதி வேகங்களில் மாட்டிக் கொண்டு திண்டாடுகிற தாங்களும் அபிவிருத்தி அடைய முடியும் என்ற நம்பிக்கையையும் உத்சாகத்தையும் அவர்களுக்கு ஊட்டுவதற்காகத்தான் அவதாரங்களும் மனுஷ்யர் மாதிரி நடக்கிறது. நடிக்கிறது.

இந்த மாதிரி ஆசார்யாளும் மனுஷ்ய வேஷம் போட்டார். லோகமெல்லாம் அடிபட்டுப் போய் மனசும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து, இரண்டாவதாக இன்னொன்று இல்லாத அத்வைத பிரம்மமாகி நிறைந்து விடுகிற ஞான நிலையை உபதேசம் பண்ணத்தான் அவர் அவதாரம் பண்ணினார்.

அப்படியிருக்கும்போதே, மனுஷ்ய சுவபாவத்துக்கு அனுகூலமாக லோகத்தையும் நிஜம் மாதிரி, மனசையும் நிஜம் மாதிரி ஒப்புக்கொண்டே, இதெல்லாம் அடிபட்டுப் போகிற நிலைக்குப் படிப்படியாகக் கொண்டுபோகிற தினுசிலேயே அவர் வழி போட்டுக் கொடுத்திருக்கிறார்.

சகலத்தையும் நடத்துகிற சக்தி ஒன்று இருக்கிறது. பிரம்மத்தைத் தவிர வேறே எதுவும் இல்லை என்பதால், அதற்குள்ளேயேதான் இந்த காரிய மகாசக்தியும் இருக்கிறது என்று ஆகிறது. ஆகையால் நிர்குணமான பிரம்மத்தை உபாசிக்க முடியாதவர்கள் அதன் சக்தியிடம் மனசை பக்தியில் திருப்பிவிட்டால் அப்புறம் அதன் காரியமில்லாத சுயரூபத்தைப் பற்றிய ஞானத்தைப் பெற முடிகிறது.

லோக வியாபாரங்களைச் செய்கிற காரிய பிரம்மமே இந்த ஞானத்தையும் அனுக்கிரகித்துவிடுகிறது என்பதால் நம் ஆசார்யாள் பக்தி மார்க்கத்தைத் தம்முடைய ஞான மார்க்கத்துக்குப் பூர்வாங்கமாக வைத்து போஷித்து, விருத்தி பண்ணினார்.

இதற்காகத்தான் ஷண்மத ஸ்தாபனம் என்று தேவதா ஆராதனா மார்க்கங்களை ஸ்தாபிதம் பண்ணினார். அநேக பக்தி கிரந்தங்களைப் பண்ணினார். இந்த தேசத்தில் ஒரு மூலை முடுக்கு பாக்கி இல்லாமல் க்ஷேத்ராடனமும் தீர்த்தாடனமும் பண்ணி அங்கங்கே யந்திரங்களை ஸ்தாபித்தார். ஆலய பூஜாக்கிரமங்களை ஏற்படுத்திக் கொடுத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

12 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்