கருணை தெய்வம் கச்சாலீஸ்வரர்: மகாசிவராத்திரி பிப்.17

By ஜி.விக்னேஷ்

திருத்தலங்கள் என்றாலே தல புராணங்கள் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். அவ்வாறு புராணப் பின்னணி அல்லாத கோயில்களும் உண்டு. இக்கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள பல தெய்வச் சன்னதிகள் காரணமாக பல விதமான நற்பயன்கள் ஏற்படுவது கண்கூடு.

அப்படிப்பட்ட, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அரசர் அல்லாத சாமானியரால் கட்டப்பட்ட திருக்கோயில் சென்னை பாரீசில் உள்ள அரண்மனைக்காரத் தெருவில் அமைந்து அருள்பாலித்து வரும் அருள்மிகு செளந்தர நாயகி உடனுறை கச்சாலீஸ்வரர் திருக்கோயில்.

இக்கோயிலை நிர்மாணித்தவர் ஆங்கில ஆட்சியில் துபாஷி என்னும் மொழிபெயர்ப்புக் கலைஞராக வேலை பார்த்த தளவாய் செட்டியார். இத்திருக்கோயில் இங்கு எழப் பின்னணிக் காரணம் ஒன்று உள்ளது. காஞ்சியில் உள்ள கச்சபேசுவரரை தினசரி சென்று தரிசிப்பது அவரது வழக்கம். அன்றைய தினம் அவ்வாறு தரிசனம் முடிந்து, சென்னையை நோக்கிக் கிளம்பினார்.

அந்த நேரத்தில் பாலாற்றில் வெள்ளம் மிகுத்து வர, அவரால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. இதனால் சென்னையில் காத்திருந்த முக்கியமான அரசுப் பணியையும் நிறைவேற்ற இயலவில்லை. கவலையுற்றிருந்த அவரது கனவில் தோன்றிய கச்சாலீஸ்வரர், சென்னையிலேயே தனக்குக் கோயில் கட்டி அங்கேயே தினமும் வணங்குமாறு கூறினாராம்.

அதன் அடிப்படையில் இக்கோவில் எழுந்தது. சித்தி, புத்தி சமேதராக பஞ்சமுக கணபதி சிங்க வாகனத்தில் எழுந்தருளியுள்ளார்.

இத்திருக்கோயிலில் அமைந்துள்ள மூலவர் சிவபெருமானுக்கு கச்சபேசன் என்பது திருநாமம். பின்னர் மருவி கச்சாலீஸ்வரர் ஆனது. இந்த மூலவர் ஒன்றன் மீது ஒன்றாக அமைக்கப்பட்டுள்ள ஐந்து ஆசனங்களின் மீது எழுந்தருளியுள்ள திருக்கோலம். தரைக்கு மேல் ஆமை ஆசனம். அதன் மேல் எட்டு நாகங்கள் கொண்ட ஆசனம். அதற்கு மேல் சிம்ம ஆசனம், அதனைத் தொடர்ந்து யுகாசனம்.

இந்த ஆசனங்களுக்கு மேல் இறுதியாகக் கூர்ந்தும், மலர்ந்தும் காணப்படும் தாமரை ஆசனம். இதன் மேல் லிங்கத் திருமேனியாகக் காட்சி அளிக்கிறார் சிவபெருமான். இப்பெருமான் சன்னதி கொண்டுள்ள இடத்திற்கு மேற்கூரையாகப் பன்னிரெண்டு சூரியத் தூண்கள் மேல், பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் மூன்று சிகரங்களாகக் காட்சி அளிக்கின்றனர்.

சிவபெருமானைப் பொறுத்தவரை அனைத்துத் திருத்தலங்களிலும், லிங்க ரூபமாகவே காட்சி தருகிறார். ஆனால், இத்திருக்கோயிலில் தான் மூலலிங்கத்தின் பின்புறம், ஐந்து முகங்களுடன் சிவபெருமான், சதாசிவ மூர்த்தியாக, மனோன்மணித் தாயாருடன் காட்சி அளிக்கிறார். இத்திருக்கோயிலில் வேறு எங்கும் காணக் கிடைக்காத காட்சியாக செளந்தரவல்லி நாயகியுடன் அலைமகள் மகாலட்சுமியும், கலைமகள் சரஸ்வதியும் காட்சி அளிக்கின்றனர்.

ஆறுமுகன், அபூர்வமான நவக்கிரக அமைப்பு, துர்க்கை, கால பைரவர் உட்பட பல சன்னதிகள் கொண்ட இத்திருக்கோயிலில் மகாசிவராத்திரி பூஜை பிரபலமானது.

சைவத் திருத்தலங்களுக்கு மகாசிவராத்திரி அன்றும் வைணவத் திருத்தலங்களுக்கு ஏகாதசி அன்றும் சென்று வணங்கினால் அந்த ஆண்டு முழுவதும் தினந்தோறும் கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்கியதற்கான பலன்கள் கிடைக்கும்.

மாதம்தோறும் சிவராத்திரி வருவது சிறப்பென்றாலும், ஆண்டுக்கு ஒரு முறை வரும் சிறப்பு மிகுந்த மகாசிவராத்திரி அன்று, அபிஷேகப் பிரியனான சிவனுக்கு இரவு முழுவதும் கால முறை அபிஷேகங்கள் நடைபெறும். நித்திய, மாத, பட்ச, யோக, மகா சிவராத்திரி என்று சிவராத்திரி ஐந்து வகைப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE