துலாம்
எல்லோரும் விரும்பும்படி இணக்கமாகப் பேசி வழி நடத்திச் செல்வதில் வல்லவர்களே! குரு உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் நிற்கும்போது இந்த ஜய வருடம் பிறப்பதால் கடந்த வருடத்தில் முடிக்க முடியாத விஷயங்கள் இந்த வருடத்தில் முடிவடையும். கணவன், மனைவிக்குள் இருந்து வந்த சலசலப்புகள் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துவீர்கள்.
ஜூன் 19 முதல் குரு, 10-ம் இடத்தில் அமர்வதால் வேலைச்சுமை அதிகமாகும். சிலர் உங்களது பெயரை தவறாகப் பயன்படுத்தக்கூடும். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். பிள்ளைகளின் திருமண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது. ஜூலை 11 வரை உங்கள் ராசியிலேயே ராகு நிற்பதால் வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. நாய், பூனையிடம் கவனமாக இருப்பது நல்லது. ஜூலை 12 முதல் ராகு ராசியை விட்டு விலகுவதாலும், கேது 6-ம் வீட்டில் வந்தமர்வதாலும் பழைய பிரச்சினைகளைத் தீர்க்க வழி கிடைக்கும்.
ஷேர் மூலம் பணம் வரும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். நவம்பர் 1 வரை ஜென்மச்சனி தொடர்வதால் தோலில் நமைச்சல், தலைச்சுற்றல், மந்தம், மறதி வந்து நீங்கும். நவம்பர் 2-ம் தேதி முதல் மருந்து, மாத்திரை குறையும். ஏமாந்து போன தொகை கைக்கு வரும். ஆனால் மூட்டு வலி, கழுத்து வலி வந்து நீங்கும். உங்கள் ராசிநாதன் சுக்ரன் 5 -ல் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஜய வருடம் பிறப்பதால் மகளுக்குத் தள்ளிப்போன திருமணம் முடியும். மகனின் கோபம் குறையும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். செவ்வாய் வக்ரம் பெற்று 12-ல் மறைந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் வீடு, மனை வாங்கும் போது மூலப்பத்திரத்தைச் சரிபார்ப்பது நல்லது.
சகோதரர்களால் அலைச்சல் இருக்கும். சின்னச் சின்ன மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் அதிக முதலீடுகள் வேண்டாம். கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் லாபம் உண்டு. ஜூலை மாதத்திலிருந்து புதுப் பங்குதாரர்கள் வருவார்கள். உத்தியோகத்தில் உங்கள் நிலையைத் தக்க வைத்துக் கொள்ளக் கடுமையாகப் போராட வேண்டி வரும். டிசம்பர் மாதத்திலிருந்து மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சிலருக்கு வெளிநாட்டிலும் வேலை கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிரகங்கள்: புதன் 73% ஜூலை முதல் கேது 85%
அதிர்ஷ்ட தெய்வம்: வெங்கடாஜலபதி
தவிர்க்க வேண்டியவை: காலம் கடந்து சாப்பிடுதல், அலுத்துக் கொள்ளுதல்
பெண்களுக்கு மாமனார், மாமியார் பிரச்சினை தீரும், சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கத் தொடங்குவீர்கள்.
வாய்ப்புகள் அதிகம்: பழைய கடனில் கொஞ்சம் தீர, வழக்குகள் முடிய.
மதிப்பெண்: 60 %
விருச்சிகம்
சூட்சுமப் புத்தியால் சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுபவர்களே! கடந்த வருடத்தில் அடுக்கடுக்காகப் பல பிரச்சினைகளைச் சந்தித்தீர்கள். குடும்பத்திலும் பிள்ளைகளால் நிம்மதி இழந்தீர்கள். சிறுசிறு விபத்துகள், உறவினர், நண்பர்களால் தவிர்க்க முடியாத செலவுகள் எனப் பல வகையிலும் அலைக்கழிக்கப்பட்டீர்கள்! ஆனால் இந்த ஜயவருடம் உங்களுக்கு லாப வீட்டில் பிறப்பதால் உற்சாகம் பிறக்கும்.
தாழ்வுமனப்பான்மை நீங்கும். தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைக் கொடுத்து முடிப்பீர்கள். அதிக வட்டிக் கடனிலிருந்து மீள குறைந்த வட்டிக்கு கடன் உதவி கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். சுக்கிரன் சாதகமாக இருக்கும் போது இந்த வருடம் பிறப்பதால் உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். நகரை ஒட்டியுள்ள பகுதியில் காலி மனை வாங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். அவர்களை எதிர்பார்த்த பாடப்பிரிவில் சேர்ப்பீர்கள்.
தொழிலதிபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஜூன் 19 முதல் குரு உங்கள் ராசிக்கு, 9 இல் அமர்வதால் குடும்ப வருமானம் உயரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனக்கசப்புடன் பேசாமல் இருந்து வந்த பழைய சொந்தங்கள் தேடி வரும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். இந்த வருடம் பிறக்கும்போது செவ்வாய் 11-ம்
வீட்டில் நிற்பதால் உடன்பிறந்தவர்களுடன் இருந்த மோதல் போக்கு நீங்கும். உங்கள் ராசிக்கு 12-ல் அமர்ந்து உங்கள் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கும் ராகு, ஜூலை 12 முதல் லாபவீட்டில் அமர்வதால் திடீர் பணவரவு உண்டு. தடைப்பட்ட வேலைகள் உடனே முடியும். உங்களுக்குள் இருந்த மூர்க்கத்தனம் விலகும். புது வேலை கிடைக்கும். கேது ஜூலை 12 முதல் 5-ல் அமர்வதால் கர்ப்பிணிப் பெண்கள் இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்சினையில் உங்கள் சக்தியை வீணடிக்க வேண்டாம்.
நவம்பர் 1-ம் தேதி வரை விரயச்சனி தொடர்வதால் திடீர் பயணங்களால் சோர்வடைவீர்கள். நவம்பர் 2-ம் தேதி முதல் ஜென்மச்சனி தொடங்குவதால் தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. கொழுப்பு, எண்ணெய்ப் பதார்த்தங்களைத் தவிர்க்கப் பாருங்கள். வியாபாரத்தில் செப்டம்பர் முதல் லாபம் அதிகரிக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். புதிய பங்குதாரர்கள் வருவார்கள். உத்யோகத்தில் எதிராகச் செயல்பட்ட அதிகாரி மாறுவார். சம்பளம் உயரும்.
அதிர்ஷ்ட கிரகங்கள்: குரு 90% செப்டம்பர் முதல் செவ்வாய் 70%
அதிர்ஷ்ட தெய்வம்: மருதமலை முருகன்
தவிர்க்க வேண்டியவை: முன்கோபம், எடுத்தெறிந்து பேசுதல்
பெண்களுக்கு செல்வம், செல்வாக்கு கூடும், வேலை கிடைக்கும்
வாய்ப்புகள் அதிகம்: வீடு, மனை வாங்க, தொழில் தொடங்க
மதிப்பெண்: 85%
தனுசு
தடுமாறி அழுபவர்களைத் தாங்கி நிற்கும் விழுதுகளே! உங்களுக்கு 10-ம் ராசியில் இந்த வருடம் பிறப்பதால் பல வகையிலும் முன்னேறுவீர்கள். இலவு காத்த கிளியாக இனி காத்திருக்காமல் முதல் முயற்சியிலேயே பல வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். கணவன், மனைவிக்குள் ஒரு மௌன யுத்தம் இருந்ததே! ஒரே வீட்டில் இருந்தாலும் ஒட்டு, உறவு இல்லாமல் இருந்த நிலை மாறும்.
அன்னியோன்யமும் அதிகமாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வருமானம் உயரும். ஜூன் 19 முதல் உங்கள் ராசிநாதன் குரு, 8-ல் அமர்வதால் வேலைச்சுமை அதிகமாகும். செலவுகளும் அடுத்தடுத்து இருக்கும். பழைய கடனை பைசல் செய்வதற்குப் பழைய சொத்தை விற்பீர்கள். உங்கள் பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் வலுவாக நிற்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் புதுத்தொழில் தொடங்க உதவிகள் கிடைக்கும். வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டில் வேலை அமையும்.
பிள்ளைகளால் சமூகத்தில் ஒருபடி அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். வழக்கில் வெற்றி உண்டு. ஜூலை 12 முதல் கேது 4-ம் வீட்டிலும், ராகு 10-ம் வீட்டிலும் நுழைவதால் வீடு மாறவேண்டிய சூழ்நிலை உருவாகும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் அதிகமாகும். நவம்பர் 1-ம் தேதி வரை சனி, லாப வீட்டில் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். மற்றவர்களால் முடியாத விஷயங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். நவம்பர் 2 முதல் ஏழரைச் சனி தொடங்குவதால் இனந்தெரியாத மனக்கவலைகள் வந்து நீங்கும்.
நட்பு வட்டம் மாறும். கூடாப் பழக்கவழக்கம் உள்ளவர்களைத் தவிர்ப்பது நல்லது. சமீப காலத்தில் அறிமுகமானவர்களை நம்பி வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். அயல்நாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. சுக்ரன் சாதகமான நட்சத்திரத்தில் செல்லும் போது இந்த வருடம் பிறப்பதால் தள்ளிப் போன திருமணம் முடியும். எதிர்பாராத பணவரவு உண்டு. பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமானாலும் அதிகாரிகள் உங்களுக்கு ஒத்துழைப்பார்கள்.
அதிர்ஷ்ட கிரகங்கள்: செவ்வாய் 75% சூரியன் 60%
அதிர்ஷ்ட தெய்வம்: சூரிய நமஸ்காரம்
தவிர்க்க வேண்டியவை: வதந்திகளை நம்ப வேண்டாம், கூடுதல் செலவு
பெண்களுக்கு புது நட்பு மலரும், புதிய பொறுப்புகள் ஏற்பீர்கள்
வாய்ப்புகள் அதிகம்: இடம் மாற்றம், பழைய சிக்கல் தீர
மதிப்பெண்: 58%
மகரம்
மன்னிப்பதால் மகிழ்ச்சியை அடிக்கடி உணருபவர்களே! கடந்த விஜய வருடம் உங்களை எல்லா வகையிலும் புரட்டிப் போட்டது. எதைத் தொட்டாலும் பிரச்சினையானது, பணப்பை வறண்டது! நல்லது செய்யப் போய் கெட்ட பெயர்தான் மிஞ்சியது! இனி இந்த அவல நிலையெல்லாம் மாறும். உங்கள் ராசிக்கு 2-ல் சுக்ரன் வலுவாக அமர்ந்திருக்கும்போது இந்த ஜய வருடம் பிறப்பதால் வர வேண்டிய பணமெல்லாம் வந்து சேரும்.
அரைகுறையாக நின்றுபோன வேலைகளையெல்லாம் உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். பிரபலங்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை ஆகியவை அமையும். வங்கிக் கடன் கிட்டும். பிள்ளைகளால் மரியாதை கூடும். புது வேலை கிடைக்கும். ஜூன் 19-ம் தேதி முதல் குரு 7-ம் வீட்டில் அமர்வதால் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும்.
விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். பிள்ளைகளால் இருந்து வரும் பிரச்சினைகள் தீரும். பொறுப்பாக நடந்துகொள்வார்கள். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள் உடனே முடியும். வழக்குகளில் இருந்த தேக்க நிலை மாறும். ஜூலை 12-ம் தேதி முதல் கேது 4-ம் வீட்டை விட்டு விலகி 3-ல் அமர்வதால் தாயாரின் உடல் நிலை சீராகும். புதிய திட்டங்கள் நிறைவேறும். பழுதான வாகனத்தை விற்று விட்டுப் புது வாகனம் வாங்குவீர்கள்.
ஜூலை 11 வரை ராகு 10-ம் இடத்தில் நிற்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை கூடும். உத்யோகத்தில் பிடிப்பற்ற போக்கு காணப்படும். வீண் பழி ஏற்பட்டு விலகும். ஜூலை 12-ம் தேதி முதல் ராகு 9-ம் வீட்டில் நுழைவதால் வீண் செலவுகள், அலைச்சல், தந்தையுடன் வீண் விவாதம், பிதுர்வழி சொத்துப் பிரச்சினைகள் வந்து செல்லும். நவம்பர் 1-ம் தேதி வரை உங்கள் ராசிநாதன் சனி 10-ல் நிற்பதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். என்றாலும் உத்யோகத்தில் வேலைச்சுமை இருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். நவம்பர் 2-ம் தேதி முதல் சனிபகவான்
11-ம் வீட்டில் நுழைவதால் பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வியாபாரத்தில் நஷ்டங்களிலிருந்து விடுபடுவீர்கள். லாபம் அதிகரிக்கும். புகழ் பெற்ற புது நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வீர்கள். பிரபலங்கள் வாடிக்கையாளர்களாவார்கள். புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சம்பளம் உயரும். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
அதிர்ஷ்ட கிரகங்கள்: ஜூன் முதல் குரு 85% சுக்ரன் 69%
அதிர்ஷ்ட தெய்வம்: அருணாசலேஸ்வரர்
தவிர்க்க வேண்டியவை: குடும்ப ரகசியங்களை வெளியிட வேண்டாம், பழைய சோகங்களை அசை போடுவது.
பெண்களுக்கு வசதி வாய்ப்புகள் பெருகும், நினைத்தது நிறைவேறும்.
வாய்ப்புகள் அதிகம்: மரியாதை அதிகரிக்க
மதிப்பெண்: 93%
கும்பம்
கொடுத்ததைத் திரும்பக் கேட்டால் தப்பாகி விடுமோ என்று நினைப்பவர்களே! உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் குரு அமர்ந்திருக்கும்போது இந்த ஜய வருடம் பிறப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். பிரிந்து கிடந்த குடும்பம் ஒன்றுசேரும். 13.7.2014 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் செவ்வாய் நிற்பதால் அதுவரை பயணங்களால் செலவுகள் அதிகமாகும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். ஜூன் 19 வரை குரு சாதகமாக இருப்பதால் பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள்.
அவர்களின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். ஜூன் 19-ம் தேதி முதல் குரு 6-ல் மறைவதால் மற்றவர்களுக்குப் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். சிலர் வீண் பழி சுமத்த முயல்வார்கள். தோற்றுவிடுவோமோ என்ற அவநம்பிக்கையும் வந்துபோகும். அக்டோபர், நவம்பர், டிசம்பர் மற்றும் மார்ச் ஆகிய மாதங்களில் உங்கள் யோகாதிபதி சுக்ரனின் போக்கு சாதகமாக இருப்பதால் தடைப்பட்ட காரியங்கள் விரைந்து முடியும்.
ஓரளவு நிம்மதி, திடீர் பணவரவு, புதுப் பொறுப்புகள் வந்து சேரும். ஜூலை 11 வரை கேது உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் நிற்பதால் தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஷேர் மூலமாகப் பணம் வரும். ஆனால் ராகு 9-ம் வீட்டில் நீடிப்பதால் வீண் விரயம், தந்தைக்கு வீண் டென்ஷன் வந்து செல்லும். ஜூலை 12-ம் தேதி முதல் கேது உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டிலும், ராகு 8-லும் மறைவதால் வீண் சந்தேகம், எதிலும் நம்பிக்கையின்மை, பார்வைக் கோளாறு, பல் வலி, பேச்சால் பிரச்சினைகள் வந்து நீங்கும்.
நவம்பர் 1-ஆம் தேதி வரை உங்கள் ராசிநாதன் சனிபகவான் 9-ம் வீட்டில் நிற்பதால் இடையூறுகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். பிதுர்வழி சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். நவம்பர் 2-ம் தேதி முதல் 10-ம் வீட்டில் சனி நுழைவதால் வீண் வதந்திகள், அக்கம்-பக்கம் வீட்டாருடன் பிரச்சினைகள் வந்தாலும் புதிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். திடீரென்று அறிமுகமாகுபவரை நம்பிப் புது முதலீடுகள் செய்ய வேண்டாம். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். என்றாலும் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும்.
அதிர்ஷ்ட கிரகங்கள்: புதன் 85% சுக்ரன் 67%
அதிர்ஷ்ட தெய்வம்: விநாயகர்
தவிர்க்க வேண்டியவை: கௌரவச் செலவுகள், பிறர் விஷயங்களில் தலையிடுதல்
பெண்களுக்கு புதியவர்களிடம் கவனம் தேவை
வாய்ப்புகள் அதிகம்: கல்வி, உத்தியோக முயற்சி வெற்றியடைய
மதிப்பெண்: 51%
மீனம்
அறிந்தும் அறியாததைப் போல் இருந்து எதையும் செய்து முடிப்பவர்களே! கடந்த விஜய வருடம் உங்களைப் பல வகையிலும் பந்தாடியது! ஜூன் 19 முதல் உங்கள் ராசிநாதன் குரு 5-ல் உச்சமாகி அமர்வதால் அதுமுதல் அடிப்படை வசதிகள் பெருகும். குடும்பத்தில் அமைதி திரும்பும். பிரிந்தவர்கள் ஒன்றுசேருவீர்கள். பிள்ளைகளிடமிருந்த கோபம் நீங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.
வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அல்லது அறை அமைப்பீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்குக் கூடி வரும். மகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். மகனின் பொறுப்பற்ற போக்கு மாறும். பூர்வீகச் சொத்தில் சேர வேண்டிய பங்கை கேட்டு வாங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.
ஜூலை 12 முதல் கேது உங்கள் ராசிக்குள்ளேயும், ராகு உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டிலும் அமர்வதால் வாழ்க்கையே ஒரு பெரிய போராட்டமாக இருப்பதாக அவ்வப்போது அலுத்துக்கொள்வீர்கள். பழைய பிரச்சினைகள் போல வேறு ஏதேனும் இப்போது வந்துவிடுமோ என்று அஞ்சுவீர்கள். நவம்பர் 1-ம் தேதி வரை அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் கடன் பிரச்சினையால் சேர்த்து வைத்த கௌரவத்திற்குக் கலங்கம் ஏற்படுமோ என்று கலங்குவீர்கள்.
நகை, பணம், முக்கிய சொத்து ஆவணங்களையெல்லாம் வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைப்பது நல்லது. வீட்டில் களவு போக வாய்ப்பிருக்கிறது. நவம்பர் 2-ம் தேதி முதல் சனி உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் நுழைவதால் பிரச்சினைகள் வெகுவாகக் குறையும். குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். வியாபாரத்தில் ஜூன் மத்தியப் பகுதியிலிருந்து லாபம் கணிசமாக உயரும். என்றாலும் நவம்பர் 1 வரை அஷ்டமத்துச் சனி தொடர்வதால் வேலையாட்கள், பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும்.
ஜூன், ஜூலை, டிசம்பர், ஜனவரி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் இடமாற்றம், முகவரி இல்லாத குற்றச்சாட்டுச் கடிதங்களின் அடிப்படையில் சின்ன சின்ன விசாரணைகள் இருந்ததே! இனி ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். உங்களின் திறமைக்கு அங்கீகாரம் உண்டு. சம்பளம் உயரும்.
அதிர்ஷ்ட கிரகங்கள்: ஜூன் 19 முதல் குரு 97% செப்டம்பர் முதல் செவ்வாய் 85%
அதிர்ஷ்ட தெய்வம்: மீனாட்சியம்மன்
தவிர்க்க வேண்டியவை: அலட்சியம், எதிர்மறை எண்ணங்கள்
பெண்களுக்கு குழந்தை பாக்கியம், தங்க ஆபரணம் சேரும்
வாய்ப்புகள் அதிகம்: கடன் தீர, வேலை கிடைக்க.
மதிப்பெண்: அக்டோபர் வரை 55% நவம்பர் முதல் 85%
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
19 hours ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago