பத்து அறங்கள்

By விஜி சக்கரவர்த்தி

இவ்வுலகத்து உயிர்களை எது இன்னல்களிலிருந்து விடுவித்து, முக்தியுலகுக்கு அழைத்துச் செல்கிறதோ அது தருமம் எனப்படும். கிறிஸ்தவ மதம் பத்து கட்டளைகளைக் கூறுகிறது. ஜைனமதம் தசதருமம் அதாவது பத்துஅறம் அல்லது பத்து உயர் பண்புகள் என மனிதருக்கான தருமத்தைக் கூறுகிறது.

இவை ஆன்மாவின் குணங்களாகும். பொறுமை, பணிவு, நேர்மை, தூய்மை, உண்மை, அடக்கம், தவம், தியாகம், பற்றின்மை, கற்புடமை ஆகிய பத்தும் உத்தம அறங்களாகும்.

“மெய்மை பொறையுடமைமென்மை தவம் அடக்கம்

செம்மை ஒன்றின்மை துறவுடமை-நன்மை

திறம்பா விரதம் தரித்தலோடு இன்ன

அறம் பத்தும் ஆன்றகுணம்” -என்கிறது அறநெறிச்சாரம்.

பொறுமை

இது அனைவருக்கும் இருக்க வேண்டும். துறவிகள்கூடத் தங்களை யாராவது கிண்டல்,கேலி,வசை செய்தாலும் பொறுமை காக்க வேண்டும். இந்தப் பக்குவம் ஆன்ற பொறுமையெனப்படும். “அரைப்பினும் சீதமாம் சந்தனம் போலவும்” என மேருமந்திரபுராண வாமனரும். ‘அகழ்வாரைத்தாங்கும் நிலம்போல’யென வள்ளுவரும் பொறுமையைக் கடைபிடிக்கக் கூறுகிறார்கள்.

பணிவு

பிறப்பு, குலம், வலி, செல்வம், வனப்பு, சிறப்பு, தவம் உணர்வு போன்றவற்றால் செருக்கு இருக்கக் கூடாது. மற்றவர் தகாத முறையில் நடந்தாலும் பணிவு என்ற ஆன்றகுணம் இருக்க வேண்டும்.

நேர்மை

இது ஒளிவுமறைவின்றி இருத்தலாகும். வள்ளலாரும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமைக்கு வேண்டினார். மனம்,சொல், செய்கைகளால் ஒழுக்கக்கேடற்ற நிலை வேண்டும். உள்ளதைச் சொல்லும் ஆன்ற நேர்மை வேண்டும்.

தூய்மை

தூய எண்ணங்களோடு இருப்பது. உடலோடும் உள்ளத்தோடுமான தூய்மை, ஆன்ம தூய்மை ஆகும்.

சத்தியம்

கட்டுப்பாட்டுடனும் உண்மையான வாய்மையுடன் வாழ்தல் வேண்டும்.வாய்மையே வெல்லும்.

அடக்கம்

ஐம்பொறிகளை அடக்கி அவற்றை நெறிப்படுத்தி, சிந்தனை சிதறாமல் இருத்தல் அடக்கம் ஆகும். “அடக்கம் அமரருள் உய்க்கும்” என்கிறார் வள்ளுவர். சீவக சிந்தாமணி, “ஐவகைப் பொறியும் வாட்டி ஆமையின் அடங்கி” என்கிறது. அடக்கம் வினைகளைச் சுட்டெரிக்க நெருப்பு போன்றது ஆகும்.

தவம்

இது உயிரோடு சேர்ந்த வினைகளை அழிக்கும்.

“கொள்கைக் கட்டழல் உள்ளூற மூட்டி

மாசுவினை கழித்த மாதவர் போல” எனப் பெருங்கதை ஆசிரியர் கொங்குவேளிர் கூறுகிறார். தவத்தால் தீய எண்ணங்கள்,வினைகள் அழியும். எனவே தான் தவத்தை ஜைனம் வலியுறுத்துகிறது.

தியாகம்

மற்றவர்களுக்குத் தம் பொருளை அளிப்பது தியாகமாகும். அக, புறப் பற்றுகளில் இருந்து விடுபடுவது தியாகம் என்று முனிவர் ஜினசேனர் சொல்கிறார்.

பற்றின்மை

பொருட்கள் மீது எனது, என்னுடையது எனும் எண்ணம் மாறி, பற்றில்லா நிலை வர வேண்டும். என்ன கொண்டுவந்தோம் என்ன கொண்டு செல்ல எனும் மனம் வேண்டும்.

கற்புடமை

இது பிரமசர்யம்.இந்தத் தருமம் தூய தர்மம் ஆகும். மெய்,மொழி,சிந்தனை மூலம் சிற்றின்பத்தைத் தவிர்த்தல் வேண்டும். இது உயிரில் உறைதல் ஆகும்.

ஒவ்வொரு ஆன்மாவும் தன் ஆன்மாவின் குணத்தை அறிந்து, புரிந்து அதிலேயே தோய்ந்திருந்தால் முடிவிலா சுகத்தைப் பெற முடியும். உத்தமமான பத்து அறங்களை ஜைனர்கள் ஆண்டுதோறும் பத்தறப்பெரு விழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE