ஞானத்தின் புன்னகை

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் வடக்கே இமாலயத்தைச் சேர்ந்த இளவரசர் ஒருவர் பேரின்ப முக்தியை அடையும் பொருட்டு அரியணையைத் துறந்தார். அன்பு மனைவி, அருமைக் குழந்தையையும் விட்டு நாட்டைவிட்டு வெளியேறி காடு மலைகளைச் சுற்றி நிரஞ்சனா என்னும் நதி தீரத்தில் உள்ள உருவேலா என்ற கிராமத்தை அடைந்தார்.

ஞானத்தை அடையும் பல்வேறு முயற்சிகளில் தோல்வியுற்ற பிறகு அங்கே வந்த அவர், ஒரு மரத்தடியில் உண்மையின் பொருளை அறிவதற்காக தியானத்தில் அமர்ந்தார். அன்ன ஆகாரத்தை துறந்தார். எலும்பும் தோலுமாக ஆனால் தேஜஸுடன் இருந்த அவரை கண்ட ஒரு பெண்மணி தேனும் பால் சோறுடன் கூடிய இன்னமுது படைத்தார்.

ஊட்டமிக்க உணவினால் புத்துணர்ச்சி பெற்ற அவர் நிஷ்டையைத் தொடங்கினார். அவரை விட்டு அறியாமை எனும் இருள் விலகியது.சத்திய சன்மார்க்க நெறியினை உணர்ந்தார். விழிப்புணர்ச்சி பெற்றார். கழிவிரக்கம் கொண்டார். அவர்தான் சித்தார்த்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட புத்தன்.

முக்தி அடையும் மார்க்கம்

49 நாள் கழித்து வைகாசி மாதத்தில் நிறைந்த பவுர்ணமி அன்று கி.மு.528 ஆம் ஆண்டு ஞானப் பேரொளி பெற்றார். இந்த நாள்தான் புத்த பூர்ணிமாவாகக் கொண்டாடப்படுகிறது. சமத்துவத்தையும் முக்தி அடையும் மார்க்கத்தையும் மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.

இதுதான் உருவேலா என்றும் சம்போதி என்றும் அழைக்கப்பட்ட புத்த கயா பிறந்த கதை .

இன்று சர்வதேச அளவில் புகழ் பெற்று நிற்கும் இந்த ஊர், புத்த மதத்தினரின் புனித மெக்காவாகும். தனது வாழ்நாளில் ஒரு தடவையாவது இங்கு வர வேண்டும் என்பது ஒவ்வொரு பவுத்தனின் லட்சியமாக ஆகி விட்டது. ஒரு காலத்தில் புத்தரை விஷ்ணுவின் அவதாரமாக கருதிய இந்துக்களுக்கும் இந்த இடம் புனிதத்தலமாக விளங்குகிறது.

இங்குள்ள அற்புதமான கட்டிடக்கலை மதச்சார்பற்றவர்களையும் ஈர்க்கிறது. ஒரு பழமையான கோயிலினுள் நுழைவதும், அதைவிட தொன்மையான மரத்தடியில் நிற்பதும் ஒரு வித சிலிர்ப்பை உண்டாக்குகிறது. இந்த புனிதத் தலத்தில் பழையதும் புதியதுமாகிய பல நினைவுச் சின்னங்கள் உலகத்தின் எல்லா பிரிவினரையும் தன்பால் கவர்கின்றது.

மகாபோதி கோயில் வளாகம்

தூரத்திலிருந்தே கோபுரம் தெரிகிறது. செங்கல்லால் ஆனது. இந்தியாவில் இது போன்ற கட்டிடங்களில் தொன்மையான கட்டிடமாக இதுவே கருதப்படுகிறது. 180 அடி உயரமும் 60அடி அகலமும் கொண்ட பிரமிட் வடிவிலான இந்தசெங்கற் கோயில் கண்களுக்கு ஒரு விருந்து.

மத்திய கோபுரம் மலர் வடிவமைப்புகளையுடைய பல சிறிய கோபுரங்களால் சூழப்பட்டுள்ளது. கோயிலினுள் நுழைந்தவுடன் நம் கவனத்தைத் திருப்புவது இங்கு இருக்கும் அசாதாரண அமைதிதான். கிட்டத்தட்ட புத்த கயாவே அப்படித்தான் என்று சொல்லலாம். கருவறையின் உள்ளே இருப்பது கருங்கல்லால் வேயப்பட்டு தங்கப்பூச்சுடன் மிளிரும் புத்தரின் சிலை. பூமிஸ்பர்ச நிலையில் அமர்ந்து அருள் பாலிக்கிறார். இதுதான் அவர் ஞானம் பெற்ற இடம் . கோயில், செதுக்கப்பட்ட கல் வேலியினால் சூழப்பட்டுள்ளது.தியானம் செய்வதற்கு அழகான பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.

சுவர்களில் ஜாதகக் கதைகள்

யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக பாரம்பரிய தளமான இது, கோயில் சுவர்களில் ஜாதகக் கதைகளும் புத்தரின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. சிவப்பு அங்கியுடன் புத்த பிட்சுக்களும், கீழை நாடுகளிலிருந்து பக்தர்களும் கோயிலின் மேற்கு வாயிலிற்கும் போதி மரத்திற்கும் இடையே காகித பூக்களுடனும் விளக்குகளுடனும் பிரார்த்தனை செய்கிறார்கள்.

இந்த வளாகத்தில்தான் புத்தர் ஞானம் பெற்ற பின்பு ஏழு வாரங்கள் தங்கியிருந்தாராம்.அவர் இருந்த ஒவ்வொரு இடமும் (ஒரு இடத்தில் ஒரு வாரம்) சிறப்பு செய்யப்பட்டிருக்கின்றன. அடுத்தது புகழ் பெற்ற போதி மரம்.வெளி பிரகாரத்தில் சுற்றாலையில் உள்ளது. ஜாதகக் கதைகளில் பல இடங்களில் இது இடம் பெறுகிறது.இங்கேதான் புத்தர் முதல் வாரத்தை செலவழித்தார். இந்த மரம் பல தடவை வெட்டப்பட்டது.

முதலில் இதனுடைய கன்றைத்தான் அசோகர் தன்னுடைய பிள்ளைகள் மூலமாக இலங்கைக்கு அனுப்பினார். பிற்காலத்தில் சசாங்கன் என்ற வங்க அரசன் இதை வேருடன் அழித்தபோது இலங்கையிலிருந்து அப்போது நடப்பட்ட மரத்தின் கன்றுதான் கொண்டு வரப்பட்டு நடப்பட்டது. இது ஒவ்வொரு முறையும் தழைத்து வளர்ந்தது .

இப்போது இருப்பது ஐந்தாவது தலைமுறை மரம். மணி ஓசை காற்றில் எதிரொலிக்கிறது.மரத்தைச் சுற்றி அசோகர் எழுப்பிய சிகப்பு மணற்பாறையிலான பெரிய மேடை . வஜ்ராசனம் (அ) வைர சிம்மாசனம் (அ) ஞான பீடம் என்று போற்றப்படும் இந்த மேடையைச் சுற்றியுள்ள உலோக விளக்குகளால் மேடையே தகதகவென்று மினுமினுக்கிறது. அதற்கு முன்னால் மகானின் பெரிய அடிச்சுவடுகள் கருங்கல்லால் செதுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு காலிலிருக்கும் சக்கரமும் தம்ம சக்ர ப்ரவர்தனத்தை குறிக்கிறது. (தர்ம சக்கரத்தை சுற்ற வைப்பது).இப்படி ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. கடைசியாக வருவது ராஜ்யதானா மரம். சாக்யமுனி ஏழாவது வாரத்தை இதன் கீழ்தான் செலவழித்தார் என்கின்றன குறிப்புகள்.அந்தச் சமயத்தில் பர்மாவிலிருந்து வந்த இரு வணிகர்கள் அவரை தஞ்சமடைந்தனர். அதிலிருந்துதான் புத்தம் சரணம் கச்சாமி என்று பதம் உருவாகியது. இதன் அர்த்தம் ‘நான் புத்தருக்கு எனை சமர்ப்பிக்கின்றேன்’

உலக பவுத்த மையம்

புத்த கயாவின் நவீனமானதும் பெரியதுமான நினைவு சின்னம், 80 அடி உயரமுள்ள புத்தர் சிலையாகும். ஜப்பான் நாட்டின் பரிசாக 1989-ல் நிறுவப்பட்ட இது தலாய் லாமாவால் திறக்கப்பட்டது.வெள்ளை மணற்கல்லால் ஆனது. சுருக்கமாகச் சொன்னால் புத்த கயா வளமான கடந்த காலத்தையும் அதை விட உயர்ந்த நிகழ்காலத்தையும் பிரதிபலிக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE