உலகுக்கு ஒளி தரும் பகலவனைப் பொங்கல் வைத்து வழிபட்டத்தைத் தொடர்ந்து மற்றுமொரு வழிபாடும் தை மாதத்தில் வருகிறது. அதுதான் ரத சப்தமி. சூரியன் தெற்கு நோக்கிய தன் பயணத்தை முடித்துக்கொண்டு ரத சப்தமியன்று வடக்கு நோக்கிப் பயணப்படுகிறார்.
அன்று முதல் கதிரோன் தன் ஒளிக்கற்றையின் அளவைச் சிறுகச் சிறுக அதிகரித்து, பூமியின் வெம்மையைக் கூட்டுகிறான். அதைக் குறிக்கும்விதமாகவும் அன்று சூரியனுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. உத்திராயண தை அமாவாசைக்குப் பிறகு வரும் ஏழாவது நாள் ரத சப்தமியாகக் கடைபிடிக்கப்படுகிறது.
ரத சப்தமியன்றுதான் சூரியன் உதித்தார், அவரது ஜெயந்திநாளே ரத சப்தமி என்றும் சொல்லப்படுகிறது. ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலா வருவதால் திதிகளில் ஏழாவது நாள் சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
சூரியன் உதயம்
சூரியன் அவதரித்தது குறித்து ஒரு கதை உண்டு. காஷ்யப மகரிஷியின் மனைவி அதிதி, கர்ப்பம் தரித்திருந்த நேரம் அது. அதிதி தன் கணவனுக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தாள். அப்போது அந்தணர் ஒருவர் யாசகம் கேட்டு வந்தார். நிறைமாத கர்ப்பிணியான அதிதி, தன் கணவனுக்கு உணவு பரிமாறிய பிறகு, தளர் நடையுடன் வந்து அந்தணருக்கு உணவு அளித்தாள்.
அதிதியின் இந்தச் செயலால் அந்தணர் கோபம் கொண்டார். தர்மத்தைப் புறக்கணித்துவிட்டு கர்ப்பத்தைக் காப்பதற்காக அதிதி மெதுவாக நடந்து வந்ததால், அந்தக் கர்ப்பம் கலைந்து போகட்டும் என்று சாபம் இட்டார். அந்தணரின் சாபம் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிதி, தன் கணவரிடம் நடந்தவற்றைச் சொன்னாள். காஷ்யப முனிவர், அமிர்தம் நிறைந்த உலகில் இருந்து என்றைக்கும் அழிவில்லாத மகன் பிறப்பான் என்று வாக்களித்தார். காஷ்யபரின் வாக்குப்படி ஒளி பொருந்தியவனாக, உலகைக் காக்கும் சூரியன் பிறந்தான்.
விரதமிருக்கும் முறை
ரத சப்தமியன்று நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி சூரிய பகவானை வழிபடுவர். அன்று சூரிய உதயத்துக்கு முன் துயிலெழ வேண்டும். ஏழு எருக்க இலைகளை எடுத்துத் தலை மீது வைத்துக் கொண்டு, ஆண்கள் அதன் மீது சிறிது அட்சதையையும் விபூதியையும் வைத்து கிழக்கு திசை நோக்கி நீராட வேண்டும். பெண்கள் அட்சதையும் மஞ்சளும் வைத்து நீராட வேண்டும்.
இப்படி நீராடுவதன் மூலம் நம் பாவங்கள் அனைத்தும் கரைந்துபோகும் என்பது நம்பிக்கை. பொதுவாகச் சூரிய உதயத்துக்கு முன் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடுவது உகந்தது. இயலாதவர்கள் வீட்டிலேயே புனித நீராடலாம். எருக்க இலைகளைத் தலை மீது வைத்து நீராடுவதால் உடல் நலம் காக்கும் என்பது நம்பிக்கை.
நீராடிய பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். தெரிந்த சூரிய துதிகளைச் சொல்லலாம். சூரியனுக்கு அர்க்ய மந்திரம் சொல்லி, நீர்விட வேண்டும். தெரியாதவர்கள், வேதம் படித்தவர்களிடம் உபதேசம் பெற்றுச் செய்யலாம். சூரியனுக்கு உகந்த நிவேதனம் சர்க்கரைப் பொங்கல். வழிபாடு முடிந்த பிறகு சூரிய பகவானுக்குப் படையலிட்ட பொங்கலை அனைவருக்கும் பிரசாதமாக வழங்கலாம்.
பெருமாளின் அம்சமே சூரியன். அதனால் ரத சப்தமியன்று கோயில்களில் பெருமாள் சூரிய பிரபையில் எழுந்தருள்வார். ரத சப்தமியன்று விரதமிருப்பது சிறந்தது.
அன்றைய தினம் விரதமிருந்தால் நீடித்த ஆயுளும், உடல் நலமும் பெறலாம். ரத சப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்துக்குப் பல மடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொழில் தொடங்கினால், விருத்தியடையும். பெண்கள் உயர்நிலையை அடைவர்.
இந்த விரதம் பெண்களின் சுமங்கலித்துவத்தை நீடிக்கச் செய்யும் என்றும் நம்பிக்கை உண்டு.
எருக்க இலையின் மகத்துவத்தை பீஷ்ம புராணம் மூலம் வியாசரால் மகாபாரதத்தில் விளக்கப்பட்டுள்ளது. ரத சப்தமி, தஞ்சை மாவட்டம் சூரியனார் கோயில், திருமலை ஸ்ரீ நிவாசப் பெருமாள் உள்பட பல ஆலயங்களில் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. திருமலையின் ஏழு மலைகளை ஏழு குதிரைகளாகப் பாவித்து, ரத சப்தமி விழா கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலிலும் ரத சப்தமி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
உலகின் இருள் நீக்கும் பகலவனை வணங்கி, வாழ்வில் ஒளி பெறுவோம்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
19 hours ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago