சிலந்தி வலை

By இக்வான் அமீர்

இருண்ட இரவு. இன்னும் சில மணி நேரங்களில் கிழக்கு வெளுத்துவிடும். அதன் பிறகு மக்கத்து குறைஷியருக்கு விஷயம் தெரிந்து போகும். தங்களின் இரவு முற்றுகை வீணாய்ப் போனதை அறிந்து மக்கா கொதிக்கும். நகரம் சல்லடை போடப்படும்!

மக்காவில் இறைத்தூதர் முஹம்மது நபிகளார் தம் போதனைகளை எடுத்துரைத்துக் கொண்டிருந்த காலமது. உருட்டலும், மிரட்டலும் தோல்வியடைந்தது. எதிரிகள் எடுத்த முடிவு ‘படுகொலை’. தனிநபர் மீது பழி விழுந்திடாமலிருக்க ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுக் கொலைக்கான நாளும் நிர்ணயிக்கப்பட்டது.

இரவில் தப்பிப் போகாமல் முற்றுகையிட்டுக் காவல் காத்து, பொழுது புலரும் வேளையில் கொன்றுவிடுவது. இதுவே எதிரிகளின் திட்டம். கருத்தை, கருத்தைக் கொண்டு உரசாமல் ஆயுதங்களின் கூர்மையால் ஒடுக்க நினைத்தனர்.

நபிகள் தீட்டிய திட்டம்

தம்மைச் சுற்றி நடப்பதை நபி பெருமானார் அறிந்து கொண்டார். நுண்ணறிவுடன் ஒரு திட்டம் தீட்டினார். அதற்கு முழுமையாய் ஆதரவு தர இளந்தோழர் அலியும் ஒப்புக் கொண்டார். தாம் தப்பி விட்டதை எதிரிகள் அறிந்து கொள்ளாமலிருக்க அலி படுக்கையில் பொழுது புலரும்வரை துயில் கொள்ள வேண்டும். முள் படுக்கையை மலர்படுக்கையாய் எண்ணி அத்தோழரும் அதற்கு இசைந்தார்.

நபி பெருமானார் தம் அருமைத் தோழர் அபூபக்கருடன் மக்கா மாநகரை விட்டுக் கிளம்பிவிட்டார். ஏற்கெனவே இறைவனிடமிருந்து முன்னெச்சரிக்கையாய் மக்காவைத் துறக்க வேண்டியிருக்கும் என்ற சமிக்ஞைகள் வந்துவிட்டிருந்தன. ஏற்பாடுகளும் சித்தமாயிருந்தன.

வீட்டிலிருந்து கிளம்பிய நபிகளார் கஅபாவுக்குத் தெற்காக அமைந்திருந்த ‘மிஸ்பலா’வை அடைந்தார்கள். அந்த இடத்தில்தான் தோழர் அபூபக்கரின் வீடும் இருந்தது. மக்காவைத் துறந்து மதீனாவை அடைவது நபிகளாரின் திட்டம்.

மதீனா வட திசையிலிருக்க பயணமோ தென் திசை நோக்கி அமைந்தது. ஏனெனில், நபிகளாரைக் காணாத எதிரிகள் முதலில் விரைவது இரண்டு இடங்கள். ஒன்று அபூபக்கரின் வீடு; அடுத்தது மதீனாவுக்குச் செல்லும் பாதை. எதிரிகளைக் குழப்பி, பாதுகாப்பாக, தாம் எண்ணிய இடத்தை அடைய நபிகளார் தம் பயணத்தை வேறு விதமாக அமைத்தார்.

இரவின் கும்மிருட்டு, நட்சத்திரங்களின் கண் சிமிட்டல் ஊடாக மக்காவுக்கு தெற்கிலிருந்த மலைப்பகுதியை நபி பெருமானாரும், அபூபக்கரும் சென்றடைந்தார்கள். யார் கண்ணிலும் படாமலிருக்க நல்லதொரு மறைவிடம் தேடினார்கள். அங்கு ‘தெளர்’ என்னும் மலையின் மீது ஒரு குகை இருந்தது. குறுகியதும், ஆழமானதுமான தக்க புகலிடம். இரவு இன்னும் இருட்டிலிருந்து கரையவில்லை.

மறைவிடம் ஆகிய குகை

நபித்தோழர் அபூபக்கர் குகைக்குள் நுழைந்தார். அதைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தார். விஷ ஜந்துக்களால் தம் தோழருக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாதே என்ற கவலை அவருக்கு. குகையின் தரையில் நிறைய பொந்துகள் இருந்தன. அபூபக்கர் தம் மேலாடையைக் கழற்றி அதை சிறு சிறு துண்டுகளாய் கிழித்தார். ஒவ்வொரு துண்டையும் உருட்டி பந்தாக்கினார்; பொந்துக்களை அடைத்தார். இனிக் கவலையில்லை என்ற முழு நிம்மதியுடன் நபிகளாரைக் குகைக்குள் அழைத்துச் சென்றார். பொழுது புலர்ந்தது.

விடியலில் தம் எதிரியை அழிக்க உருவிய வாட்களுடன், பயங்கர ஆயுதங்களுடன் நின்றனர் மக்கத்து இளைஞர்கள். வீட்டில் கண்டதோ இளம் நபித்தோழர் அலியை. கோபத்தின் உச்சிக்கே சென்றவர்கள் பெரும் கூப்பாடு போட்டார்கள். வசை மாரி பொழிந்தார்கள்.

“விடாதீர்கள்..! ஓடுங்கள்..! அபூபக்கர் வீட்டிற்கு! தேடுங்கள்.. நகர் முழுவதும் வலை வீசி! மக்காவை விட்டுச் செல்லும் பாதைகள் அனைத்தையும் அடைத்துவிடுங்கள்!

எங்கே அந்த பாலையின் வேடுவர்கள்? சென்று தேடுங்கள்.. அப்துல்லாஹ்வின் மைந்தன் முஹம்மதுவை! பெறுங்கள் அளவற்ற பரிசுகளை! தேடுங்கள்..! விடாதீர்கள்..! விடாதீர்கள்…!!” - கூச்சலும், குழப்பமுமாய் பொழுது புலர்ந்தது.

எதிரிகளால் வளைக்கப்பட்ட நபி

வழித்தடங்களைக் கண்டு தப்பித்தவர்கள் செல்லும் பாதையைக் கணிக்கும் நிபுணத்துவம் பெற்ற பாலைவாழ் மக்கள், நபி பெருமானார் சென்ற பாதையைக் கண்டுபிடித்தும் விட்டனர். அதைத் தொடர்ந்து மலைப்பகுதிக்கும் வந்து சேர்ந்தனர். எதிரிகளால் இவ்வளவு சீக்கிரம் வளைக்கப்படுவோம் என்று நபிகளார் எண்ணவில்லை.

மலையின் ஒவ்வொரு அங்குலமும் எதிரிகளால் அலசி ஆராயப்பட்டது. குகைக்குள் இருந்த நபித்தோழரின் நெஞ்சமோ படபடத்தது. இப்போது காலடிகளின் ஓசையும், வாள்களின் உரசலும் தெளிவாய்க் கேட்டன.

‘தெளர்’ மலைக்குகையையும் எதிரிகள் கண்டுபிடித்து விட்டனர். குகையின் வாயிலோ சிலந்தி வலையால் பின்னப்பட்டிருந்தது.

தேடி வந்தவர்களில் ஒருவன், “காலடிச் சுவடுகள் இத்துடன் முடிகின்றன. அவர்கள் இங்கு எங்கோதான் இருக்க வேண்டும். எதற்கும் குகைக்குள் நுழைந்து பார்த்து விடுவோம்!” – என்றான்.

மற்றவர்களும், “ஆம்..! ஆம்..! குகைக்குள் தேடுவோம்!” – என்றவாறு பளபளக்கும் வாட்களுடன் குகைக்குள் நுழையத் தயாரானார்கள்.

குறைஷிகளின் கனவான்

‘உமைய்யா பின் கலப்’, தலையை அசைத்தவாறு “நாம் தேடி வந்தவர்கள் குகைக்குள் இருக்க வாய்ப்பே இல்லை. இதோ! பார்த்தீர்களா சிலந்தி வலையை? யாராவது குகைக்குள் நுழைந்திருந்தால் இவ்வலை அறுந்திருக்க வேண்டுமே!

நாம் இங்கு கிடந்து நேரத்தை வீணாக்க வேண்டாம்! வாருங்கள்! வேறு பக்கம் தேடுவோம்! அவர்கள் தப்பி விடுவதற்குள் பிடித்தாக வேண்டும்!” என்றான் பதற்றத்துடன்.

அதேநேரத்தில் வெளியில் நடப்பதைச் சரியாகத் தெரிந்து கொள்ள முடியாத நிலையில் குகைக்குள் நபித்தோழர் அபூபக்கர் பெரும் கவலை அடைந்தார். நபிகளாரோ எவ்விதமான சலனமுமின்றி இறைவனைத் தொழுது கொண்டிருந்தார்.

அமைதி… அமைதி.. பேரமைதி!

எண்ணங்கள் குவிக்கப்பட்ட அமைதி!

பரம்பொருளைச் சரணடைந்துவிட்ட உள்ளமைதி!

பிராணனில் அமைதி!

பேரானந்தத்தை

தொட்டுவிட்ட அமைதி!

இறையருளைப் பெற்றுவிட்ட

பிரத்தியட்ச அமைதி!” நபிகளார் தொழுது முடித்தார்.

ஏறிட்டுப் பார்த்தார். தம் தோழரின் விழிகளிலிருந்து கண்ணீர்த்துளிகள் வழிந்தோடுவதைக் கண்டார்.

எதிரிகளை எதிர்கொள்ளத் தக்க ஆயுதமும், வேண்டிய ஆள் பலமும் இல்லாத நிர்க்கதியான அந்நிலையில் நபி பெருமானாரின் அமுத வாயிலிருந்து தெள்ளத் தெளிவாய் நீரோடையின் சலசலப்பாய் வார்த்தைகள் வெளிப்பட்டன.

“அஞ்சற்க தோழரே! அஞ்சற்க!

இருவர் அல்ல நாம் மூவர்; இறைவனையும் சேர்த்து! இறைவன் நம்மோடு இருக்கிறான் அஞ்சற்க!”

இறைநம்பிக்கையின் இறுக்கமான உறுதியால் மலை போல வந்த பேராபத்து பனியாய் விலகிப்போனது.

மலைக்குகையின் வாயை, அற்ப சிலந்தி வலையால் பின்னச் செய்து தன் அடியாரை இறைவன் காத்துக் கொண்டான்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

16 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்