ஆதிசங்கர பகவத்பாதாள் யந்த்ர ரூபத்தைச் சொன்னவுடனே, “இது செளந்தர்யலஹரின்னா? அம்பாளுடைய பரம சுந்தரமான அவய ரூபத்தைச் சொல்லிடணும்'' என்று வேகம் வந்தாற்போல த்வதீயம் செளந்தர்யம் என்றே அடுத்த சுலோகத்தை [சுலோ. 12] ஆரம்பித்திருக்கிறார். “த்வதீயம் செளந்தர்யம்'' என்றால் “உன்னுடையதான லாவண்யம்'' என்று அர்த்தம்.
“யந்திர ரூபத்தில் இத்தனை கோணம், தளம், வட்டக்கோடு, சதுரக்கோடு என்றெல்லாம் முழு detail கொடுத்துப் பாடினேனே, அப்படி உன்னுடையதான லாவண்ய ரூபத்தைப் பாடலாமென்றால் முடிகிற காரியமாயில்லையே. இது வரைக்கும் எந்தக் கவியும் அதை உள்ளபடி வர்ணிக்க முடியவில்லையே!'' என்கிறார்.
பிரம்மாதான் ஆதிகவி. “ஆதி கவியே'' என்றே பாகவதத்தின் ஆரம்ப சுலோகத்தில் அவரைச் சொல்லியிருக்கிறது. சரஸ்வதியே அவருடைய சக்திதான் என்றால் அவரைவிடப் பெரிய கவி எவர் இருக்க முடியும்? அவர் எல்லா தேவதைகள் மேலும் ஸ்தோத்ரங்கள் செய்திருப்பது புராணங்களைப் பார்க்கும்போது தெரிகிறது.
கஷ்ட காலத்தில் தேவர்கள் அவரிடந்தான் போய் அழுவார்கள். உடனே அவர் அவர்களை சிவனோ, விஷ்ணுவோ, அம்பாளோ யாரோ ஒரு சுவாமியிடம் அழைத்துக் கொண்டுபோய் அவர்களுடைய கஷ்டத்தைச் சொல்லி, நிவிருத்தி பண்ணணும் என்று வேண்டிக் கொள்வார்.
அப்போது அந்த சுவாமியை ஸ்தோத்ரம் பண்ணுவார். அவருக்கே கஷ்டம் வருகிறபோதும் அப்படித்தான். அப்படி அம்பாளைப் பற்றியும் பண்ணியிருக்கிறார். துர்கா சப்தசதீயில்கூட மது-கைடப அசுரர்கள் அவரை இம்சிக்க வந்தபோது அம்பாள் மேல் ஸ்தோத்ரம் பாடியிருக்கிறார். ஆனாலும் அவருங்கூட அவளுடைய லாவண்யத்தை உள்ளபடி வருணிக்க முடியவில்லை.
த்வதீயம் ஸெளந்தர்யம் துஹிநகிரி-கந்யே துலயிதும்
கவீந்த்ரா:கல்பந்தே கதமபி விரிஞ்சி-ப்ரப்ருதய:
“விரிஞ்சி ப்ரப்ருதய'' என்றால் 'பிரம்மா முதலானோர்'. அவர்கள் உன்னுடைய செளந்தர்யத்தை வர்ணிக்கப் பார்த்தார்கள். ‘துலயிதும்' என்றால் 'எடை போடுவதற்கு' என்று அர்த்தம். ‘துலா' என்றால் தராசு அல்லவா? எடை எப்படிப் போடுகிறோம்? ஒரு தட்டில் இருப்பதற்கு சமமாக இன்னொரு தட்டில் எடைக் கல்லைப் போட்டுக் கண்டுபிடிக்கிறோம். நேராக ஒரு வஸ்துவின் எடையை கணிக்க நமக்குத் தெரியவில்லை. அதனால் இன்ன எடை என்று தெரிகிற ஒரு எடைக் கல்லைப் போட்டு அதைக்கொண்டு இதன் எடையைத் தெரிந்து கொள்கிறோம்.
அப்படி சாத்ஷாத்தாக அம்பாளுடைய செளந்தர்யத்தை வர்ணிக்க அந்த கவிகளுக்குத் தெரியவில்லை. அதனால் தங்களுக்குத் தெரிந்த ஒரு எடைக் கல்லைத் தேடினார்கள். அது என்ன? உபமானம் என்பதுதான்! சந்திரன் மாதிரி முகம், தாமரை மாதிரி கண், வண்டுக்கூட்டம் மாதிரி கேசம் என்றெல்லாம் உபமானம் காட்டிவிட்டால் எடைக் கல் போட்டு எடை தெரிந்து கொள்ள முடிவது போல ‘இப்படிப்பட்ட லாவண்யம்' என்று தெரிந்து கொள்ள முடிகிறதல்லவா?
இப்படிப்பட்ட எடைக்கல், உபமானம் என்பதை அந்தக் கவிகளெல்லாம் தேடித் தேடிப் பார்த்து, பல தினுசாகக் கல்பித்துச் சொல்லிப் பார்த்தும் அம்பாளின் அழகை உள்ளபடிக் காட்ட முடியவில்லை. உவமையற்றதாக இருக்கிறது, அவளுடைய அழகு! “கதமபி கல்பந்தே'' - மண்டையைக் குடைந்து கொண்டு அவர்கள் எப்படியெப்படியோ உவமை கல்பித்துத்தான் பார்க்கிறார்கள்.
ஆனாலும் முடியவில்லை என்பதை ஆசார்யாள் உடைத்துச் சொல்லாமல், “கதமபி கல்பந்தே - எப்படியோ கல்பித்துப் பார்க்கிறார்கள்'' என்று மட்டும் சொல்லி நிறுத்திவிடுகிறார். அதுதான் சொல்லாமல் சொல்கிற ‘த்வனி அழகு'. “ப்ரதோஷ தீபாராதனை நேரம் தப்பாமல் போய்ப் பார்க்கணும்னு ஓடினதென்னவோ வாஸ்தவந்தான்!'' என்று சொல்லி, நிறுத்தி விட்டாலே போதும், “ஆனாலும் பார்க்க முடியவில்லை'' என்று அர்த்தம் கொடுத்துவிடும். விண்டு சொல்வதைவிடவும், இப்படிச் சொல்லாமல் சொல்கிறபோதே மனசில் நன்றாகப் பதியவும் செய்கிறது.
“யந்த்ர ரூபத்தைச் சொன்னோமே, செளந்தர்ய ரூபத்தைச் சொல்லலாமென்று பார்த்தால் அது வர்ணனாதீதமாக இருக்கிறது. நேரே வர்ணிக்க முடியாவிட்டாலும் உபமான எடைக்கல்லைப் போட்டாவது ஒரு மாதிரி காட்டலாமென்று பார்த்தால் அந்த பிரயாசையும் பிரம்மாதிகளே பண்ணி ஓய்ந்து போயாயிற்று என்றிப்படிச் சொல்வதன் மூலமே அம்பாளுடைய அழகு எவ்வளவு உயர்வானது. ஈடு இணை இல்லாதது என்று காட்டி விடுகிறார்.
வர்ணிப்பது இருக்கட்டும். முதலில் அவளுடைய ஸ்வரூபத்தை அந்த கவி அல்லது பக்தர் - கவியாக இருக்கும் பக்தர் - தாமே நன்றாகப் பார்த்து அந்த முழு செளந்தர்யத்தைத் தெரிந்து கொள்ளவேண்டும். அப்படி யாராவது பார்த்திருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. முதலுக்கு எந்த கவியுமே அந்த செளந்தர்ய சொரூபத்தைப் பார்த்ததில்லை என்னும்போது அதைப் பிறத்தியாருக்கு வர்ணித்துச் சொல்ல இடமேது?
ஏன் அம்பாளுடைய சொரூபத்தை எவரும் பார்த்ததில்லை? அடியோடு பார்த்ததில்லை என்று சொல்ல முடியாது. தர்சனம் என்று பல பக்த கவிகள் பண்ணித்தான் இருக்கிறார்கள். ஆனாலும் சம்பூர்த்தியாக எவரும் தன்னைப் பார்க்கவிடாமல் ஏதோ கொஞ்சம் - க்ஷண காலம் - மின்னல் மின்னுகிற மாதிரி தர்சனம் கொடுத்து விட்டு மறைந்து போய் விடுவாள்.
ஒரே பக்தியாக அவளிடமே மனசை அர்ப்பணித்தவர்களுக்குங்கூட அவளுடைய சரணாரவிந்தம், கடாக்ஷத்தைப் பொழியும் நேத்ரம், மந்தஸ்மிதம் செய்யும் ஆஸ்யம் - திருவாய் என்றிப்படி ஏதாவது ஒரு அவயந்தான் சதாவும் கண்களில் கட்டி நிற்குமே தவிர கேசாதி பாதம் முழு ரூபமும் இல்லை. தன்னுடைய முழு ரூப செளந்தர்யத்தையும் அவள் காட்டுவது ஒருத்தரிடந்தான். அந்த ஒருத்தர் யாரென்றால் பதியான பரமேச்வரன்தான்.
நன்றி: தெய்வத்தின் குரல்
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
5 hours ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago