இன்றைய சங்கீதத்தின் முன்னோடி

கர்னாடக சங்கீதத்தின் இன்றைய பாணிக்குக் காரணகர்த்தா அரியக்குடி ராமானுஜ ஐயங்கார். இவரின் பாணியால்தான் பல ராகங்களின் பெயர் புகழ் பெற்று நிலவுகிறது.

இவர் காரைக்குடி அருகில் உள்ள அரியக்குடி என்ற ஊரில் 1890-ம் ஆண்டு பிறந்தார். அதுகாறும் மேடையில் வழங்கி வந்த பாணியை மாற்றி, தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டார். அது அரியக்குடி பாணி என்றே பிரபலமடையத் தொடங்கியது.

இந்த நிலையில், கல்கியின் உந்துதலால் சங்கீதத்தின் பெருமை என்ற தலைப்பில் ஆனந்த விகடன் தீபாவளி மலரில் ஒரு கட்டுரையினை எழுதி, தன் பன்முகத் திறமையை வெளிப்படுத்தினார். உயரிய இசை விருதான சங்கீத கலாநிதி விருதினை வாய்ப்பாட்டிற்காகப் பெற்றார். பத்மபூஷண் உட்பட பல விருதுகளைப் பெற்ற இவரது பாணியை அறிந்து கொண்டால் மேடைக் கச்சேரியை புரிந்து கொள்ளலாம்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு, கச்சேரிகளில் பாடகர் ஒரு ராகத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு பல மணி நேரம் அதையே ஆலாபனை செய்வார். பிறகு அதே ராகத்தில் அமைந்த கிருதியொன்றை எடுத்துக்கொள்வார். அதைக் கணச்சுருக்கில் அரை மணி நேரம் பாடிக் கச்சேரியை முடித்துவிடுவார். இப்படிப் பாடினால்தான் ரசிகர்களுக்கு ராகத்தை அனுபவித்த ஆனந்தம் முழுமையாகும் என்று அக்காலத்தில் நம்பினார்கள்.

கச்சேரி பாணியை வடிவமைத்தவர்

இன்று கச்சேரிகள் நடத்தப்படும் விதமே வேறு. பல ராகங்களில் பல கீர்த்தனைகள் பாடப்படுகின்றன. அந்தக் கச்சேரிக்கென்று பிரதான ராகம் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு அதில் ராகம் தானம் பல்லவியை அமைத்துப் பாடுவது வழக்கம்.

இதில் தனி ஆவர்த்தனம் என்று பக்க வாத்தியங்களுக்கான தனி நேரமும் உண்டு. கடைசியில் பஜனைப் பாடல்கள், துக்கடா என்று பல சங்கதிகளுடன் கச்சேரி வண்ணமயமாய்க் களைகட்டுவது இன்றைய பாணி.

கச்சேரி நடத்தப்படும் பாணியை இப்படி மாற்றிப் புதுமை செய்தவர் சங்கீத கலாநிதி பத்மபூஷண் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார். இசைக் கலைஞர்களையும் இசை ரசிகர்களையும் வாரிச் சுருட்டிக்கொண்டு இன்றும் வாழும் இந்தப் பாணி, கர்னாடக இசையையும் வாழ வைக்கிறது என்றே சொல்லலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE