சினிமாவுக்குப் போன கலைஞர்கள்

By ப.கோலப்பன்

சங்கீத கலாநிதி விருது பெற்றபோது புல்லாங்குழல் இசைக்கலைஞர் டி. விஸ்வ நாதன் நிகழ்த்திய உரை பல வகைகளில் முக்கியமானது. சுத்தக் கர்நாடகம் புழங்கும் அகாடமியில் சினிமா இசையின் மேன்மை குறித்துப் பேசிய விஸ்வநாதன், அதைப் புறக்கணிக்க முடியாது என்று வாதிட்டார்.

பாமர இசை ரசிகனை, மெல்ல மெல்ல சாஸ்திரிய இசையை நோக்கி நகர்த்தும் வல்லமை சினிமா இசைக்கு உண்டு. ஒரு காலத்தில் திரையிசைப் பாடல்கள் பெரும்பாலுமே கர்நாடக ராகங்களின் அடிப்படையில் அமைந்தவையே. பழைய திரையிசை வித்தகர்களான எஸ்.வி. வெங்கட்ராமன், ஜி. இராமநாதன், கே.வி. மகாதேவன் எல்லோருமே கர்நாடக இசையில் முறையாகப் பயிற்சி பெற்றவர்கள். நல்ல குரல் வளம் கொண்ட, முறையான இசைப் பயிற்சி பெற்றவர்கள் சினிமாக்களில் பாடினார்கள். இது ஒரு புறமிருக்க கர்நாடக இசை உலகில் கொடிகட்டிப் பறந்த பல இசைக் கலைஞர்கள் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். பாடியிருக்கிறார்கள்.

“நாடகத்தில் இருந்து ஏராளமானவர்கள் திரை உலகுக்கு வந்தார்கள். நாடக உலகில் பெற்ற இசை அனுபவம் திரை உலகில் நுழைந்ததும் கைகொடுத்தது. திரையிசையே கர்நாடக சங்கீதத்தின் ஒரு வெளிப்பாடாக இருந்தது. எல்லாவற்றையும் விட பணமும் புகழும் திரை இசையில் இலகுவாகக் கிடைத்ததும் ஒரு முக்கியக் காரணம்” என்று கூறுகிறார் கர்நாடக வரலாற்று ஆராய்ச்சியாளரான வி. ஸ்ரீ ராம்.

சினிமாவுக்கு வந்தவர்கள்

முசிறி சுப்பிரமணிய ஐயர், மகராஜபுரம் விஸ்வநாதய்யர், எம்.எம். தண்டபாணி தேசிகர், பாபநாசன் சிவன், கே.பி. சுந்தராம்பாள், வி.வி. சடகோபன், ஜி.என். பாலசுப்பிரமணியம், எம்.எஸ். சுப்புலட்சுமி, என்.சி. வசந்தகோகிலம் என்று வளர்ந்து, தற்போதுள்ள மதுரை சேஷகோபாலன் வரை இப்பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. நாகசுரமேதை திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, கவிகாளமேகம் திரைப்படத்தில் காளமேகமாகவே நடித்தார். எல்லீஸ் கே டங்கன் இயக்கிய படம். அப்படத்தில் அவர் பாடிய விருத்தத்தை இப்போதும் கேட்கும்போது அவர் பாட்டுக் கச்சேரி செய்திருந்தால் பெரும் மேதைகளுக்கெல்லாம் போட்டியாக இருந்திருப்பார் என்று தோன்றும். அப்படி ஒரு குரல். மனம் சொன்னதைக் குரல் அப்படியே வாங்கி வெளிப்படுத்துகிறது. மற்றொரு பெரும் நாகசுரக் கலைஞரான திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளை காத்தவராயன் என்ற படத்தில் நடித்தார். ஆனால் படம் முழுமை பெறவில்லை.

“1900-ஆண்டுகளின் தொடக்கத்தில் கச்சேரியை மட்டுமே நம்பி வாழ்க்கையை நடத்த முடியாது. இந்த நேரத்தில் திரைப்படம் வழங்கிய வாய்ப்புகளும் பணமும் மிகப் பெரியது. ஆகவேதான் இசைக் கலைஞர்கள் திரைப்படத்தில் நுழைந்தார்கள்,” என்கிறார் திரைப்பட இசை வரலாற்றாய்வாளரான வாமனன். முசிறி சுப்பிரமணிய ஐயர் துக்காராமில் நடிப்பதற்கு 1938-ஆம் ஆண்டிலேயே பல்லாயிரக்கணக்கான ரூபாய் சம்பளமாகப் பெற்றார் என்கிறார் ஸ்ரீ ராம்.

“தமிழில் இப்படம் வெற்றி பெறாவிட்டாலும் மராட்டியில் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. பாடல்களும் மிகச் சிறப்பாக அமைந்தன,” என்கிறார் வாமனன். ஆனால் ஒரே படத்தோடு முசிறி நிறுத்தி விட்டார்.

நடித்தபடி பாடியவர்கள்

மகாராஜபுரம் விஸ்வநாதய்யரும் ஒரு படத்தில் மட்டுமே நடித்தார். கே.பி. சுந்தராம்பாள் நடித்த நந்தனார் திரைப்படத்தில் வேதியர் வேடத்தில் அவர் தோன்றினார். நாடகத் துறையில் இருந்து திரையுலகுக்கு வந்த சுந்தராம்பாள் நடித்துப் பாடிய படங்கள் நிறைய.

முசிறியைவிட வயதில் சிறியவராக இருந்தாலும் அவருக்கு முன்பாகவே திரைப்படத் துறையில் தடம் பதித்தவர் ஜி.என். பாலசுப்பிரமணியம். சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றவர். தஞ்சாவூர்க்காரராக இல்லாமல் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். வசீகரமான தோற்றம். பிருகா சாரீரம். போதாதா திரைப்படத்துக்கு.

பாமா விஜயத்தில் நாரதராக நடித்தார். சகுந்தலையில் துஷ்யந்தனாக நடித்த அவருக்கு கதாநாயகியாக, சகுந்தலையாக நடித்தவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. “எனை மறந்தனன்” என்று காம்போதியில் அவர் பாடிய விருத்தத்துக்கு இணையேது. சதி அனுசுயா மற்றொரு படம். உதயணன் வாசதத்தா திரைப்படத்தில் அவருக்கு இணையாக நடித்தவர் வைஜயந்திமாலாவின் தாயார் வசுந்தரா தேவி. அவர் நடித்த இன்னொரு படம் ருக்மாங்கதன்.

“கர்நாடக இசைத் துறையில் அவர் உயர்வதற்கு திரைப்படத் துறை படிக்கட்டாக இருந்தது என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் சினிமாப் பாடகன் என்று தாழ்வாகத்தான் அவரைப் பார்த்தார்கள். ஆனால் மேடையில் அமர்ந்து பாடியதும் இசை உலகம் அப்படியே அவர்பால் கட்டுண்டு கிடந்தது,” என்கிறார் ஜி.என்.பி.யின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய லலிதாராம்.

அதி அற்புதக் குரலால் தமிழிசை

யையும் தேவார திருவாசகப் பதிகங்களையும் பாடி உருக்கிய தண்டபாணி தேசிகரும் திரைப்படத் துறையிலும் இணையாகக் கோலோச்சினார். பெரும்பாலும் பாடகர்களுக்கு நடிப்பு வராது என்ற வாதத்தை நந்தனார் படத்தில் அவர் உடைத்தெறிந்தார். தில்லை நகரத்தின் எல்லையில் நின்று “வருகலாமோ ஐயா” என்று மாஞ்சியில் அவர் கதறுகையில் நம் உள்ளமும் கரையும்.

இசையின் உருக்கத்தில் மனித மனம் ஒன்றிணைந்து நிற்கும் தருணங்களில் அதுவும் ஒன்று. அப்படத்தில் வெளியான பல பாடல்கள் பின்னர் கர்நாடக கச்சேரி மேடைகளையும் ஆக்கிரமித்தது. “பிறவா வரம் தாரும்” “பித்தம் தெளிய மருந்தொன்று” “காண வேண்டாமோ” என்று இப்பட்டியல் நீள்கிறது. அவருடைய திருமழிசையாழ்வார், நந்தனார் படத்துக்கு இணையாகப் பேசப்படவில்லை.

தமிழ் தியாகையர் என்றழைக்கப் படும் பாபநாசம் சிவன் திரைப்படத் துறையில் சாதித்தது பெரியதா, கர்நாடக இசைத்துறையில் சாதித்தது பெரியதா என்று பட்டிமன்றமே நடத்தலாம். சீதா கல்யாணம் திரைப்படம் மூலம் திரை உலகில் அவர் நுழைந்தார். நந்தனார் திரைப்படத்தில் அவர் எழுதிய பாடல்களை கோபலகிருஷ்ண பாரதியாரின் பாடல்களே என்று வாதிடும் அளவுக்கு பக்தியில் வழிந்தோடும் வரிகளை எழுதினார்.

பக்த குசேலா படத்தில் அவர் இசையமைத்து நடிக்கவும் செய்திருக்கிறார். பி.யு.சின்னப்பா, எம்.கே. தியாகராஜபாகதவர் ஆகியோர் நடித்த பல படங்களுக்கு சிவனே பாடல்கள் எழுதினார். “உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ” என்ற தியாகாரஜ பாகவதரின் பாடல் கர்நாடக இசையும் திரையிசையும் ஊடும் பாவுமாகக் கலந்து நின்ற பாடல்.

எம்.எஸ். சுப்புலட்சுமி நடித்த முதல் படம் சேவாசதன். “கோகிலகான மதுரை எம்.எஸ். சுப்புலட்சுமி” என்று அப்படத்தில் அவர் அறிமுகம் செய்யப்பட்டார். ஆனால் அப்படத்தின் ஒரு பிரதிகூட கிடைக்கவில்லை என்று எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய டி.ஜே.எஸ். ஜார்ஜ் குறிப்பிட்டிருக்கிறார். சுப்புலட்சுமியின் இசையை முழுமையாக வெளிப்படுத்தும் வகையில் திரைப்படத்தை உருவாக்கி யிருந்தார் அப்படத்தின் இயக்குனர் கே. சுப்பிரமணியம். இதற்காக பாபநாசம் சிவனையே அவர் இசை அமைக்க ஏற்பாடு செய்திருந்தார் என்று ஜார்ஜ் தெரிவிக்கிறார். சகுந்தலா திரைப்படத்தில் அவர் ஜி.என். பாலசுப்பிரமணியத்துடன் நடித்தார்.

சதாசிவத்தை மணந்த பிறகு திரைப்படத் துறையை மறந்திருந்த எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு மறுபடியும் சாவித்திரி திரைப்படத்தில் நாரதர் வேடம். ஆனால் திரை உலகில் அவர் பாடல்கள் புகழின் உச்சத்தைத் தொட்ட திரைப்படம் பக்தமீரா. “காற்றினிலே வரும் கீத”த்தைக்

காது கொடுத்துக் கேட்காதார் யார்.

எம்.எஸ். சுப்புலட்சுமியின் சமகாலத்தவரும் அவருக்கு இணையாகக் கர்நாடக இசை உலகில் தடம் பதித்தவருமான என்.சி. வசந்தகோகிலமும் சில திரைப் படங்களில் நடித்தார். ஹரிதாஸ் வால்மீகி, கிருஷ்ண விஜயம் போன்ற படங்களில் நடித்தார். “வசந்த கோகிலத்தின் குரலைப் பார்த்து பொறாமைப்படாதவர்களே இருக்க முடியாது. எம்.எஸ். சுப்புலட்சுமியே அவரைப் பின்பற்றினார்,” என்று எழுதியிருக்கிறார் இசைக் கலைஞரும் ஓவியருமான எஸ்.இராஜம். துரதிருஷ்டவசமாக அவர் காசநோயால் பீடிக்கப்பட்டு இளம் வயதில் காலமானார்.

எம்.எல். வசந்தகுமாரியும் சுதர்சனம் படத்தில் நடித்தார். ஆனால் சில பிரச்சினைகளால் விலகிவிட்டார். ஆனால் திரைப்படங்களில் எண்ணற்ற பாடல்களைப் பாடியிருக்கிறார். அதுபோலவே டி.கே. பட்டம்மாளும். திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த வி.வி. சடகோபன் அதிசயம், மதனகாமராஜன் மற்றும் நவயுவன் ஆகிய படங்களில் நடித்தார்.

கௌரவ வேடத்தில் தோன்றி பாடியவர்களின் வரிசையில் மதுரை சோமுவும் அடங்குவார். “மருதமலை மாமணி”, “துணைவன் வழித்துணைவன்” ஆகிய பாடல்கள் அவருடைய திரையிசைப்பங்களிப்பு. சீர்காழி கோவிந்தராஜன் கச்சேரியும் செய்தார். அகத்தியர், தாசாவதாரம் போன்ற படங்களில் நடிக்கவும் செய்தார். டி.என். சேஷகோபாலன் தோடி இராகம் படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

“திரையிசைக்கும் சினிமா இசைக்கும் இடையே இருந்த இடைவெளியை உடைத்தவர் பாபநாசம் சிவன்,” என்கிறார் டி.ஜே.எஸ். ஜார்ஜ். ஜி.இராமநாதனும் கே.வி. மகாதேவனும் அதை மேலும் உடைத்தெறிந்தனர். திரைத்துறையில் கர்நாடக இசையின் பன்முகப் பரிமாணத்தை வெளிப்படுத்தினார் இளையராஜா. இப்போது அந்த இராஜபாட்டை சற்றே தூசுபடிந்து கிடக்கிறது.

கேரளத்தில் திரைப்படங்களில் சுத்தமான கர்நாடக கீர்த்தனைகளை இன்னும் பயன்படுத்துகிறார்கள். தமிழர்களுக்கு இப்போது ஒரு மனத்தடை இருப்பதாகத் தெரிகிறது. மலையாள திரைப்படமான சித்திரத்தில் “நகுமோ” “சுவாமிநாத பரிபாலய” போன்ற கீர்த்தனைகளே இடம் பெற்றன. அந்தப்படம் தமிழில் மறுஆக்கம் செய்யப்பட்டபோது ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

19 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்