பெரிய தேரோடும் வீதிகள். புதிதுபுதிதாக எழுந்து நிற்கும் கான்கிரீட் வீடுகளுக்கு இடையே பழமையைப் பறைசாற்றி நிற்கும் நீண்ட நெடிய வீடுகள். மஞ்சு விரவி நிற்கும் மலையும், புலிகள் சரணாலயமும் நீர் நிலைகளும் வயல்வெளிகளும் ஒரு பக்கம், கடைத்தெருக்களும் வணிக வளாகங்களும் மறுபக்கம் என மெல்ல மெல்ல நகர்ப்புறமயமாகிக் கொண்டிருக்கிறது களக்காடு.
இருப்பினும் தன்னுடைய இசைப் பாரம்பரியத்தை விடாமல் கடந்த 120 ஆண்டுகளாக தொடர்ந்து காப்பாற்றி வருகிறது. அதன் இசைப் பாரம்பரியத்தின் இணைப்பாக இராமநவமி பரிபாலன சபா திகழ்கிறது. மப்பும் மந்தாரமுமாய் இருக்கும் மாலைப் பொழுதில் ஊரின் நடுநாயகமாக இருக்கும் சத்யவாகீஸ்வரர் கோயிலின் வானுயர்ந்த கோபுரத்தில் இருந்து பைரவி இராகம் காற்றில் கலந்து வருகிறது. யாரோ பெயர் தெரியாத ஒரு கலைஞன், பைரவியின் உயிர்மூச்சான சுரங்களை வயலினில் குழைத்து வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். இராகம் முடிந்ததும் “நீ வண்டி தெய்வமு” என்ற தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனை தொடர்கிறது.
தாமிரபரணிக் கரையில் இசை
கர்னாடக இசை என்றாலே அதன் தொட்டில் காவிரி பாயும் தஞ்சை வளநாடுதான். இருப்பினும் அதற்கு இணையாக தாமிரபரணி கரையோரத்தில் அமைந்திருக்கும் திருநெல்வேலியும் மிகச்சிறந்த இசைக்கலைஞர்களை உருவாக்கியிருக்கிறது. கல்லிடைக்குறிச்சி வேதாந்த பாகவதர், ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், களக்காடு சுப்பையாபாகவதர், அவருடைய மகன் இராமநாராயண பாகவதர், காருக்குறிச்சி அருணாசலம் என இப்பட்டியல் நீள்கிறது.
களக்காட்டில் இருக்கும் ராமநவமி பரிபாலன சபையை 1894-ஆம் ஆண்டு ஆரம்பித்து இசை விழாவைத் தொடங்கியவர் சுப்பையாபாகவதரும் அவருடைய மாமாவுமான ராமுபாகவதரும்தான். கர்னாடக இசை உலகில் இருந்து திரைப்பட உலகுக்குச் சென்ற சிலரில் சுப்பையாபாகவதரின் மகனான இராமநாராயண பாகவதரும் ஒருவர்.
களக்காடு சுப்பையாபாகவதர் தன்னுடைய சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த பிறகு இராமுபாகவதரால் வளர்க்கப்பட்டார். தன்னுடைய ஏழு வயதில் சென்னைக்குப் பயணம் செய்து இசைக் கச்சேரி செய்த அவர், அங்கிருந்து தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்திருக்கிறார்.
“தஞ்சையில் அவருக்கு திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர் (செம்மங்குடியின் மாமா) தஞ்சாவூர் வைத்தியநாதய்யர் (பாலக்காடு மணி ஐயரின் குரு) மற்றும் கும்பகோணம் அழகநம்பியா பிள்ளை ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்திருக்கிறார்கள்,” என்கிறார் சுப்பையா பாகவதரின் பேரனான களக்காடு சீனிவாசன்.
தபேலா வாசித்த விவேகானந்தர்
பின்னர் இராமுபாகவதருடன் இலங்கையில் பயணம் செய்த சுப்பையா பாகவதர், அந்த நாட்டில் இருந்த கனகசபை மன்னரின் கவனத்தை ஈர்த்தார். அவர் இலங்கையில் தங்கியிருந்த காலத்தில்தான் சுவாமி விவேகானந்தரும் அங்கு சென்றார். “சிறுவனான சுப்பையா பாகவதருக்கு சுவாமி விவே கானந்தர் தபேலா வாசித்தார்,” என்கிறார் சீனிவாசன்.
சுப்பையா பாகவதரும் ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரும் நெருங்கி நண்பர்கள். அவர் நடத்திய கந்த சஷ்டி இசை விழாவில் தமிழகத்தின் மூத்த இசைக் கலைஞர்கள் எல்லோருமே பங்கேற்றுப் பாடியிருக்கிறார்கள். 1912-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் நடுநாயகமாக மதுரை புஷ்பவனம் ஐயரும் இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் காருக்குறிச்சியில் நிரந்தரமாகத் தங்கி விட்ட சுப்பையா பாகவதரிடமும் அவருடைய மகன் கிருஷ்ண பாகவதரிடமும் இசைப் பயிற்சி பெற்றவர் நாகசுர கலைஞர் காருக்குறிச்சி அருணாசலம்.
சுப்பையா பாகவதரின் இசைப்பாரம்பரியத்தை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தியவர் இராமநாராயண பாகவதர். இசை உலகில் பெயரும் புகழும் பெற்றிருந்த மகாவைத்தியநாத சிவனின் மாணாக்கரான உமை யாள்புரம் சுவாமிநாத ஐயரிடம் இராமநாராயண ஐயர் பயின்றார்.
சென்னையில் வசிக்கையில் நடிகை லட்சுமியின் தாயாரான ருக்மணிக்கு இசைப் பயிற்றுவித்து வந்தார் இராமநாராயண பாகவதர். ஒரு திரைப்பட நடிகருக்கான தோற்றப் பொலிவுடன் இருந்ததால் அவரை பாபநாசம் சிவன், ‘இராமதாஸ்’ படத்தில் நடிக்க வைக்க விரும்பினார்.
அவரின் விருப்பப்படி கதாநாயகனாகவும் பின்னணிப் பாடகராகவும் அப்படத்தில் பங்கேற்றார் அவர். அவருக்கு இணையாக ருக்மணியே நடித்தார். இப்படம் 1947-ம் ஆண்டு வெளிவந்தது. நந்தனார் நாடகத்தில் வேதியர் வேடத்திலும் அவர் நடித்திருக்கிறார்.
கோட்டீஸ்வர ஐயரின் விவாதி இராகக் கீர்த்தனைகளை முதலில் இசைத்தட்டாக வெளியிட்டப் பெருமையும் இராமநாராயண பாகவதரையே சாரும். இந்திய-சீன யுத்தத்தின் போது இராமையா பிள்ளை நடத்திய நாட்டிய நாடகத்தில் வரும் தேசபக்தி பாடல்களுக்கு இசையமைத்தவர் இராமநாராயண பாகவதர்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
18 hours ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago