பழமையைப் பாதுகாக்கும் `சம்பிரதாயா’

By வா.ரவிக்குமார்

இசையோடு தொடர்புடைய நம்முடைய பாரம்பரியமான மரபுச் செல்வங்களை புத்தகங்களின் வடிவிலும் புகைப்படங்களின் வடிவிலும் ஒலிப்பேழை வடிவிலும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆவணப்படுத்திக் கொண்டிருக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றது சென்னை, கலாக்ஷேத்ரா வளாகத்தில் செயல்படும் சம்பிரதாயா அமைப்பு.

வீணை வித்வாம்சினியான சாவித்ரி ராஜன்தான் இதன் தொடக்கப் புள்ளி. சாவித்ரி ராஜனிடம் இசைப்பயிற்சி எடுத்துக் கொள்வதற்காக ஜெர்மனைச் சேர்ந்த லுட்விக் பெஷ், அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் நிக்ஸன் ஆகியோர் வந்திருந்தனர். அவர்களுக்கு இந்திய பாரம்பரியச் செல்வங்களின் தரிசனம் ஆர்வத்தைத் தூண்டியது.

அதேநேரத்தில் இத்தகைய மரபுச் செல்வங்களை தகுந்த முறையில் ஆவணப்படுத்தாமல் இருப்பதில் தங்களின் வருத்தத்தையும் சாவித்ரி ராஜனிடம் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த மூவரின் முன்முயற்சியால், சாவித்ரி ராஜன் வீட்டு கார் ஷெட்டில் 1979-ல் தொடங்கப்பட்டதுதான் சம்பிரதாயா அமைப்பு. 1980-ம் ஆண்டில் முறையாகப் பதிவு செய்யப்பட்டது.

பரிசோதனை முயற்சிகளும் ஆதரவும்

மாக்ஸ்முல்லர் பவனில் அன்றைக்குப் பிரபலமாக இருந்த கர்னாடக இசைக் கலைஞர்களைக் கொண்டு கலையில் பல்வேறு பரிசோதனை முயற்சிகளை நடத்தி, அதைப் பதிவு செய்திருக்கின்றனர். சம்பிரதாயாவின் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு, ஃபோர்ட் அறக்கட்டளையின் ஆதரவும் இந்த அமைப்புக்குக் கிடைத்தது. இதன்பின்னர் மயிலாப்பூரில் உள்ள முசிறி சுப்பிரமணியம் சாலையில் இந்த அமைப்பு செயல்படத் தொடங்கியது.

தமிழ்நாடு முழுவதும் இருந்து 100 ஓதுவார்களைக் கொண்டு அவர்கள் திருமறை ஓதும் கோயிலின் வழிப்பாட்டு முறைகள், சடங்குகள், வெவ்வேறு பூஜைகளில் பாடப்படும் தேவாரப் பாடல்களை விவரங்களோடு பாடவைத்து ஆவணப்படுத்தி இருக்கின்றனர்.

தவில் கலைஞர்களுக்கென்று தனிப் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்திப் பதிவும் செய்திருக்கின்றனர். வீணை தனம்மாள் பெயரில் அமைந்த ஒரு பயிற்சிப் பட்டறையில், கேள்வி ஞானத்தால் பயிற்சியளிக்கும் முறைக்கும் இசைக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு பயிற்சியளிக்கும் முறைக்கும் உள்ள வித்யாசத்தை விளக்கும் வகையில் பிருந்தா மற்றும் விஸ்வநாதன் ஆகியோரைக் கொண்டு இந்தப் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டு அதை ஆவணப்படுத்தியும் வைத்திருக்கிறார்கள். இதில் தற்போது பிரபலமாக இருக்கும் அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன், சசிகிரண், அனுராதா சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பயிற்சி பெற்றனர்.

“ஃபோர்ட் நிறுவனத்தின் உதவித்தொகை எங்களுக்குக் கிடைப்பது நின்றுவிட்டது. அதன்பின், எங்களுக்கு இருக்கும் சிரமங்களை அன்றைக்கு குடியரசுத் தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமனிடம் தெரிவித்தேன். அவர், கவலைப்படாதீர்கள், உங்கள் அமைப்புக்கு தேவையான இடத்தை கலாக்ஷேத்ராவில் ஒதுக்கச் சொல்கிறேன் என்றார். அவருடைய முயற்சியால் எங்களின் சம்பிரதாயா அமைப்பு கலாக்ஷேத்ரா வளாகத்தில் தற்போது செயல்பட்டு வருகிறது.

8 ஆயிரம் மணி நேரப் பதிவுகள்

சீர்காழி சிவசிதம்பரம், பாம்பே ஜெயஸ்ரீ, சஞ்சய் சுப்ரமணியம் உள்ளிட்ட பல கலைஞர்களும் நாடு முழுவதும் பலவிதமான கலைகளில் புகழ்பெற்றிருக்கும் 115 கலைஞர்களும் இந்த அமைப்பில் வாழ்நாள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அமைப்புக்கு தலைவராக டி.எம். கிருஷ்ணா இருக்கிறார்.

பாரம்பரியத்தின் பெருமையையும் இளம் கலைஞர்களின் புதிய சிந்தனைகளையும் இணைக்கும் பாலமாக சம்பிரதாயா அமைப்பு தம்முடைய பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது” என்கிறார், கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக அமைப்பின் நிர்வாக இயக்குநராக இருக்கும் கீதா ராஜகோபால்.

இவர், `மும்மூர்த்திகள் சென்ற கோயில்கள்’ என்னும் தலைப்பில் 35 நிமிடங்கள் ஓடும் ஆவணப்படத்தை ஃபோர்ட் அறக்கட்டளையின் உதவியுடன் எடுத்திருக்கிறார். சமீபத்தில், நாகஸ்வரத்தின் பழமையையும் பெருமையையும் விளக்கும் நூலையும் (The Celestial Nagasvaram) சம்பிரதாயா அமைப்பில் உள்ள தரவுகளைக் கொண்டு உருவாக்கி இருக்கிறார் கீதா ராஜகோபால்.

ஏறக்குறைய 8 ஆயிரம் மணிநேரம் கேட்கும் அளவுக்கு இசை தொடர்பான மரபுச் செல்வங்கள் சம்பிரதாயாவில் பாதுகாக்கப்படுகின்றன. 2,500-க்கும் மேற்பட்ட இசை, நாட்டியம், நாடகம் உட்பட பல கலைகள் தொடர்பான புத்தகங்கள் உள்ளன. ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முந்தைய இசைக் கலைஞர்களின் புகைப்படங்களும் 200-க்கும் மேற்பட்ட கலைஞர்களின் பேட்டிகளும் சம்பிரதாயா அமைப்பில் இருக்கின்றன.

“இங்கிருக்கும் ஆவணங்களை குறிப்பெடுத்துக் கொள்ளலாமே தவிர, பிரதி எடுப்பதற்கு அனுமதிப்பதில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அறக்கட்டளைக்கு பண உதவி செய்வதுடன், இங்கிருக்கும் ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பாது காப்பதற்கு பம்பாய் சண்முகானந்தா சபை உதவிவந்துள்ளது. பல முறை உதவி கோரியும் மத்திய, மாநில அரசுகளின் உதவி எங்களுக்கு கிடைக்கவில்லை. தற்போது நிதி நிலை மோசமாகத்தான் உள்ளது” என்கிறார் கீதா ராஜகோபால்.

சம்பிரதாயாவுக்கு ஒருமுறையாவது சென்று பார்ப்பது அவசியம். நமது மரபான கலைச் செல்வங்களின் வேரின் பெருமை யாரும் சொல்லாமலே புரியும்.

கீதா ராஜகோபால்

தொடர்புக்கு: 9884188068

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

6 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்