பூஜை மட்டும் போதாது

By செய்திப்பிரிவு

பெரிய மகரிஷிகள் உலகத்துக்கு விசேஷச் செய்தியுடன் வருகிறார்களே தவிர, பெயர் புகழுக்காக அல்ல. ஆனால் அவர்களைப் பின்பற்றுகிறவர்கள், அவர்களுடைய செய்திகளைத் தூக்கி எறிந்துவிட்டு, அந்த மகான்களின் பெயரால் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். உண்மையில் உலகத்தின் சரித்திரம் இப்படித்தான் உள்ளது. மக்கள் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பெயரை ஏற்றுக்கொள்கிறார்களா, இல்லையா என்பது பற்றி நான் கவனம் செலுத்தவில்லை.

ஆனாலும், அவரது உபதேச மொழிகள், அவரது வாழ்க்கை, அவரது செய்தி, உலகமெங்கும் பரவுவதற்காக உதவி பண்ணுவதில் எனது ஆயுள் முழுவதையும் அர்ப்பணிக்க நான் ஆயத்தமாக இருக்கிறேன். நான் மிக அதிகமாக அஞ்சுவது இந்த பூஜை அறையைக் கண்டுதான். பூஜை அறை இருப்பதில் தவறில்லை.

ஆனால் அதையே முழு முதலாக, எல்லாமாக ஆக்கிவிட்டுப் பழைய காலத்துக் கட்டுப்பெட்டித்தனத்தை மீண்டும் நிறுவக்கூடிய போக்குச் சிலரிடம் காணப்படுகிறது.

இத்தகைய பழைய காலத்திய, சிதைந்து குலைந்துபோன சடங்குகளில் ஏன் இவர்கள் ஆழ்ந்து விடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களது உணர்ச்சித் துடிப்பு வேலை வேண்டுமென்று தவிக்கிறது. ஆனால் அதற்காக வழித்துறை இல்லாமற்போகவே இவர்கள் மணி அடிப்பதிலும் மற்றச் சடங்குகளிலும் சக்தியை வீணடிக்கிறார்கள்.

ஒரு வழிப்போக்கன் வீதி வழியே மெதுவாகப் போய்க்கொண்டிருந்தான். ஒரு முதியவர் அவர் வீட்டு வாசலில் உட்கார்ந்திருப்பதைக் கண்டான். அவரிடம் அந்த வழிப்போக்கன், குறிப்பிட்ட ஒரு கிராமம் இங்கிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது எனத் தயங்கித் தயங்கி கேட்டான்.

அந்த முதியவர் எதுவும் பேசாமல் இருந்தார். அவன் மீண்டும் மீண்டும் தயங்கிக் கேட்டும் அவர் பதில் சொல்லவில்லை. வெறுத்துப் போன அந்த வழிப்போக்கன், மீண்டும் நடக்கத் தொடங்கினான்.

இரண்டு அடி எடுத்துவைப்பதற்குள் அந்த முதியவர் சொன்னார்.

“நீ கேட்ட அந்தக் கிராமம் இங்கிருந்து ஒரு மைல் தொலைவில் இருக்கிறது”.

“நான் எத்தனை முறை உங்களிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது பதில் சொல்லாமல் இப்போது ஏன் சொல்கிறீர்கள்” என்றான் அந்த வழிப்போக்கன்.

அதற்கு அந்த முதியவர், “ஏனெனில் அப்போது நீ தயங்கித் தடுமாறிக் கொண்டு அந்த ஊருக்குப் போவது பற்றிய அக்கறை இல்லாமல் காணப்பட்டாய். ஆனால் இப்பொழுது நல்ல உறுதியுடன் புறப்பட்டுவிட்டாய். பதில் பெறுவதற்கு உனக்கு உரிமையுண்டு” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE