வெற்றிபெற்றால் வாகைப்பூக்களை சூடிக்கொண்டு தாயகம் திரும்புவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் சங்ககாலத் தமிழர்கள். ரோமானியர்கள் கொஞ்சம் மாறுபட்டு, வீர விளையாட்டுகளில் வெற்றி பெற்றால் ஒலிவமரக் கிளைகளைக் கையில் எந்திக்கொண்டு, தங்கள் வெற்றியைப் பறைசாற்றும் விதமாக உற்றார், உறவினர் நண்பர்கள் கூட்டத்துடன் தெருக்களில் பவனியாக வருவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். இப்படி வெற்றிக்களிப்போடு வருபவர்களை, வழிநெடுகிலும் ஒலிவ மரக் கிளைகளை அசைத்து வரவேற்று உற்சாகப்படுத்துவார்கள் ரோமானியக் குடிமக்கள். இந்தப் பழக்கம் இஸ்ரவேல் மக்களாகிய யூதர்களின் வாழ்க்கை முறையிலும் தொற்றிக்கொண்டது. ஆனால் இவர்கள் ஒலிவமரக்கிளைகளோடு பேரீச்ச மரக்கிளைகள், லில்லி மலர்க்கொத்துக்கள் ஆகியவற்றையும் பவனியாக ஏந்திச் செல்ல ஆரம்பித்தார்கள். அதற்கு அவர்களுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது பாஸ்கா பண்டிகை.
சொந்த ஊருக்கு வந்த இயேசு
எகிப்தியர்கள் கடைபிடித்து வந்த அடிமை முறையால் அவர்களிடம் பலநூறாண்டுகள் அடிமைபட்டுக் கிடந்தனர் யூதர்களாகிய இஸ்ரவேலர்கள், பிறகு அவர்களிடமிருந்து விடுதலைபெற்று தங்கள் சொந்த மண்ணுக்குத் திரும்பினார்கள். விடுதலை பெற்று நாடு திரும்பிய விடுதலை பயணத்தின் நினைவாக இன்றுவரை ஒவ்வொரு ஆண்டும் பாஸ்கா பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். பாஸ்கா என்ற எபிரேயச் சொல்லுக்கு ’கடந்து வருதல்’ என்று பொருள். 2000 ஆண்டுகளுக்கு முன் யூத இனத்தில் பிறந்த இயேசு கிறிஸ்து தனது 33 வயதில் பாஸ்கா பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தாம் பிறந்து வளர்ந்த எருசலேம் நகருக்கு வருகிறார். அப்போது அவர் குட்டிச்சுவர் அருகில் நின்றுகொண்டிருந்த எளிய விலங்கான கழுதையின் மீதேறி வந்தார். வழிநெடுகிலும் சாலையின் நடுவே அவருக்குத் தரைவிரிப்புகளை விரித்து (இதைத்தான் நாம் இன்று சிவப்புக் கம்பள வரவேற்பு என்கிறோம்) கையில் பேரீச்சை குருத்துக்களையும், ஒலிவவமரக் கிளைகளையும், லில்லி மலர்களையும் பிடித்தபடி அவரை முன்னால் வரச்செய்து அவர் பின்னால் பவனியாக அணிவகுத்து வருகிறார்கள்.
வழக்கமாக ஒரு நாட்டின் அரசனோ, ஆளுநரோ தன் ஆட்சிக்கு உட்பட்ட ஊருக்குள் ஒரு இடைவெளிக்குப் பிறகு வந்தால், மக்கள் இதே முறையில் முன்னே ஊர்வலமாக நடந்து செல்லப் பின்னே கம்பீரமாக அதிகாரம் படைத்தவர் யானையிலோ குதிரையிலோ வருவார். ஆனால் இயேசுவின் சொற்களையும் அவரது செயலையும் பின்தொடர விரும்பியே மக்கள் இப்படிச் செய்தார்கள். ஒரு சாமன்ய மனிதனுக்கு இப்படியொரு வரவேற்பு எதற்காக? அதில்தான் அடங்கியிருகிறது இயேசுவின் கடந்த கால வாழ்க்கை.
வெளிபடுத்திக் காட்டிய தேவமகன்
பிறவியிலேயே பார்வையற்றவரைப் பார்க்கச் செய்தல், முடமானவரை நடக்கச்செய்தல், என அற்புதங்களைச் செய்து புகழ்பெற்றிருந்த இயேசு, தனது அற்புதங்களின் உச்சமாக மரணித்துக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டவரை உயிர்ப்பிக்கிறார். அவர் லாசர். இயேசுவின் நண்பர். லாசரை (யோவான் நற்செய்தி 11:1-44) மரணத்திலிருந்து உயிர்ப்பித்ததை நேரில் கண்ட யூதர்கள் பலரும் அவர் மேல் விசுவாசம் கொண்டு அவரைத் தங்களை மீட்க வந்த மெசியா (இரட்சகர்) என்று கருதினர். இதன் பிறகு இயேசுவின் புகழ் காட்டுத் தீயாகப் பரவ ஆரம்பிக்கிறது.
நம்மூரைச் சேர்ந்த ஒரு சாதாரணத் தச்சரின் மகன், நமது புனித நூலில் தீர்க்கத் தரிசிகளால் குறிப்பிட்டிருந்த ’மெசியா’ எனும் மீட்பராக இருக்கிறாரே என்று சொந்த ஊர்க்காரர்கள் ஆச்சரியமும் பெருமையும் கொண்டார்கள். இதன்காரணமாகவே தங்கள் ஆடைகளை சாலை நெடுகிலும் தரையில் விரித்து அவரை வரவேற்றார்கள். அபோது ‘தாவீதின் மகனே (யேசு தாவீதின் பரம்பரையில் வந்தவர்) ஒசான்னா. உன்னதங்களில் மகிமை உண்டாகுக. கடவுளின் பெயரால் வருபவர் ஆசிபெற்றவர்' என்ற ஆரவாரக் கோஷத்துடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
இயேசுவின் மேல் ஏற்கனவே கடும் கோபத்தில் இருந்த பழமைவாதிகளான பரிசேயர்களுக்கு இந்த வரவேற்பு ஊர்வலம் மேலும் எரிச்சலையும் பயத்தையும் உண்டு பண்ணியது. பாஸ்கா பண்டிகையைக் கொண்டாட வந்த இயேசு இதன் பிறகே அவர்களால் வஞ்சகமாகப் பிடிக்கப்படுகிறார். அவரை ஆட்சிக் கட்டிலைக் கைப்பற்றத் துடிப்பவர் என்று குற்றம் சாட்டி, கொடுஞ்சித்திரவதைக்குப் பின் சிலுவையில் அறைந்து கொல்கிறார்கள். தன் வாழ்நாளின் கடைசி நாட்களில் மரணம் எய்தவரை உயிர்ப்பித்த இயேசு, சிலுவையில் மரணமடைகிறார்.
அவர் உயிர்நீத்த நாளை குட் ஃப்ரைடே என்ற புனிதவெள்ளியாகக் கொண்டாடுகிறார்கள், இயேசுவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட தினத்திலிருந்து மூன்றாம் நாள் அவர் உயிர்த்தெழுத்து தன் சீடர்களுக்குக் காட்சி தருகிறார். அந்தநாளை உலகமும் முழுவதுமுள்ள கிறிஸ்தவர்கள் ‘ஈஸ்டர்’ எனப்படும் உயிர்ப்புத் திருவிழாவாகவும் கொண்டாடுகிறார்கள்.
உயிர்ப்புக்கு முதல் வாரம் குருத்தொலை
கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா நடைபெறும் ஞாயிற்றுக்கிழமைக்கு (Easter Sunday)முந்தைய ஞாயிற்றுக் கிழமைதான் உலகெங்கும் உள்ள குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனைத்துத் தேவலங்களிலும் திருப்பலிக்கு முன்னதாகக் குருவானவரால் புனித நீரால் மந்திரிக்கப்பட்ட குருத்தோலைகளைக் கிறிஸ்தவர்கள் கையிலேந்தி தேவாலம் அருகிலுள்ள வீதிகளில் வழியே ஊர்வலமாகச் சென்று பின் ஆலயத்திற்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தென்னை, பனை, பேரீச்சை மரக்குருத்தோலையோ, ஒலிவமரக் கிளைகளோ கிடைக்காத நாடுகளில்
லில்லி உள்ளிட்ட மலர்களையும் நீண்டு வளர்ந்த பூற்களையும் கையேந்திச் செல்கிறார்கள். ஐரோப்பாவில் வில்லோ எனப்படும் புற்களை ஏந்திச்செல்வதால் அங்கே அது ‘வில்லோ சண்டே’ என்றே அழைக்கப்படுகிறது. இயேசுவுக்கு சொந்த ஊர் மக்கள் வழங்கிய வரவேற்பை நினைவுகூரும் விதமாக யூத கிறிஸ்தவர்களால் முதலில் கொண்டாடப்பட்டு வந்த இந்த குருத்தோலை நிகழ்வு நாளடைவில் எகிப்து, சிரியா என்று பரவி, பிறகு கிறிஸ்தவர்களின் முக்கிய நினைவேந்தல் ஆனது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
9 hours ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
9 days ago