தாய்மைப் பேற்றின் துடிப்பை, துயரை, அயர்வை திருக்குர்ஆன் தளும்பும் சொற்களால் பதிவுசெய்கிறது. இஸ்லாத்தில் ஒரு தாய் என்பவள் மரியாதைக்கும் கொண்டாட்டத்துக்கும் உரியவளாகக் கருதப்படுகிறாள்.
தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே தந்தையை இழந்த நபிகள் நாயகத்தின் பிறப்பும் ஆறு வயதில் அன்னையை இழந்து அநாதையாகி அவர், கருணையின் முளைப்பாரியாக கண்விழித்த வாழ்க்கைச் சூழலும் பெண்மை வாழ்க என்று அவரது நபித்துவக் காலம் நெடுகிலும் பேரன்புடன் நினைவுகூரச் செய்தது.
ஒருமுறை நபித் தோழர் ஒருவர் அவரது நன்றிக்கடனுக்கு அருகதையானவர்களை வரிசைப்படுத்திடக் கேட்டு நபிகளின் முன் நின்றபோது முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என மூன்று நிலைகளில் தாய், தாய், தாய் என்று கூறி நான்காவதுதான் தந்தை என நபிகள் நாயகம் தெரிவித்தார்.
“அவனது அன்னை அவனைச் சிரமத்துடனேயே கருவுற்று சுமந்திருந்தாள். சிரமத்துடன் தான் அவனைப் பெற்றெடுத்தாள். மேலும் அவனைச் சும்பபதற்கும் பால்குடியை மறக்கடிப்பதற்கும் முப்பது மாதங்களாகின்றன” என்கிறது திருக்குர்ஆன்.
வேறெவரும் நம்மைச் சுமக்கவில்லை. அவளேதான் கரு சுமந்தாள். வேறொருவர் உணவு தரவில்லை. அவளது உதிரம்தான் நமக்கு அமுதமானது. சூல்கொண்ட கருவறையில் வேறெவரும் நம்மைப் பாதுகாக்கவில்லை. அவளது வெப்பமும் அவளது செவிப்புலனும் அவளது விழிகளும் அவளது நடையும் அவளது அசைவும், அவளது தசையும் அவளது எலும்பும் அவளது சுவாசமும் தான் நம்மை சிசுவாகக் காத்து வளர்த்தெடுக்கிறது. நாம் பிழைப்பதற்காக அவள் அளைத்திருப்பார்.
“அற்பஜலம் அக்கினியால் அழியாமற் காவல்செய்து
கெற்பமதில் வைத்துருவாய் கிளர்ந்ததற்பின்-மெய்ப்புடனே
தாரணியிலாக்கி யென்னை தான்வளர்த்து காத்தவொரு..”
எனத் தக்கலை பீர்முகம்மது அப்பா என்ற சூஃபிக் கவிஞரிடமிருந்து வீசுதென்றலாக ஒரு வெண்பா வெளிப்படும். இறைவன் நம்மைக் கருவில் முளைக்கவைத்து கற்பத்திலிருந்து இறக்கிவைக்கும்வரை மாதாவின் கருவறையைத்தான் தன் பாதுகாப்புப் பெட்டகமாய் பரிபாலிக்கிறான். “ஒருவன் அவனது அன்னையைக் கனிவோடும் கண்ணியத்தோடும் நடத்துவதைக் காட்டிலும், அவனை இறைவனது நெருக்கத்துக்கு கொண்டு சேர்க்கின்ற மற்றொரு அறமிருப்பதாக நான் அறிந்ததில்லை” என அண்ணல்நபி தெரிவிக்கிறார்கள்.
செவிலித்தாய் ஹலீமா
நபிகள் நாயகத்தைப் பார்ப்பதற்கு அவருக்கு அமுதூட்டிய செவிலித்தாய் ஹலீமா வரும்போதெல்லாம் தனது மேலங்கியைத் தரையில் விரித்து அதில் அவரை அமரச்செய்து தான் உபசரிப்பார்கள் என்பதை வரலாறு பதிவு செய்துவைத்துள்ளது.
“உயிரைக்காக்கும் உயிரினைச் சேர்க்கும்
உயிரினுக்குயிராய் இன்பமாகிடும்
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா”
என்று பரவசமாகுவான் பாரதி.
ஏமன் நாட்டைச் சேர்ந்த ஒரு மனிதர் தனது வயோதிக அன்னையை முதுகில் சுமந்துகொண்டு மக்கா நகரத்தின் புனித ஆலயத்தைச் சுற்றிவந்து ‘தவாப்’ என்ற வழிபாட்டை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். அங்கு வந்த அப்துல்ல இப்னு உமரிடம், தனது அன்னைக்கான நன்றிக்கடனை திருப்பிச் செலுத்திவிட்டேனா என்று கேட்டார். “நீ குழந்தையாக உன் அன்னையின் கர்ப்பத்தில் இருந்து வெளியேவரும் போது அவள் அனுபவித்த ஒரு நொடி வேதனைக்கு உனது உதவிகள் எதுவும் ஈடாகாது” என்றார்.
இஸ்லாமிய பேரறிஞர் இயாஸ் இப்னு முஆவியா, அவர் தாய் மறைந்த வேளையில் கதறி அழுதார். அவரைப் பார்த்தவர்கள், “இப்படி நீங்களே அழலாமா?” என்று கேட்டனர். அதற்கு அவர், “நான் சுவனம் செல்வதற்காகத் திறந்திருந்த இரண்டு வாசல்களில் ஒன்று இப்போது அடைபட்டுவிட்டது. அதற்காகத் தான் அழுகிறேன்.” என்றார்.
அன்னைக்குப் பணிசெய்வதன் மூலம் ஒரு முஸ்லிம் சொர்க்கத்தை அடையும் பேறினை அடைவதை திருக்குர்ஆனும் நபிமொழியும் பல இடங்களில் வலியுறுத்துகின்றன.
“தெய்வீக நியதியைத் தன்னகத்தே கொண்டவளே
உன் பராமரிப்பு எங்கள் நடத்தையைச் சமைக்கிறது
அது எங்கள் சிந்தனையை பேச்சை செயல்களை
உருவாக்குகிறது. உன் உயிர்ப்பிலே தெய்வீகம் வீசுகிறது.”
என்ற மகாகவி இக்பாலின் கவிதை மனசெல்லாம் நிறைந்து மறுகால் பாய்கிறது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago