இசையே தொழில் - மார்கழித் திருவிழா

By ப.கோலப்பன்

இசை குறித்த தி. ஜானகிராமனின் முக்கியமான இரண்டு சிறுகதைகளான ‘செய்தி’யும் ‘இசைப்பயிற்சி’யும் அடிப்படையில் நாகசுர இசையின் மேன்மையை எடுத்துரைப்பவையே.

கர்நாடக இசையின் மகத்துவமும், ராகங்களின் அழகும் ஒரு மேற்கத்திய இசைக்கலைஞனான போல்ஸ்கோவின் செவியில் நுழைந்து, நெஞ்சு நிறையப் புகுந்து நீக்கமற நிற்கும் ஜால வித்தையை நாகசுரம் மட்டுமே செய்ய முடியும். இந்த விஷயத்தை ஜானகிராமன், தனது ‘செய்தி’ சிறுகதையை உருவாக்கும்போதே முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.

‘இசைப் பயிற்சி’ கதையில் மைக்கேலின் மகன் குப்பாண்டிக்கு இசைஞானத்தை ஊட்டி, தன்யாசியை குழைத்தெடுக்க சொல்லித் தந்தது நாயனம்தான். செவ்வியல் இசை குறித்து எந்த அறிவும் இல்லாத, அதேநேரத்தில் அதன் மேல் மாளாக்காதல் கொண்டிருக்கும் ரசிகன் விரும்பினால், அவனுக்கு இசை உலகின் சாளரத்தைத் திறப்பவை நாகசுர தவில் இசைதான்.

சில ஆண்டுகளுக்கு முன்பு காலச்சுவடு பதிப்பகம் தமிழாக்கம் செய்து வெளியிட்ட ‘ஒரு சூத்திரன் கதை’ யின் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. தமிழக பிற்பட்டோர் ஆணையத்தின் முதல் ஆணையரான ஏ.என். சட்டநாதனின் சுயசரிதை அது.

தமிழக அரசில், சமூகக் களத்தில் நிகழ்ந்த மாற்றங்களை விளக்குவதில் மிகவும் முக்கியமான புத்தகம் அது. அப்புத்தகத்தில் இசை குறித்து ஏறக்குறைய ஒரு அத்தியாயமே இடம் பெற்றிருக்கிறது என்றால் ஆச்சரியமான விசயம்தான். ஏனென்றால் சட்டநாதனின் தந்தை அறுமுக நாயகர் ஒரு நாகசுர வித்வான். சட்டநாதனே சிறுவனாக இருந்த போது அவருக்கு தாளம் போட்டிருக்கிறார்.

தென்காசி கிட்டப்பாவும், அம்பாசமுத்திரம் துரைராஜூம்

இப்புத்தகம் வெளிப்படுத்தும் முக்கிய தகவல் என்னவென்றால், திருநெல்வேலி மாவட்டத்தில் காலம் காலமாக வசித்து வரும் படையாச்சிகள் இசைத்துறையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதுதான். நையாண்டி மேளம் வாசிப்பதில் பேர்பெற்றிருந்த தென்காசி கிட்டப்பாவும், அம்பாசமுத்திரம் துரைராஜும் இச்சமூகத்தைச் சேர்ந்தவர்களே.

படையாச்சிகளைத் தவிர, கம்பர்கள், சுண்ணாம்புப் பரவர்கள், சோழகர்கள், தொண்டமான், மருத்துவர்கள் மற்றும் தலித்துகளும் இசைத்துறையில் தடம் பதித்துள்ளனர். இன்றும் தொடர்ந்து நாகரசும் தவில் வாசிப்பவர்கள் இச் சமூகத்தைத் சேர்ந்தவர்களே.

“இவர்கள் அனைவருமே முறையாக இசைப் பயின்று பின்பு தொழில்முறையில் நையாண்டி மேளம் வாசிக்கிறார்கள். தென்மாவட்டங்களில் உள்ளவர்கள் நையாண்டி மேளம் வாசிப்பதற்கும் மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள் நையாண்டி மேளம் வாசிப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில், தெற்கத்தி நையாண்டியில் செவ்வியல் கூறுகள் ஓங்கி நிற்கும்” என்கிறார் என். சுப்பிரமணியம். இவரது தந்தையான நாலாயுதக் கம்பர் நாகசுர கலைஞர். ஆனால் கர்நாடக இசைக் கச்சேரிகள் மட்டுமே வாசித்தவர்.

கம்பர்களைப் பொறுத்தவரை பாரம்பரியமாக காளிக்கோயில் பூசையும் இசைப் பணியும் மேற்கொண்டு வருகிறார்கள். இன்று தவில் உலகில் நிலைத்து நின்றுவிட்ட வலையப்பட்டி ஏ.ஆர். சுப்பிரமணியம் கன்னியாகுமரி சுடலையாண்டி கம்பர் குழுவில் தவில் வாசித்தவர்தான்.

பத்தமடை இராசா, சின்னசுப்பையா, திருச்செந்தூர் இராசகோபாலக்கம்பர் என நாகசுர உலகில் தடம் பதித்தவர்கள் கம்பர்களே. அதேபோல் தவில் வாசிப்பில் திருச்செந்தூர் நையினார் சாமி அவர்காலத்து வித்வான்கள் எல்லோருக்கும் இணையாக வாசித்திருக்கிறார். “அது ஞானத்தவில். ஒருத்தர் வாசித்ததை அப்படியே சிரமம் இல்லாமல் வாசித்து விடுவார்,” என்று நைனார்சாமி குறித்து வலையப்பட்டி கூறியிருக்கிறார்.

நையாண்டி மேளம்

கம்பர்கள் நையாண்டி மேளம் அதிகமாக வாசிக்கவில்லையென்றாலும், பிற்காலத்தில், வள்ளியூர் இராசுகுட்டி போன்றோர் அதில் இறங்கி புகழ் பெற்றனர். நையாண்டி மேளத்தைப் பொறுத்தவரை அற்புதமானக் கலைஞர்களாக உயர்ந்தவர்கள் கடையநல்லூர் சண்முகசுந்தரமும் சிங்கிகுளம் கணேசனும்தான். இவர்கள் இருவரும் முறையே சோழகர் மற்றும் தொண்டமான் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

“எங்கள் சமூகத்துக்கும் (சுண்ணாம்பு பரவர்) இசைக்கும் எப்படி தொடர்பு வந்தது என்பதை விளக்க எந்தச் சான்றும் இல்லை. ஒருவேளே கம்பர், படையாச்சிகளுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு காரணமாக இசைத்துறைக்கு வந்திருக்கலாம்,” என்கிறார் நாகர்கோவில் பறக்கையைச் சேர்ந்த மதுசூதனன்.

இவருடைய தாத்தாக்களான மாடக்கண்ணு முத்தையன் ஆகிய இருவரும் குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பம்பை வித்வான்களாக விளங்கியவர்கள். அவர்களுக்கு புல்லாங் குழலும் மிருதங்கமும் வாசிக்கத் தெரியும்.

குமரி மாவட்டத்தில் கர்நாடக இசை உலகில் பெரும்மேதையாகக் கருதப்பட்டவர்கள் பூதப்பாண்டி அருணாசல அண்ணாவி. இவர் மதுசூதனின் உறவினர்தான். இவரிடம்தான் திரைப்பட இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன் தொடக்கத்தில் இசைக்கல்வி பயின்றார். நாகர்கோவில் இசைப்பள்ளியை நடத்தி வந்த அருணாசல அண்ணாவியின் மகனான சிதம்பரநாதன், மலையாளத் திரைப்பட உலகில் பெரிய இசையமைப்பாளராக வலம் வந்தவர்.

இசைத்தட்டாக வெளியிட்ட முதல் கலைஞர்

கடையநல்லூர் சண்முகசுந்தரம் ஞானப்பழம் புகழ் ஓ.எஸ். சண்முகசுந்தரம் என்ற பட்டத்துடன் அழைக்கப்பட்டார். கே.பி. சுந்தராம்பாள் பாடிய இப்பாடலை நாகசுரத்தில் அப்படியே வாசித்து இப்பேரைச் சம்பாதித்து விட்டார். தன்னுடைய நையாண்டி மேள வாசிப்பை இசைத்தட்டாக வெளியிட்ட முதல் கலைஞர் இவராகத்தான் இருப்பார். தென் மாவட்டங்களில் சண்முகசுந்தரத்திடமும் சிங்கிக்குளம் கணேசனிடமும் முதலில் பேசி நாள்குறித்த பிறகுதான் கொடை விழாவுக்கு நாள் குறித்த காலம் இருந்தது.

தனது தம்பியான சிவக்கொழுந்து இரண்டாவது நாயனம் வாசிக்க, இன்னொரு தம்பியான கோவிந்தன் தவில் வாசிக்க, மதுரை சோமுவின் “மருதமலை மாமணியே முருகையா” என்று சிங்கிகுளம் கணேசன் தொடங்கினால் கூட்டம் அப்படியே கட்டுண்டு நிற்கும்.

பொதுவாக எந்தத் திரைபடப் பாடலை வாசித்தாலும் அதன் இராக சொரூபத்தை லேசாகவோ, விரிவாகவோ ஆலாபனை செய்துதான் நையாண்டி வாசிப்பார் கணேசன். இத்துடன் தனியாக கர்நாடக சங்கீதக் கச்சேரிகளும் நடத்தி வந்தார். “ஆனால் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த யாரையும் இத்துறையில் எங்கள் தந்தை ஊக்குவிக்கவில்லை. இது சிரமமான தொழில் என்று அவர் நினைத்தார்” என்கிறார் சிங்கிகுளம் கணேசனின் மகன் பாலசுப்பிரமணியன்.

“திடீரென சிங்கிகுளம் கணேசனை ஞாபகப்படுத்திட்டீங்களே. அது ஒரு பிறப்பு,” என்று பழைய நினைவில் மூழ்குகிறார் தமிழறிஞரும் பேச்சாளருமான நெல்லைக் கண்ணன். ஆனால் நெல்லைக்கண்ணன் மிகவும் சிலாகித்துப் பேசுவது கணியான் கூத்துக் கலைஞர்கள்தான். “அதுபாட்டுக்கு கல்யாணியும் தோடியும் நாட்டையும் வந்து விழும்,” என்றார். கணியான் கூத்தை நிகழ்த்துபவர்கள் ‘கணியான்’ என்ற தனி சமூகத்தினர்.

“தென் மாவட்டங்களில் பங்குனி, சித்திரை மாதங்களில் நடக்கும் கொடை விழாக்களை நம்பித்தான் இக்கலைஞர்களின் வாழ்வு இருந்தது. இதைத் தவிர அவர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கான இடங்கள் அவர்களுக்கு வாய்க்கவில்லை. கற்றது கர்நாடக சங்கீதம்தான். தொழிலுக்காக நையாண்டிக்குப் போனார்கள்” என்றார் சுப்பிரமணியம்.

இந்த நையாண்டி மேளக்கலைஞர் களை அடிப்படையாக வைத்து தமிழ் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் ‘சஞ்சாரம்’ என்ற நாவலை எழுதியிருக்கிறார். விரைவில் வெளியாகும் இந்நாவல் இக்கலைஞர்களின் வாழ்க்கையையும் இசையையும் அற்புதமாகப் படம்பிடித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

18 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்