நிலத்தடியிலும் பல ஆன்மிக அதிசயங்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் பாதாள புவனேஸ்வர். அற்புதமான ஆன்மிகத் தலங்களில் ஒன்று இது.
குமாவுன். உத்தராகண்ட் மாநிலத்தின் எழில் கொஞ்சும் பகுதி. அங்கு மலைகள் புடைசூழ இரு நதிகளிடையே தவழும் அழகிய கிராமம்தான் இந்த பாதாள புவனேஸ்வர். இங்கே ஒரு குகைக் கோவில் உள்ளது . 160 அடி நீளமும் 100 அடி ஆழமும் கொண்ட சுண்ணாம்புக்கல் குகை இது.
திரேதாயுகத்தில் ரிதுபர்னன் என்ற மன்னன்தான் முதல்முதலில் இங்கே நுழைந்தான் என்று ஒரு புராணக்கதை உள்ளது. அதன் பின் பாண்டவர்கள் இங்கு வந்து ஈஸ்வரனை வணங்கி பின் வானுலகம் சென்றார்களாம். இந்தக் கலியுகத்தில் ஆதிசங்கரர் இங்கு வந்து பூஜை செய்து லிங்கத்திற்குச் செப்பிலான காப்பு வைத்து விட்டுச் சென்றிருக்கிறார். பண்டாரிகள் எனப்படும் குருமார்கள்தான் இங்கே இன்றுவரை பூஜை செய்கிறார்கள்.
பல நூற்றாண்டுகளாக இங்கே வழிந்தோடும் நீர்க் கனிமங்கள் கலந்து படிகங்களாக மாறுகின்றன. அவை கற்களைப் பல்வேறு உருவங்களாக வெட்டியிருக்கின்றன. இந்த வெட்டுக்களின் விளைவாக அற்புதமான உருவங்கள் இங்கே காணக் கிடைக்கின்றன. ஒரு கை தேர்ந்த சிற்பியின் லாவகத்துடன் கற்கள் இங்கே வெட்டப்பட்டிருப்பதுதான் இந்த இடத்தின் அற்புதம்.
சென்ற யுகத்தில் மூடிய கதவுகள்
இந்தக் குகைக்கு நான்கு கதவுகள் உண்டு என்கிறார்கள். ஆனால் அவற்றில் இரண்டு கதவுகள் போன யுகத்திலேயே மூடப்பட்டுவிட்டனவாம். இதை பற்றி ஸ்கந்த புராணத்தில் குறிப்பு உள்ளது.
தூரத்திலிருந்தே கோவிலைப் பார்க்க முடிகிறது. கோவில் வளாகத்தில் சிவன்,பார்வதி போன்றவர்களுக்குப் பல கோவில்கள் உள்ளன. அதையும் தாண்டிச் சென்றால் குகையின் முகத்துவாரம் தெரிகிறது. நுழையும் வழி மிகக் குறுகலாக உள்ளது. தவழ்ந்தும், நெளிந்தும், சுருக்கிக்கொண்டும் புழுவைப் போல்தான் உள்ளே செல்ல வேண்டும்.
குகையின் பக்கவாட்டில் உள்ள சுவரில் பிடிமானத்திற்காகச் சங்கிலிகள் பொருத்தப்பட்டுள்ளன. கால்களை மிகவும் கவனமாகத்தான் படிகளில் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் தரை வாரி விட்டுவிடும். சுமார் 80 படிகள் இறங்கினால்தான் நிலத்தடிச் சுரங்கங்களைக் காண முடியும்.
தொங்கும் தஷகன் பாம்பு
படிகளின் நடுவே நரசிம்மரின் உருவம் தெரிகிறது. கீழே இறங்கியவுடன் முதலில் தெரிவது ஆதிசேஷன் தலையில் பூமியைத் தாங்கியபடி இருக்கும் காட்சி. அதற்கு முன்னால் ஒரு யாக குண்டம். இங்குதான் அர்ஜுனனின் கொள்ளுப் பேரன் ஜனமேஜயன் தன் தந்தை பரீட்சித்தின் மரணத்திற்குப் பழி வாங்குவதற்காக நாக யாகம் செய்தான் என்று சொல்லப்படுகிறது. தக்ஷகன் பாம்பு உருவம் இங்கே தொங்குகிறது.
இது ஒரு குகை அல்ல. ஒன்றுக்குள் ஒன்றாகக் குகை நகரம் என்றே இதை அழைக்கலாம். இங்கிருந்து தொடங்கி நாம் ஆதிசேஷனின் முதுகின் மேல்தான் நடக்க ஆரம்பிக்கிறோம்.சிறிது தூரத்தில் எட்டு இதழ் தாமரையிலிருந்து தண்ணீர் கணேசரின் மீது சொட்டுச் சொட்டாக விழுகிறது. சிவபெருமான், கணேசரின் தலையை அறுத்த பிறகு பார்வதியின் கோரிக்கையின் பேரில் யானைத் தலையை எடுத்துவரச் செய்து, எட்டு இதழ் கொண்ட தாமரை மூலம் தண்ணீர் தெளிக்கச் செய்து உயிர்பெறச் செய்தார் என்னும் கதையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்தக் கதையை நினைவுபடுத்தும் விதமாகத்தான் எட்டு இதழ் தாமரை இங்கே அமைந்திருக்கிறது.
குகையின் வளைவுகளைக் கடந்தால் பத்ரிநாத், கேதார்நாத், அமர்நாத் விக்ரகங்கள் லிங்கங்களின் வடிவில் காணப்படுகின்றன. பக்கத்தில் கால பைரவர். பயங்கரமான உக்கிரத்துடன் துருத்திக்கொண்ட நாக்குடன் நம்மைப் பார்க்கும்போது மிரண்டுபோகிறோம். அது கல்தான் என்பதை உணரச் சில கணங்கள் பிடிக்கின்றன. அதன் வாயின் வழியாக உள்ளே செல்ல முடியுமானால் மோட்சத்தை அடைய முடியுமாம். அதன் முன் பாதாள சண்டியுடன் சிம்மத்தின் மேல் மண்டை ஓடுகளுடன் காட்சி தருகிறார் சிவபெருமான்.
லிங்கங்களை வைத்த ஆதிசங்கரர்
அடுத்து நாம் நுழைவது கருவறை. செப்புக் கவசங்கள் பொருத்தப்பட்ட மூன்று இயற்கை சக்திகளைக் குறிக்கும் மூன்று சிறிய லிங்கங்கள். இவைகளை இங்கே பொருத்தியவர் ஆதிசங்கரர். இவைகளுக்குத்தான் பூஜை நடக்கிறது. இந்த லிங்கங்களின் மீது மாறிமாறி நீர் அபிஷேகம்போலச் சொட்டிக்கொண்டிருக்கிறது. இங்கு சனி பிரதோஷம் அன்று வழிபடுபவர்கள் தன்னுடைய மூதாதையர்களுக்குச் சாந்தி அளிக்கிறார்கள்.
அடுத்தது கழுத்தில் நாகங்களுடனும், ஜடாமுடியுடனும் சிவன் தோற்றம் தருகிறார். குகையிலிருந்து திரும்புகிறோம். வந்த வழியில் அல்ல. அது வேறு வழி. அந்தப் பாதையில் நான்கு யுகங்களை குறிக்கும் சிவலிங்கங்கள். கலியுகத்தைக் குறிக்கும் லிங்கம் எப்போது மேலிருந்து வரும் கூம்பைத் தொடுகிறதோ அதுவே கலியுகம் முடியும் தருணமாம். சிவபெருமானுடன் இங்கு முப்பது முக்கோடி தேவர்களும் குடிகொண்டுள்ளார்கள் என்பது ஐதீகம்.
மறுபடியும் பழைய பாதையை அடைகிறோம். இங்கு வந்து இந்தக் குகைக்குள் ஒரு முறை நுழைந்து வெளியே வந்தால் ஒரு புதியதொரு உலகைக் காணலாம்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
10 hours ago
ஆன்மிகம்
13 hours ago
ஆன்மிகம்
19 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago