உலகம் நன்மை பெற...

By செய்திப்பிரிவு

ஒரு நிலையில் கவுதம முனிவர், உடலை வருத்தும் தியானத்தை விடுத்து, உணவு உட்கொள்ள ஆரம்பித்தார். அப்போது அவருடைய மனதில் ஆற்றிலே தெளிந்த நீரோடுவதுபோல, நல்ல எண்ணங்கள் ஓடின.

முன்பு மிகவும் வற்றிப் போயிருந்த தன்னுடைய உடல், இப்போது நன்னிலை அடைந்திருப்பதை உணர்ந்தார். பிறகு இவ்வாறு உடம்பைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பது தவறு; இப்படி எண்ணுவது கூடாது என்று கவுதமர் தீர்மானித்தார்.

ஆசிரமத்துக்கு எதிரிலே மான், பசு, முயல் போன்றவை வருவதைக் கண்டார். மரங்களில் அமர்ந்து குரல் கொடுக்கும் மயில், குயில், கிளி போன்ற பறவைகளைப் பார்த்தார். அருகில் உள்ள குளம் குட்டைகளில் தாமரை, அல்லி முதலிய மலர்கள் மலர்ந்திருந்த காட்சியையும் எதிரில் ஓடிக்கொண்டிருக்கும் நேரஞ்சர ஆற்றின் தூய நீரோட்டத்தின் இயற்கைக் காட்சியையும் கண்டார். இவையெல்லாம் எவ்வளவு அழகிய காட்சிகள் என்று முதலில் அவர் நினைத்தார்.

சிதறும் மனம்

அப்போது, இவ்வாறு நினைப்பதும்கூட நல்லதன்று; இப்படிப்பட்ட எண்ணங்களையும் அடக்க வேண்டும் என்று தனக்குள் எண்ணிக்கொண்டார். அதிக வெயில், அதிகக் குளிர் முதலிய தட்பவெப்ப நிலைகளைப் பற்றிக்கூட மனத்தில் விருப்போ - வெறுப்போ கொள்ளக் கூடாது, அத்தகைய எண்ணங்களையும் தடுக்க வேண்டும் என்று தனக்குள் கருதினார்.

தனது ஆசிரமத்தைச் சூழ்ந்துள்ள காடுகளில் புலி, மான், பன்றி முதலான உயிரினங்களுக்குத் துன்பம் உண்டாவதைக் கண்டார். பிச்சை புகுவதற்காகக் கிராமத்துக்குப் போகும்போது வேலையில்லாமல் கஷ்டப்படுகிற மக்களைக் கண்டார். மற்றவர்களுக்குத் துன்பம் உண்டாக்கும் கொடுமைக் காட்சிகள் சிலவற்றையும் கண்டார். இவற்றைக் கண்டபோது, மனத்திலே வருத்தம் உண்டானது. அப்போது இவ்வாறு நினைப்பதும்கூடத் தவறு; இப்படி நினைப்பதால் மனம் ஒருமைப்படாமல் சிதறுகிறது என்ற எண்ணம் அவருக்கு உண்டானது.

ஒற்றைப் புள்ளியில்...

மனத்திலே ஏற்படுகிற எண்ணங்களை எல்லாம் நல்லவை என்றும் தீயவை என்றும் இரண்டு விதமாக அவர் பகுத்துப் பார்த்தார். தனது உள்ளத்திலே தோன்றுகிற நல்ல எண்ணங்கள், தனக்கும் பிறருக்கும் நன்மை பயக்கும் என்று நினைத்தார். இந்த நல்ல எண்ணங்களினால் புத்தப் பதவியும் கிடைக்கும் என்று அவர் கருதினார். இவ்வாறு இரண்டு விதமான எண்ணங்களைப் பற்றி விழிப்புடனும் ஊக்கத்தோடும் இரவும் பகலும் நினைத்துக்கொண்டே மனத்துக்கு அதிக வேலை கொடுத்துக்கொண்டிருந்ததால், அவர் மூர்ச்சையடைந்து கீழே விழுந்தார்.

மனதில் அமைதி ஏற்படாதபோது, உடலுக்கும் அமைதி ஏற்படாது. அதனால், மனத்துக்கு ஏற்பட்ட துன்பங்களைப் போக்க, தியானத்தில் அமர்ந்து அமைதியை நாடினார். தன்னையும் மீறித் தீய எண்ணங்கள் வந்தால், உடனே அவற்றை நீக்கி நல்ல எண்ணங்களையே நினைத்தார். இவ்வாறு மனதை ஒருநிலைப்படுத்தி, அதைப் பண்படுத்துவதற்குக் கடுமையாக முயன்றுகொண்டே கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளைக் கழித்தார்.

நன்றி: மயிலை சீனி. வேங்கடசாமியின்
‘கவுதம புத்தர்'
தொகுப்பு: ஆதி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்