நீங்கள் காணாத கிறிஸ்துமஸ் காட்சிகள்

நெருங்கிவிட்டது டிசம்பர் 25. கிறிஸ்துவின் பிறந்தநாளை ‘கிறிஸ்துமஸ் பண்டிகை’யாகக் கோலாகலமாகக் கொண்டாடுவதற்கு உலகெங்கிலும் வாழும் கோடிக்கணக்கான கிறிஸ்தவர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.

இன்று கிறிஸ்தவ மக்கள் என்றில்லாமல் மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களும், வியாபர நிறுவனங்களை நடத்துபவர்களும் ஸ்டார்களை, வண்ணவிளக்குகளையும் கட்டி ஒளிர விட்டு தங்கள் சகோதரத்துவ உணர்வை வெளிப்படுத்துகிறார்கள். தேவாலயங்களோ டிசம்பர் முதல் தேதி முதலே வண்ண விளக்குகளால் ஜோலிக்க ஆரம்பித்து விடுகின்றன.

ஆனால் இந்தியாவுக்கு வெளியே கிறிஸ்துமஸை எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?

இயேசு பிறந்த ஊரில்

இயேசு கிறிஸ்து பிறந்த ஊரான பெத்லகேமில் அவர் பிறந்த இடமாகக் கருதப்படும் இடத்தில் அமைந்திருக்கிறது ‘சர்ச் ஆஃப் நேட்டிவிட்டி’ தேவாலயம். வண்ண வண்ணக் கொடிகளாலும், அலங்கார விளக்குகளாலும் அலங்கரிக்கப்படும் இந்த தேவாலயத்துக்கு கிறிஸ்துமஸ் இரவில் மக்கள் குவிந்துவிடுகிறார்கள். இங்கே இயேசுவின் பிறப்புக் காட்சிகள் ஒரு நகரும் நாடகமாக சித்தரிக்கப்பட்டு, அதுவொரு ஊர்வலமாக ஊரை வலம் வருகிறது.

அலங்கரிக்கப்பட்ட குதிரைகளில் அமர்ந்தவர்கள் முன்னே செல்ல திரளான மக்கள், தலைமை குருக்கள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் இதில் கலந்து கொள்கிறார்கள். ஊர்வலம் தேவாலயத்தை அடைந்ததும் தெய்வக் குழந்தையின் திருச்சொரூபம் குடிலாக அமைக்கப்பட்ட இடத்தில் ஊர்வலம் முடிவடைய தேவாலயத்தில் நள்ளிரவு ஆராதனை நடக்கிறது.

ரோமில் கிறிஸ்துமஸ்

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை பீடமான வாத்திகன் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி போப் ஆண்டவர் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடத்தி நற்செய்தி வெளியிடுவது வழக்கம். இந்தச் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்க லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் திரண்டுவிடுகிறார்கள். இந்த பிராத்தனையை உலகம் முழுவதும் பல தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு செய்வதோடு ‘வாத்திகன் வானொலி’ நிலையமும் ஒலிபரப்பு செய்கிறது.

லத்தின் அமெரிக்காவின் போசாடாஸ்

லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்ஸிகோவில் டிசம்பர் 16-ம் தேதி தொடங்கி ‘கிறிஸ்துமஸுக்கு முந்திய ஒன்பது நாட்களை’ மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்கள். இந்தப் பண்டிகையை ‘போசாடாஸ் பண்டிகை’ என்று அழைக்கிறார்கள். பெத்லகேம் நகரில் இயேசுவின் பெற்றோரான யோசேப்பும் மரியாளும் ஆதரவின்றி அலைந்து திரிந்ததையும், கடைசியில் கருணை காட்டப்பட்டு மாட்டுத் தொழுவத்தில் தங்க அவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டதையும் நினைவுபடுத்தும் நாட்கள் இவை.

இந்த ஒன்பது நாட்களும் ஒவ்வொரு இரவும் குடும்பத்தினரும் நண்பர்களும், கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய நாட்களில் நடந்த சம்பவங்களை நடித்துக்காட்ட ஒன்றுகூடும் பண்டிகை இது. யோசேப்பு, மரியாள் ஆகியோரின் சிலைகளை ஒவ்வொரு வீடாகத் தூக்கிச் சென்று “பாடல் பாடித் தங்குவதற்கு இடம் கேட்பார்கள். வீட்டிலிருப்பவர்கள் பாடல் மூலமே தங்க இடம் இல்லை என்பார்கள். பிறகு தங்க இடம் தரச் சம்மதிக்கும்வரை பாட்டுப் பாடிக்கொண்டே இருப்பார்கள்.

இப்படித் தொடங்கும் கிறிஸ்துமஸுக்கு முதல் நாள் மாலை ‘நோகெப்வீனா’ கொண்டாடப்படுகிறது. குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி புளிப்பில்லா அப்பத்துடன் விருந்து பறிமாறி உண்டு மகிழ்வதுடன் அன்று இரவு இயேசு பிறப்புக்காக விழிப்புடன் காத்திருந்து கொண்டாடுகிறார்கள்.

வான சாஸ்திரிகள் வசித்த நாட்டில்

இஸ்லாமிய நாடான இரானிலும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. இயேசு அவதரித்தபோது அவரைக் காண வந்த வானியல் அறிஞர்கள் மூவர் வாழ்ந்த நாடாக இரான் கருதப்படுகிறது. இரானிய கிறிஸ்துவர்கள் கிறிஸ்துமஸை ஒட்டி டிசம்பர் 1-ம் தேதி முதல் நோன்பு இருக்கின்றனர். இக்காலத்தில் அவர்கள் அசைவம் உண்பதில்லை. இது அவர்களால் ‘சிறுநோன்பு’ என அழைக்கப்படுகிறது. அதேபோல இயேசு உயிர்த்தெழும் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பு ஆறு வார காலம் இதேபோல் கடைப்பிடிப்பதை அவர்கள் ‘பெருநோன்பு’ என்கிறார்கள்.

குடில் கொடுத்த நாடு

இத்தாலி நாட்டில் வாழ்ந்து மறைந்த பிரான்சிஸ் அசிசி என்ற புனிதரால் 1223-ம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டதுதான் இயேசுவின் பிறப்பைச் சிறுசிறு திருவுருவச் சிலைகளின் வழியாக காட்சியாக சித்தரிக்கும் குடில் வழிபாடு. இயேசு பிறந்த மாட்டுத்தொழுவம், அவரது பெற்றோர் , தெய்வக் குழந்தை இயேசு, நற்செய்தியை முதலில் கேட்ட இடையர்கள், ஆடு, மாடுகள், வானியல் அறிஞர் மூவர், நற்செய்தி அறிவித்த தேவதூதன் என அன்றைய பெத்லகேமைக் கொலுவாகச் சித்தரிக்கும்அமைப்பே குடில் வழிபாடு. பிறந்த இயேசு பாலன் திருவுருவச் சிலையை முத்தமிட்டு மகிழும் உள்ளங்களில் அன்பு, அமைதி, சமாதானம் என்று இறை இயேசு பிறக்கிறார் என்கிற நம்பிக்கையை குடில் வழிபாடு உருவாக்குவதாக கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள்.

ஜெர்மனியின் கிறிஸ்துமஸ் மரம்

சுமார் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் ஜெர்மனிய கிறிஸ்தவ மக்கள் ஊசியிலை மரத்தை கிறிஸ்துமஸ் சமயத்தில் அலங்கரிக்க ஆரம்பித்தனர். 1841-ம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் ஆல்பர்ட் தனது ராஜமுறை கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் கிறிஸ்துமஸ் மரத்தை அறிமுகப்படுத்தினார். இப்படித்தான் கிறிஸ்துமஸ் மரம் புகழ்பெற்றது. அதேபோல மெக்ஸிகோவில் ‘போய்ன்செட்டியா’ என்பது கிறிஸ்துமஸ் மலராகக் கௌரவம் செய்யப்படுகிறது. இதைப் ‘புனித இரவின் மலர்’ என்று அழைக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE