காட்டு வழியில் இரவு நேரப் பயணம்

நாங்கள் ஒரு சமயம் தானக்பூரிலிருந்து நேபாள நாட்டிற்குச் செல்லும் வழியில் ஒரு காட்டில் தங்கினோம். அதிகாலை மணி இரண்டு ஆகியிருக்கும். அப்போது, “காட்டுப்பாதையில் 12 மைல் தூரம் கடந்து சென்று தானாக்பூரில் உள்ள ஒரு கடைக்குச் சென்று ஏதாவது வாங்கி வா. நாம் ஏதாவது சாப்பிடுவோம்” என்றார் எனது குருநாதர்.

எங்களுடன் மற்றொரு யோகியும் தனது சீடனோடு வந்திருந்தார். அவர் எனது குருநாதரிடம், “நீங்கள் இவனை இரவில் ஏன் அனுப்புகிறீர்கள்? நான் என்னுடன் இருப்பவனை இவ்வாறு அனுப்ப மாட்டேன்” என்று சொன்னார்.

“நீங்கள் உங்கள் சீடனை யோகியாக அல்லாது ஆண்மையற்றவனாக உருவாக்கப் போகிறீர்கள். நான் இந்தப் பையனுக்குப் பயிற்சியளித்து வருகிறேன்” என்று கூறிவிட்டு, என்னைப் பார்த்து, “வா, மகனே! இந்த விளக்கையும், குச்சிகளையும் உடன் எடுத்துச் செல், காலணிகளை அணிந்து கொண்டு, கையில் ஒரு கம்பை வைத்துக் கொண்டு 3 அல்லது 4 நாட்களுக்குத் தேவையான அளவு பலசரக்குச் சாமான்களை வாங்கி வா!” என்றார் என் குருநாதர். நான் உடனே கிளம்பினேன்.

அந்த நெடிய இரவுப் பயணத்தில் பலமுறை புலிகளும், பாம்புகளும் எனது பாதையில் கடந்தன. இருபுறமும் என்னைவிட உயரமாகக் காணப்பட்ட புல்வெளியிலிருந்து பலவிதமான ஒலிகளைக் கேட்டேன். எனது சிறிய விளக்கோடு 12 மைல் தூரம் நடந்து கடைக்குச் சென்று சாமான்களை வாங்கிக் கொண்டு மறுநாள் காலை 7 மணிக்குத் திரும்பினேன்.

“நீ எப்படி இருக்கிறாய்?” என்று என் குருநாதர் கேட்டவுடன் நான் வழியில் நிகழ்ந்த அனைத்தையும்பற்றி விவரித்தேன். இறுதியில், “போதும் வா, நாம் சென்று உணவு தயாரிக்கலாம்” என்று அவர் என்னை அழைத்தார்.

ஞானமார்க்கத்தில் சென்று ஞானத்தைப் பெறுவதற்குப் பயமற்ற தன்மையும் அத்தியாவசியமானதே. எப்போதுமே பயமில்லாதிருப்பவர்கள் உன்னதமானவர்களே. அனைத்துப் பயங்களிலிருந்தும் விடுபட்டிருப்பதும் ஞான ஒளிப்பாதையில் ஒரு படிக்கல்தான்.

- இமயத்து ஆசான்கள் நூலிலிருந்து

புத்தகம்: இமயத்து ஆசான்கள்
ஆசிரியர்: சுவாமி ராமா
வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்,
23, கண்ணதாசன் சாலை,
தியாகராய நகர்,
சென்னை-600017.
தொலைபேசி: 044-24332682.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE