கடவுளை எப்படிக் காணலாம்? கடவுள் என்பது ஒரு கருத்து. கருத்தைக் கருதமுடியும்; காணமுடியுமா? ஏன் முடியாது? கருத்தைக் காட்சியாக உருவகப்படுத்திக்கொள்ள முடியாதா? ஒரு கட்டத்தைக் கருதும் வடிவமைப்பாளர் அதைக் கட்டிக் காட்சியாக்கித் தருவதுபோலக் கடவுளையும் காட்சியாக்கிக்கொள்ள முடியாதா? செய்யலாம்தான்.
ஆனால், ஒவ்வொரு கட்டிட வடிவமைப்பாளரும் கட்டிடங்களை வெவ்வேறு வகையாகக் கருதிப் பார்த்து, வெவ்வேறு வடிவங்களில் காட்சியாக்கித் தருவதுபோலக் கடவுளைக் காட்சியாக்கித் தருகிறவர்களும் வெவ்வேறு வகையாகக் கருதிப் பார்த்து, வெவ்வேறு வடிவங்களில்தான் காட்சியாக்கித் தருவார்கள். மனித வடிவாக, விலங்கு வடிவாக, விலங்கு முகம்கொண்ட மனித வடிவாக, ஆணாக, பெண்ணாக, நடுவாக என்று பல வகைகளில் கடவுள் காட்சிப்படுத்தப்படலாம்.
எல்லையற்ற கடவுளை, எல்லாமும் ஆன கடவுளை, ஏதோ ஒரு வடிவமாக மட்டுமே உருவகப்படுத்திக் காட்டுவது கடவுளை எல்லைப்படுத்துவது ஆகும்; எல்லையற்ற கடவுளுக்கு வடிவம் கொடுத்து எல்லைப் படுத்துவது கடவுட் குற்றம் மட்டுமன்று, கருத்துக் குற்றமும்கூட என்று கடவுளைச் சிலர் காட்சிப்படுத்தாமலேயும் விடலாம்.
கடவுளைக் காட்சிப்படுத்தாமல் விடுவதில் ஓர் இடைஞ்சல் இருக்கிறது. என்னவென்றே தெரியாத ஒன்றை எளிய மக்கள் எப்படி உள்வாங்குவார்கள்? எவ்வாறு குறித்து நிற்பார்கள்? எது உங்கள் கடவுள் என்று வேற்றுக் கூட்டத்தார் கேட்டால் என்ன பதில் சொல்வார்கள்?
உங்கள் தேவர் எங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ?
இங்கும் அங்குமாய் இரண்டு தேவரே இருப்பரோ?
அங்கும் இங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றுஅலோ?
வங்கவாரம் சொன்னபேர்கள் வாய்புழுத்து மாள்வரே!
(சித்தர் பாடல்கள், சிவவாக்கியர் பாடல் 128)
-என்று சிவவாக்கியச் சித்தரைப் போலக் கடவுளில் ஏதடா உன் கடவுள், என் கடவுள்? எல்லாம் ஒரு கடவுள்தானே என்று எதிர்க் கேள்வி கேட்கும் தெம்பிருந்தால் வம்பில்லை. ஆனால், அவ்வாறு கேள்வி கேட்கும் அறிவு நிலைகளெல்லாம் தோன்றுவதற்கு முன்பே அவரவர் பகுதியில், அவரவர்க்குத் தோன்றியபடி கடவுள் கருதப்பட்டுவிட்டதால் கடவுளுக்கு அவரவர் கொடுத்த வடிவங்களும் அவற்றுக்கான பெயர்களும் நிலைப்பட்டுவிட்டன.
திருமாலும் பன்றியாய்ச் சென்றுஉணராத் திருவடியை,
உருநாம் அறியஓர் அந்தணன்ஆய் ஆண்டுகொண்டான்;
ஒருநாமம், ஓர்உருவம் ஒன்றும்இல்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ.
(திருவாசகம், திருத்தெள்ளேணம், 1)
இறைவனின் முழு உருவம் காண முடியவில்லை என்றாலும் போகிறது, திருவடியை மட்டுமாவது கண்டு வரலாம் என்று பன்றி வடிவெடுத்துச் சென்றான் திருமால்; காண முடியவில்லை. ஆனால், தன்னைக் காணமுடியாவிட்டால் நான் மறுகிப் போவேன் என்று அன்பின் குளிர்ச்சியோடு மனித வடிவெடுத்து வந்து தன்னைக் காட்டி என்னை ஆண்டுகொண்டான் கடவுள். அவனுக்கென்ன பெயரா, உருவமா? ஒன்றும் இல்லாதவன். அவனுக்கு நாம் என்ன பெயர் வைத்தால் என்ன? என்ன உருவம் கற்பித்தால் என்ன என்று மணிவாசகர் உண்மையை உடைத்துவிடுகிறார்.
எளிமைதானே முறை
கடவுள் உருவங்கள் எல்லாமே கற்பிதங்கள். உருவம் கற்பிதமே என்றாலும் அது ஆண் பெண் என்ற பால் வேறுபாடு அற்றதாக, மனிதர் விலங்கு என்ற இன வேறுபாடு அற்றதாக, பொதுமையானதாக அமைய வேண்டும் என்று கருதியோ என்னவோ சைவம் கடவுளுக்கு லிங்க வடிவம் கற்பித்தது. கடவுள் உருவமாகக் கற்பிக்கப்பட்டது, எளிய மனிதர்களுக்காக என்றால் எளிய மனிதர்களும் கைக்கொள்ளும் வகையில் எளிமையாக இருப்பதுதானே முறை?
லிங்கம் என்பதென்ன? ஓர் அடையாளம். குறி. அவ்வளவே. இலக்கு என்றால் குறி. இலக்கு இலக்கம் ஆகிப் பின் லங்கம் (லிங்கம்) ஆயிற்று. இலங்க வடிவம் என்பது ஆண்பெண் ஒருங்கிணைவான அம்மையப்பன் வடிவம். அடித்தளம் ஆவுடையாள்; மேல்நிற்பது ஆவுடையப்பன் என்று தேவநேயப் பாவாணர் விளக்க (பாவாணர், தமிழர் மதம்), அங்கலயம் என்பதே லய அங்கம் என்றாகிப் பின் லிங்கம் என்று குறுக்கப்பட்டுவிட்டதாக அயோத்திதாசர் குறிக்கிறார்.
லிங்க வழிபாடு
உலக ரட்சகனாகிய புத்தபிரான் பரிநிர்வாணம் அடைந்து, அவர் தேகத்தைத் தகனம் செய்து, அவர் அஸ்தியைப் புதைத்து, அஸ்தியைப் புதைத்த அடையாளம் எப்போதும் தெரிவதற்காகவும் அறஆழியானைச் சிந்திப்பதற்காகவும் பீடிகை எழுப்பினார்கள். இதையே தரும பீடிகை, மணியறைப் பீடிகை, கடவுள் பீடிகை என்றெல்லாம் பூர்வ காவியங்கள் கூறுகின்றன. ஐந்து இந்திரியங்களும் அடங்கி, ஆனந்தம் உதித்துப் பூரணநிலை அடையும் நிலைக்கு லயஅங்கம், அங்க-லிங்க ஐக்கியம் என்று பெயர்.
இதன் பொருள் விளங்காமல் லிங்கத்தைக் குறி என்று காட்டி, ஆண் பெண் ஒருங்கிணைவு என்று ஆக்கி லிங்க மதம் ஏற்படுத்தி விட்டார்கள் என்கிறார் அவர். (ப.மருதநாயகம், ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்: அயோத்திதாசரின் சொல்லாடல், பக்.26-27). ஆனால், லிங்க வழிபாடு பௌத்தத்துக்கு முந்தையது என்பதற்கு ஆதாரங்கள் உண்டு.
லிங்கம் அப்பெயர் பெற்ற காரணம் எதுவானாலும், லிங்கம் என்பது சைவம் கற்பித்த முதன்மை அடையாளங்களில் ஒன்று. அதைக் குறித்துத் திருமூலர் ஏதேனும் சொல்லியிருக்கிறாரா? நிறையச் சொல்லியிருக்கிறார்:
இலிங்கம்அது ஆவது யாரும் அறியார்;
இலிங்கம்அது ஆவது எண்திசை எல்லாம்;
இலிங்கம்அது ஆவது எண்எண் கலையும்;
இலிங்கம்அது ஆக எடுத்தது உலகே.
(திருமந்திரம் 1712)
லிங்கம் எது என்று சனங்களுக்குத் தெரியவில்லை. ஏதோ ஒன்றை மட்டுமே லிங்கம் என்று நினைக்கிறார்கள். அப்படியன்று. எட்டுத் திசையும் லிங்கந்தான். அறுபத்து நான்கு கலையும் லிங்கந்தான். அதெல்லாம் எதற்கு? இந்த உலகமே லிங்கந்தான். அதோடு போயிற்றா?
மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்;
மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்;
மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்;
மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே.
(திருமந்திரம் 1726)
மானுட வடிவமே சிவனின் அடையாளக் குறியான லிங்கந்தான். மானுட வடிவமே அறிவு வெளிதான். மானுட வடிவமே அருளின் விளைவுதான். மானுட வடிவமே ஆட்டத்தின் நிகழ்களந்தான். உலகமாகிய அண்டம் லிங்கம் என்றால் உடம்பாகிய பிண்டமும் லிங்கந்தான்.
தன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடும்;
தன்மேனி தானும் சதாசிவ மாய்நிற்கும்;
தன்மேனி தற்சிவன் தற்சிவ ஆனந்தமாம்;
தன்மேனி தான்ஆகும் தற்பரம் தானே.
(திருமந்திரம் 1750)
தன் உடம்பே வழிபாட்டின் அடையாளம்; தன் உடம்பே அருளின் விளைகளம்; தன் உடம்பே சிவம்; தன் உடம்பே ஆனந்தம்; தன் உடம்பே சிவமயம்.
அன்றுநின் றான்;கிடந் தான்அவன் என்று
சென்றுநின்று எண்திசை ஏத்துவர் தேவர்கள்;
என்றும்நின்று ஏத்துவன் எம்பெருமான் தன்னை,
ஒன்றிஎன் உள்ளத்தின் உள்இருந் தானே.
(திருமந்திரம் 1762)
நின்ற திருக்கோலம், அமர்ந்த திருக்கோலம், கிடந்த திருக்கோலம் என்று எட்டுத் திசையும் தேடித் தேடிச் சென்று வணங்குவார்கள் தேவர்கள். நான் அந்த வேலையெல்லாம் செய்வதில்லை. எனக்குத் தான் என் உயிருக்குள்ளேயே இருந்து தன்னைக் காட்டுகின்றானே இறைவன்?
திருமூலர் கணக்கில் அண்டம் லிங்கம்; பிண்டம் லிங்கம்; உயிர் லிங்கம்; அறிவு லிங்கம். எது அடையாளமாகக் கொள்ள எளிதாக இருக்கிறதோ, எது உயிர் வளர்க்க வாட்டமாக இருக்கிறதோ, அது எல்லாம் லிங்கந்தான்; கடவுளின் அடையாளந்தான்..
‘கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி’ என்று புறநானூற்றின் 260-ம் பாடலில் வருகிறது. வறண்ட பாலை வழியில் செல்வானுக்குக் கள்ளிச் செடியின் நிழல்தானே கடவுள்? கள்ளி நிழலாகி வந்த அந்தக் கடவுளை வாழ்த்தாது வேறு எந்தக் கடவுளை வாழ்த்துவான்? கைகொடுத்து வந்ததெல்லாம் இறையன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம்.
(களி தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : arumugatamilan@gmail.com
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago