ஆகச் சிறந்த வெகுமானம்

By இக்வான் அமீர்

பொ

றுமை என்னும் அருங்குணம் ஓர் இறைநம்பிக்கையாளன் வாழ்வில் அடித்தளம் எனலாம். இதுவே ஒவ்வொரு நம்பிக்கையாளனின் இம்மை, மறுமை எனப்படும் ஈருலக வாழ்விலும் வெற்றியைப் பெற்றுத் தருகிறது. அதனால், இறைநம்பிக்கையாளர்கள், தனது வாழ்வை முன்னெடுத்துச் செல்ல உதவும் ஒளிவிளக்காகப் பொறுமையை எடுத்துக்கொள்ள வேண்டும்.

வாழ்வின் கணம்தோறும் எதிர்ப்படும் பிரச்சினைகளில் சில நேரம் வெல்லலாம். பல நேரம் தோல்வியுறலாம். அந்தத் தோல்விகளை வெற்றிகளாக்கப் பொறுமை என்னும் அருங்குணத்தால்தான், அவற்றை எதிர்கொள்ள வேண்டும். அதனால், எல்லாவிதமான கஷ்டங்களையும் இழப்புகளையும் சகித்துக்கொள்ள இறைநம்பிக்கையாளர் கற்றுக்கொள்ள வேண்டும். ஒருக்காலும் பொறுமையை இழந்து அவரவர் மரணக்குழியை அவரவர் கரங்களாலேயே பறித்துக்கொள்ளக் கூடாது. பொறுப்புகளை எதிர்கொண்டு அவற்றை நிறைவேற்றுவதில் தயக்கம், வாழ்வியல் யதார்த்தத்தை உள்வாங்குவதில் ஏற்படும் குழப்பம், தோல்வியைக் கண்டு மனதில் ஏற்படும் அச்சம்- இவை எக்காரணம் கொண்டும் பொறுமையை இழக்கச்செய்து ஓர் இறைநம்பிக்கையாளனை வன்முறைப் பக்கம் திசைத் திருப்பக் கூடாது.

பொறுமை எனப்படும் பெரும் பண்பு, சோதனைகள், இறை நம்பிக்கையின் ஆழமான வெளிப்பாடு என்னும் இரண்டு தூண்கள் மீது நிலைகொண்டுள்ளதாக இஸ்லாம் தெளிவாக எடுத்துரைக்கிறது.

சோதனைகள் நிரம்பிய களம்

கருணையுள்ள இறைவன் இந்த உலகியல் அமைப்பை வெறும் ஆனந்தமும் நிம்மதியும் கொண்டதாக மட்டும் படைக்கவில்லை. சோதனைகள் நிரம்பிய களமாகவே படைத்தான். ஒன்றிலிருந்து மற்றொன்று என்று ஒன்றுக்கு மற்றொன்று மாற்றமான புதுப்புதுச் சோதனைகள் மனிதனைப் பின்தொடர்கின்றன. இறைவனின் பேரருளால் சுலைமான் (சாலமன்) நபி பிரம்மாண்டமான ஒரு சாம்ராஜ்ஜியத்தைப் பெற்றபோது, “இறைவன் ஆட்சி, அதிகாரம் மூலமாகத் தன்னைச் சோதிக்க முற்பட்டுவிட்டதாக” தெளிவாக உணர்ந்தார் அவர்.

பரந்து, விரிந்த சாம்ராஜ்ஜியத்தின் சிம்மாசனத்தில் அமர்ந்தபோது, சுலைமான் நபி தெளிவாகச் சொன்னதை திருக்குர்ஆன் எடுத்துரைக்கிறது. “நான் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேனா, இல்லையா என்று என்னைச் சோதிப்பதற்காக என் மீது பொழியப்பட்ட அருட்கொடையாகும். எவன் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறானோ, அவன் தனக்கே நன்மை செய்து கொள்கின்றான். எவன் நன்றி மறக்கிறானோ அவன் தனக்கே தீங்கு தேடிக்கொள்கின்றான்”

வாழ்வியல் சோதனைகள் என்னும் முதல் தூண் நிலைகொள்ள, இறைத்தொடர்புகள் என்னும் இரண்டாவது தூண் மிகவும் இன்றியமையாதது. அதாவது இறைவனுக்கும் இறையடியானுக்கும் இடையேயுள்ள உறவை, பிணைப்பை வலுப்படுத்துவதுதான் இரண்டாவது தூண் எனப்படுகிறது.

உண்மையாளர்கள் யார்

ஒரு மனிதன் இறைவன் மேல் கொண்டுள்ள நம்பிக்கை ஆழமானதா, மேம்போக்கானதா என்பவை சோதனைகள் மூலம்தான் தெரிகின்றன. இதுகுறித்து திருக்குர்ஆன் அழகிய சொல்லோவியமாய் வரைகிறது: “நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்று கூறுவதால் மட்டும் இவர்கள் விட்டுவிடப்படுவார்கள். மேலும், அவர்கள் சோதனைக்குள்ளாக்கப்பட மாட்டார்கள் என்று மக்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்களா என்ன? உண்மையில், இவர்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அனைவரையும் நாம் சோதித்தே இருக்கிறோம். உண்மையாளர்கள் யார், பொய்யர்கள் யார் என்று இறைவன் அவசியம் கண்டறிய வேண்டியுள்ளது.”

இந்த உலக வாழ்க்கை ஒரு சோதனைக் களமாக உள்ளபோது, நல்லவர், தீயவர் என்று மனிதரின் இருவேறு தகுதிகள் பகிரங்கமாக வெளிப்படவும், நன்மைக்கு நன்மையும் தீமைக்கான தீமையும் பகிரங்கமாகப் பெறவுமே இந்த முடிவு.

உண்மையில், பொறுமை ஒரு வெகுமதி என்கிறார் நபிகளார். “பொறுமையை முறைப்படுத்திக்கொள்பவனுக்கு இறைவன் பொறுமையை வழங்குகிறான். இந்தப் பொறுமை வழங்கப் பெற்றவரைவிட ஆகச் சிறந்த வெகுமானம் பெற்றவர் வேறு யாருமில்லை!”

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

6 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்