தா
வீதின் மறைவுக்குப் பிறகு முடிசூட்டிக்கொண்ட சாலமோனிடம் மிகப் பெரிய குதிரைப் படையும் மிகப் பெரிய ரதப் படையும் இருந்தன. படை பலத்தில் மட்டும் சாலமோன் சிறந்து விளங்கவில்லை. கடவுள் அருளிய அறிவிலும் பெரும் பலசாலியாக அவர் விளங்கினார். பூமிப்பந்தின் நீர்ப்பரப்பைப்போல் பரந்த இதயத்தை கடவுள் கொடுத்தார். கிழக்கத்திய மக்களையும் எகிப்தியர்களையும்விட சாலமோன் ஞானத்தில் சிறந்து விளங்கினார்.
சிறந்த எழுத்தாளராகவும் கவிஞராகவும் விளங்கினார். ஞானத்தில் அவருக்குச் சமமாக யாருமே இருக்கவில்லை. எஸ்ராகியனான ஏத்தான், மாகோலின் மகன்களான ஏமான், கல்கோல், தர்தா ஆகியோரைவிட அவர் ஞானமுள்ளவராக இருந்தார். சுற்றியிருந்த எல்லா நாடுகளிலும் அவருடைய பெயரும் புகழும் பரவின. அவர் சொன்ன நீதிமொழிகளின் எண்ணிக்கை மூன்றாயிரம். அவருடைய பாடல்களின் எண்ணிக்கை 1,005.
பேசாத பொருள் இல்லை
அவர் மரங்களைப் பற்றிப் பேசினார். அதாவது, லீபனோனில் இருக்கும் தேவதாரு மரத்திலிருந்து சுவரில் பற்றி வளரும் ஒட்டுண்ணிச் செடிகள், கொடிகள்வரை எல்லாவற்றையும் பற்றிப் பேசினார். விலங்குகள், பறவைகள், ஊர்வன, மண்ணுக்குள் வாழ்வன, மீன்கள் என எல்லா ஜீவராசிகளையும் பற்றிப் பேசினார். அவர் பேசாத பொருளில்லை. எல்லாவற்றையும்விட இந்தப் படைப்புகளின் ஆசானாகி கடவுளைக் குறித்து எளிமையாக எடுத்துரைத்தார்.
கடவுளைப் புகழ்ந்து புகழ்பெற்ற கவிதைகள் எழுதினார். அவற்றுக்கு இசையமைத்து அவற்றை சங்கீதப் பாடல்களாகவும் மாற்றினார். சாலமோனின் ஞானமான சொற்களைக் கேட்பதற்காக எல்லா தேசங்களிலும் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக சாலமோனின் தர்பார் மண்டபத்தில் குவிந்தார்கள். அதோடு, உலகெங்கிலும் இருந்து பல அரசர்கள் அவருடைய ஞானத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைப் பார்க்க வந்தார்கள்.
சாலமோனின் தேசம்
இஸ்ரவேலின் யூப்ரடீஸ் ஆறு தொடங்கி, பெலிஸ்தியர்களின் தேசத்தைக் கடந்து எகிப்தின் எல்லைவரையிலும் இருந்த எல்லா நாடுகளையும் சாலமோன் ஆட்சி செய்தார். அது யூதேயா, இஸ்ரவேல் உள்ளிட்ட பெரும் நிலப்பரப்பாக இருந்தது. அந்தத் தேசங்களில் கடற்கரை மணலைப் போல ஏராளமான மக்கள் குடியிருந்தனர்.
வயிறுமுட்டச் சாப்பிட்டும் குடித்தும் அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கள். சாலமோனின் வாழ்நாள் முழுவதும் அவருக்குக் கப்பம் கட்டி சேவை செய்தார்கள். எகிப்தியர்கள் ஏக இறைவனாகிய பரலோகத் தந்தை மீது நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல. அவர்கள் பல்வேறு கற்பனைத் தெய்வங்களை வழிபட்டு வந்தனர். ஆனால், எகிப்தின் அரசனாகிய பாரோ மன்னனின் மகளை சாலமோன் மணந்துகொண்டார்.
முதல் ஆலயம்
சாலமோன் தன்னுடைய தந்தை தாவீது சொல்லிக்கொடுத்தபடியே கடவுளாகிய யகோவா அருளிய சட்டங்களைக் கடைப்பிடித்து, கடவுள்மீது மாறா அன்பு காட்டிவந்தார். கடவுளுக்கு ஓர் ஆலயத்தைக் கட்டுவதற்காக அவரிடமிருந்து பெற்றிருந்த திட்டத்தை தாவீது, தான் இறப்பதற்கு முன் சாலமோனிடம் கொடுத்திருந்தார். அரியணை ஏறிய பிறகு தனது ஆட்சியின் நான்காவது ஆண்டில், சாலமோன் அந்த ஆலயத்தைக் கட்டத் தொடங்கினார். 50 ஆயிரம் எண்ணிக்கையில் கட்டிட வல்லுநர்களும் சிற்பிகளும் வேலை செய்தார்கள். தனது கருவூலத்தில் இருந்த அனைத்துப் பணத்தையும் செலவழித்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஆலயத்தைக் கட்டிமுடித்தார். கடவுளுக்கான முதல் பேராலயம் எருசலேமில் எழுந்து நின்றது.
ஆசாரிப்புக் கூடாரத்தில் இருந்ததைப் போன்றே இந்த ஆலயத்திலும் இரண்டு முக்கிய அறைகள் இருந்தன. அவற்றில் ஆலயத்தின் நடுவில் உள்ளறையாக இருந்ததில் உடன்படிக்கைப் பெட்டியை வைக்க சாலமோன் உத்தரவிட்டார். ஆசாரிப்புக் கூடாரத்திலிருந்த மற்ற புனிதப் பொருட்கள் அனைத்தையும் மற்றொரு அறையில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
அவ்வாறு செய்ததும் ஆலயத்தைக் கடவுளுக்கு சமர்ப்பணம் செய்ய ஒரு மாபெரும் விழாவை முன்னெடுத்தார். அந்த விழாவுக்கு உலகைப் படைத்துக் காக்கும் கடவுளாகிய யகோவா மீது நம்பிக்கை வைத்து அவர் தந்த கட்டளைகளுக்குப் பணிந்து நடக்கிற லட்சக்கணக்கான மக்கள் தேவாலயத்தின் முன் குடும்பம் குடும்பமாகக் குவிந்தார்கள்.
அனைவருக்கும் கூடாரமும் உணவும் நீரும் வழங்கிய சாலமோன், ஆலயத்துக்கு முன் முழங்கால் இட்டு கைகள் இரண்டையும் வானை நோக்கி உயர்த்தி ஜெபித்தார். “பரலோகத் தந்தையே, நீர் தங்குவதற்கு வானுலகம் முழுவதும்கூடப் போதாதே, அப்படியானால் நீர் தங்குவதற்கு இந்த ஆலயம் எப்படிப் போதுமானதாக இருக்கும். என்றாலும், என் தேவனே, உம்முடைய மக்கள் இந்த இடத்தை நோக்கி ஜெபிக்கும்போது தயவுசெய்து அவர்களுக்குக் காதுகொடுத்து உன் கருணையை அருளும்” என்று கடவுளிடம் உருக்கமாகக் கேட்டார்.
வானிலிருந்து வந்த நெருப்பு
சாலமோனின் ஜெபத்தைக் கேட்டு மக்கள் ஆச்சரிப்பட்டார்கள். கடவுளிடம் எவ்வாறு பணிவு காட்ட வேண்டும் என்பதைக் குறித்துக் கற்றுக்கொண்டார்கள். சாலமோன் ஜெபம் செய்து முடித்ததும் வானத்திலிருந்து நெருப்பு வருகிறது. ஆலயத்தின் பலிபீடத்தில் வைக்கப்பட்டிருந்த எல்லாப் பலிகளையும் எரித்துப்போடுகிறது. வானிலிருந்து வந்த பிரகாசமான ஒளி ஆலயத்தை நிரப்பியது. கடலைப் போல் திரண்டிருந்த மக்கள் ஆராவாரத்துடன் கடவுள் காட்டிய அடையாளம் முன்பாக மண்டியிட்டு ஆலயத்தை வணங்கினார்கள். கடவுள் நம் வார்த்தைகளுக்குக் காதுகொடுப்பார் என்பதை அவ்வளவு பேரும் புரிந்துகொண்டார்கள்.
சாலமோன் செய்த தவறு
ஞானத்திலும் பக்தியிலும் சிறந்து விளங்கிய சாலமோன் வெகுகாலம் ஆட்சி செய்தார். அவருடைய குடிமக்களும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். ஆனால், யகோவாவைக் கடவுளாக ஏற்றுக்கொள்ளாத பல அந்நிய நாட்டுப் பெண்களை சாலமோன் மணந்துகொண்டார். இப்படி மணந்துகொண்ட அவருடைய ராணிகளில் ஒருத்தி சிலை ஒன்றை வழிபட்டார். பின்னர் மற்ற ராணிகளும் அவள் வழியில் சிலை வழிபாட்டை ஏற்கிறார்கள். இதைத் தடுக்காத சாலமோனும் ஒரு கட்டத்தில் தன் ராணிகளின் வற்புறுத்தலுக்கு ஆளாகி சிலைகளை வணங்கத் தொடங்கிவிடுகிறார்.
தனது மக்களை அன்பாக நடத்திவந்த சாலமோன் அதிகாரத்தைக் காட்டத் தொடங்கினார். மக்களும் அவரை வெறுத்தார்கள். சாலமோன் மீது கோபம் கொண்ட கடவுள், அவருடன் பேசினார். “சாலமோனே உன்னிடம் பேசும் கடவுளாக நான் இருக்கிறேன் என்பதை மறந்துபோனாய். அதற்குத் தண்டனையாக இந்த ராஜ்யத்தை உன்னிடமிருந்து எடுத்து வேறொருவனுக்குக் கொடுக்கப் போகிறேன். இதை உன் வாழ்நாட்களில் செய்ய மாட்டேன், உன் மகனின் ஆட்சிக் காலத்தில் செய்வேன்.” என்றார்.
(பைபிள் கதைகள் தொடரும்)
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
19 mins ago
ஆன்மிகம்
22 hours ago
ஆன்மிகம்
22 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago