ஜகார்த்தா இந்தோனேசியாவின் பொருளாதாரத் தலைநகரம் என்றால், மத்திய ஜாவா மாகாணத்தில் உள்ள ‘யோக்யா’என்றழைக்கப்படும் ‘ஜோக்ஜகார்த்தா’ இந்தோனேசியாவின் கலாசாரத் தலைநகரம்!
பவுத்தமும், இந்து மதமும் தழைத்தோங்கிய புனிதத் தலமாக ஜோக்ஜகார்த்தா விளங்குகிறது. அதற்கான வரலாற்றுச் சான்றாகப் புகழ்மிக்க ‘போரோபுதூர்’ புத்த கோயிலும், ‘பிரம்பானன்’(‘பரப்பிரம்மன்’என்ற சொல்லில் இருந்து மருவியது) சிவன் கோயிலும் விளங்குகின்றன. இவை இரண்டுமே யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தலங்களாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மிகப் பெரிய கோயில்
கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் புத்தக் கோயிலைவிடவும் முன்னூறு ஆண்டுகள் பழமையான போரோபுதூர், மகாயான பவுத்த நினைவுச் சின்னம். இது ஜோக்ஜகார்த்தாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது.
சுமார் இருபத்து ஏழாயிரம் சதுர அடி பரப்பளவும், நூற்றுப் பதினைந்து அடி உயரமும் கொண்ட போரோபுதூர், இந்தோனேசியாவின் மிகப் பெரிய கோயில் என்ற சிறப்புக்குரியது. எரிமலைக் கற்களைக் கொண்டு இக்கோயிலை முழுவதுமாகக் கட்டி முடிக்க எழுபத்து ஐந்து ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. இளம் பச்சை நிற நெற்கதிர்களுக்கும், உயர்ந்த பனைமரங்களுக்கும் இடையே அமைதியான சூழலில் அமைந்திருக்கும் இக்கோயில், 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
மூடுபனியால் சூழப்பட்டும், பசுமையான மரங்களால் அலங்கரிக்கப்பட்டும் காட்சியளிக்கும் போரோபுதூரில், சூரிய உதயத்தைக் காண சீனா, திபெத், கம்போடியா, இந்தியா என்று பல்வேறு தெற்காசிய நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். காவி உடை அணிந்த புத்த பிட்சுகளுடன் சேர்ந்தமர்ந்து பிரார்த்தனை செய்ய பார்வையாளர்களுக்கும் இங்கு சிறப்பு அனுமதி உண்டு.
பதினான்காம் நூற்றாண்டு தொட்டு, எரிமலை வெடிப்புகளாலும், நிலநடுக்கத்தாலும், பயங்கரவாதத் தாக்குதலாலும் தொடர் பாதிப்புகளைச் சந்தித்திருக்கிறது போரோபுதூர். இப்படியான இயற்கை மற்றும் மனிதப் பேரிடர்களால் சேதமடைந்த போரோபுதூர், யுனெஸ்கோ மீட்புக் குழுவினரால் புனரமைக்கப்பட்டு இன்று கம்பீர மிடுக்குடன் காட்சியளிக்கிறது.
கோயில் கட்டமைப்பு
சைலேந்திர ராஜ்ஜியத்தில், ஜாவனீய-பவுத்தக் கட்டிடக் கலை அம்சங்களுடன் பிரமிட் வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது போரோபுதூர் கோயில். ஒன்றின் மேல் ஒன்றாக ஆறு சதுர வடிவிலான தளங்களும், அவற்றின் மேல் மூன்று வட்ட வடிவ மேடைகளும், நடுவில் ஒரு முக்கியக் குவிமாடமுமாகக் காட்சியளிக்கிறது இக்கோயில்.
ஒவ்வொரு தளத்திலும் எழுபத்து இரண்டு விகாரங்கள் உள்ளன. இவ்விகாரங்கள் ஒவ்வொன்றிலும் அமைந்துள்ள சிறு துவாரங்கள் வழியாகப் பார்த்தால் ஓர் அழகிய புத்த சிலை தெரியும். ஏழு தளங்களையும் சேர்த்து, ஐநூற்று நான்கு புத்த சிலைகள்!
பவுத்த அண்டவியலுக்கு ஏற்ப இந்த ஏழு தளங்களும், காம தாது, ரூப தாது, அரூப தாது என்று மேலும் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. மனிதச் சிந்தனைகளையும், மனநிலைகளையும் வகுத்தால், இம்மூன்று தளங்களாகப் பிரிக்க முடியும் என்பதே இந்தக் கட்டமைப்பின் அடிப்படைத் தத்துவம்.
காம தாது
அனைத்துத் தளங்களுக்கும் அடித்தளமாக அமைந்திருக்கிறது காம தாது. இது மனிதர்களின் அடிப்படை ஆசையாகிய காமத்தைக் குறிப்பதோடு, அவர்களின் ஆழ்மனப் போராட்டங்களையும் சித்திரிக்கிறது. மனித மனதில் தோன்றும் மலிவான சிந்தனைகளுக்கும், பவுத்த சித்தாந்தங்களுக்கும் இடையேயான தொடர் போராட்டங்களின் குறியீடான காமதாது; அறியாமை இருளால் சூழப்பட்ட பாதாள லோகத்தைக் குறிக்கிறது.
ரூப தாது
இது காம தாதுவுக்கு மேல் தளம். ஒரு மனிதன் தன்னைக் காம இச்சைகளிலிருந்து விடுவித்துக்கொண்டாலும் உருவத் தோற்றங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அதன் அடிப்படையில் சிந்திப்பதை உணர்த்துகிறது ரூப தாது. புத்தர் தன் இளம்பருவத்தில் இருந்த மனநிலையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக ரூப தாது பார்க்கப்படுகிறது. இது பாதாள லோகத்துக்கும், தேவலோகத்துக்கும் இடையிலான ஒரு நிலையைக் குறிக்கிறது.
அரூப தாது
இது உருவமற்ற உயர்ந்த சிந்தனை நிலையை உணர்த்துகிறது. உண்மையான மகிழ்ச்சிக்கு வித்திடும் இந்த நிலை, புத்தர் மோட்சம் அடைந்த பிறகான தெய்விக நிலையாகப் பார்க்கப்படுகிறது. காம உணர்ச்சிகளுக்கும், தோற்ற முக்கியத்துவங்களுக்கும் அப்பாற்பட்ட இந்த உருவமற்ற நிலை தேவலோகத்துக்கு ஒப்பானதாகும்.
அதிபுத்தா
தொடக்கமும், முடிவும் இல்லாதவர் புத்தர் என்பதே இந்த அதிபுத்தா தத்துவம். இந்தோனேசியா மற்றும் திபெத்திய மக்களுக்கு அதிபுத்தா சித்தாந்தத்தில் நம்பிக்கை உண்டு. காமதாது, ரூபதாது, அரூபதாது ஆகிய தளங்களுக்கு மேல் அமைந்துள்ள குவிமாடத்தில் புத்தரின் சிலை முடிவுறாது இருப்பதால், அது சுயம்புவாகத் தோன்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஆசைகள், விருப்பு வெறுப்புகள், வடிவத் தோற்றங்கள் ஆகியவற்றால் பிணைக்கப்படாத அமைதியான, ஞான நிலையை எட்ட வேண்டும் என்பதையே இந்தக் குவிமாடம் உணர்த்துகிறது.
இந்தியா – இந்தோனேசியா உறவு
ஜாவனீயப் பெயர்களில் தொடங்கி, கட்டிடக் கலை அம்சங்கள்வரை, இந்தியாவுடன் பெரிதும் ஒத்துப்போவதைப் பார்க்க முடிகிறது. மகாபலிபுரத்தில் பல்லவ ஆட்சி நடந்த வேளையில் போரோபுதூரில் சைலேந்திர மன்னரின் ஆட்சி நிறுவப்பட்டிருக்கிறது. கடல் கடந்த வர்த்தகம் ஏற்படுத்திய தொடர்பும், அதனைத் தொடர்ந்து குடியேற்றங்களும், இந்தியாவுக்கும், இந்தோனேசியாவுக்கும் இடையேயான கலாசாரப் பரிமாற்றங்களுக்கு வித்திட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
போரோபுதூர் கோயில் சுவர்களில் உள்ள எண்ணற்ற கல்வெட்டுகளில் சம்ஸ்கிருத மொழியில் வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. குறிப்பாகக் கோயிலின் மேல் தளத்தில் உள்ள புத்தரின் உருவமும், அவர் விரல்கள் சுட்டிக்காட்டும் முத்திரைகளும் இந்திய யோக சாஸ்திரக் கூறுகளின்படி அமைந்துள்ளன.
இத்தனை சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள போரோபுதூர், மேல் கோணத்திலிருந்து பார்க்க, புத்தர் வீற்றிருக்கும் மலர்ந்த தாமரை மலராகக் காட்சியளிக்கிறது. புத்த மதத்தில் தாமரை மலர் அதிர்ஷ்டம், தூய்மை மற்றும் நம்பிக்கைக்கான அடையாளச் சின்னமாகப் பார்க்கப்படுவதால், இந்தோனேசியா மட்டுமல்லாது, தெற்காசிய நாடுகளின் முக்கிய வழிபாட்டுத் தலமாக போரோபுதூர் விளங்குகிறது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago