முதல் அற்புதம்... முதல் கோபம்...

By அனிதா அசிசி

தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று ‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது நதிக்கரையில் குடியேறியதால் எப்படிப் பயிர்த்தொழில் செழித்து, பண்பாடு மலர்ந்ததோ அப்படித்தான் கோயில் இருக்கும் ஊர்களில் தெய்வ பயமும், அதன்வழியான பக்தியும், சகமனித அன்பும் வழிந்தோடியது. சுமார் 2000-ம்

ஆண்டுகளுக்கு முன்பு ஏக இறைவனாம் யகோவா தகப்பனின் ஒரே மகனாகப் பூமியில் அவதரித்த இயேசு, மனித குலத்தின் மீது அளப்பரிய அன்பு கொண்டவராக இருந்தார்.

ஒரு கன்னத்தில் யாரேனும் அறைந்தால் மறுகன்னத்தையும் திருப்பிக்காட்டு என்று சொன்னவருக்குக் கோபம் வந்திருக்குமா?! இயேசு பலமுறை கோபப்பட்டிருக்கிறார். ஆனால் ஒருமுறைகூடத் தன்னலத்துக்காக அவர் கோபப்படவில்லை. அவர் எந்தச் சூழ்நிலையில் கோபப்பட்டார் என்பதைத் தெரிந்துகொள்ளும் முன்பு, அவர் செய்த முதல் அற்புதத்தையும் பார்க்கலாம். ஏனெனில் அவரது முதல் அற்புதம் முடிந்த சில நாட்களில் அவரது முதல் கோபமும் வெளிப்பட்டது. இதைக் கோபம் என்பதைவிட, கோயிலை விற்பனை அங்காடியாக மாற்றிய வர்கள் மீதான அறச் சீற்றம் என்றே சொல்ல வேண்டும்.

முப்பதாவது வயதில் யோவான் தீர்க்கதரிசியிடம் யோர்தான் நதிக்கரையில் திருமுழுக்குப் பெற்றார் இயேசு. அப்போது சீமோன், அந்திரேயா, பிலிப்பு, நாத்தான்வேல் ஆகிய நான்கு பேர் இயேசுவை ‘மெசியா’ எனக் கண்டுகொண்டு அவரைப் பின்தொடர்ந்து சென்று அவரிடம் சீடர்களானார்கள். அதன் பிறகு மக்களுக்கு அவர் போதிக்க ஆரம்பித்தார். போதனையைத் தொடங்கும்முன் தனது முதல் அற்புதத்தைத் தனது தாய் மரியாளின் வேண்டுகோளுக்கு இணங்க நிகழ்த்திக் காட்டினார்.

கானா ஊர்த் திருமணம்

கலிலேயாவில் உள்ள கானா ஊரில் ஒரு திருமண விருந்து நடைபெற்றது. இயேசுவின் தாய் அங்கு வந்திருந்தார். இயேசுவும் அவரது சீடர்களும்கூட அந்தத் திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். யூதத் திருமண விருந்தில் முதல் தரமான திராட்சை ரசம் பரிமாறப்படுவது விருந்தோம்பலின் முக்கிய அம்சமாக இருக்கும். விருந்தினர் வருகை எதிர்பார்த்ததைவிட அதிகரித்துவிட்டதால், திராட்சை ரசம் தீர்ந்துபோனது. இயேசுவின் தாய் அவரைப் பார்த்து, “பரிமாறுவதற்கு அவர்களிடம் திராட்சை ரசம் இல்லை”என்றார்.

அதற்கு இயேசு, “தாயே, நீங்கள் எதிர்பார்ப்பதைப் புரிந்துகொண்டேன். ஆனால் என் வேளை இன்னும் வரவில்லையே” என்று பதில் அளித்தார். பரலோகத் தந்தையின் ஏற்பாட்டின்படி இயேசு தன்னை வெளிப்படுத்தும் காலம் அப்போது கனிந்திருக்கவில்லை என்பதையே இயேசு அப்படிக் குறிப்பிட்டார். ஆனால் ஒரு மகனாகத் தன் தாயின் சொற்களை எப்படித் தட்டுவது?

தூய்மைச் சடங்கு செய்யத் தேவைப்படும் ஆறு தண்ணீர் ஜாடிகள் அந்தத் திருமண வீட்டின் முற்றத்தில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் இருந்த தண்ணீரும்கூடத் தீர்ந்து போயிருந்தது. அந்த வீட்டின் பணியாளர்களை அழைத்த இயேசு, “இந்த ஜாடிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்றார். அவர்களும் ஜாடிகளின் விளிம்புவரை நிரப்பினார்கள். பின்பு அவர்களிடம், “இப்போது இவற்றிலிருந்து கொஞ்சம் எடுத்துப்போய்த் திருமண விருந்தின் மேற்பார்வையாளரிடம் கொடுங்கள்”( யோவான் 2:8) என்றார். அவர்களும் அப்படியே செய்தார்கள். திராட்சை ரசமாக மாற்றப்பட்டிருந்த தண்ணீரை மேற்பார்வையாளர் ருசி பார்த்தார்;

அந்தத் திராட்சை ரசம் எப்படி வந்ததென்று அதை எடுத்துவந்த பணியாளருக்குத் தெரியும். ஆனால் மேற்பார்வையாளருக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆகவே, அந்த மேற்பார்வையாளர் மணமகனை அழைத்து, “எல்லோரும் தரமான திராட்சை ரசத்தை முதலில் பரிமாறிவிட்டு, விருந்தினர் மனம்போல் குடித்த பின் தரம் குறைந்ததைக் கடைசியாகப் பரிமாறுவார்கள். நீங்களோ தரமான திராட்சை ரசத்தைக் கடைசிவரை வைத்திருக்கிறீர்களே?” (யோவான் 2:10) என்றார். கானா ஊரில் இயேசு இந்த முதல் அற்புதத்தைப் புரிந்து, தனது வல்லமையை வெளிப்படுத்தினார். இதைக் கண்ட அவருடைய சீடர்கள் அவர் மீது மேலும் நம்பிக்கை வைத்தார்கள்.

சாட்டையைச் சுழற்றிய இயேசு

இயேசு செய்த முதல் அற்புதம் பற்றி கலிலேயா முழுவதும் செய்தி பரவ ஆரம்பித்தது. யூதர்களின் முக்கியப் பண்டிகையான பாஸ்கா சீக்கிரத்தில் வரவிருந்ததால், இயேசு எருசலேமுக்குப் போனார். அங்கு ஏக இறைவனுக்காக 46 ஆண்டுகள் செலவழித்து யூதர்கள் கட்டியிருந்த பிரம்மாண்டமான பேராலயம் இருந்தது. அந்த ஆலய வளாகத்துக்குள் நுழைந்தபோது அங்கே கண்ட காட்சியைப் பார்த்துக் கொதித்துப் போனார் இயேசு.

யூத வியாபாரிகள் அந்த ஆலயத்தை ஒரு பேரங்காடிபோல் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு கணமும் தாமதிக்காமல் கயிறுகளைக் கொண்டு உடனடியாக ஒரு சாட்டையைத் தன் கைப்படப் பின்னினார். ஆலயத்தில் ஆடு, மாடு, புறா விற்பவர்களையும், மேசைகளைப் போட்டு நாணய மாற்றம் செய்துகொண்டிருந்த தரகர்களையும் ஆலயத்திலிருந்து சாட்டையால் அடித்து விரட்டினார். “இவற்றை இங்கிருந்து எடுத்துக்கொண்டு போங்கள்! என் தகப்பனுடைய வீட்டை இனியும் சந்தைக்கடை ஆக்காதீர்கள்!”(யோவான் 2: 16) என்றார்.

இயேசுவின் கோபத்தைக் கண்ட யூதர்கள் அவரை நெருங்கி, “இப்படியெல்லாம் செய்ய உமக்குக் கடவுள் அதிகாரம் கொடுத்திருக்கிறார் என்றால், அதை எங்களுக்கு நிரூபிக்க முடியுமா?” என்று கேட்டு இயேசுவை மடக்கினார்கள். அதற்கு இயேசு, “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாட்களில் திரும்பவும் எழுப்புவேன்” (யோவான்2:19) என்றார்.

இயேசுவின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, நம்மிடம் வசமாகச் சிக்கினார் என்று நினைத்த யூதர்கள், “இந்த ஆலயத்தைக் கட்டி முடிக்க நாற்பத்தாறு ஆண்டுகள் பிடித்தன, நீரோ இதை மூன்று நாட்களில் எழுப்பிவிடுவேன் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறதே?” என்றார்கள். ஆனால் இயேசு தனது உடலாகிய ஆலயத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். மனித உடலும் இறைவன் குடியிருக்கும் ஆலயம் என்பதை உணர்த்தினார். தனது உடலைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு பதில் அளித்தார்.

இயேசு கொல்லப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தபோது, உடைத்தெறிந்த ஆலயத்தை மூன்று நாட்களில் திரும்பக் கட்டுவேன்’என்று அவர் சொன்னதைச் சீடர்கள் நினைத்துப் பார்த்து, இயேசுவின் வார்த்தைகள் அவரது மறைவுக்குப் பின் தெளிவாய் விளங்கியதால் தேவ சாட்சிகளாய் மாறினார்கள்.

அன்று ஆலயத்தை அங்காடி ஆக்கிய யூதர்களின் ஆலயம் படையெடுப்புகளால் அழிந்தது. இன்று அவர்களுக்கு மிச்சருப்பது அந்த ஆலயத்தின் சுவர் மட்டுமே. யூதர்கள் மட்டுமல்ல, நாமும் இன்று கடவுள் குடியிருக்க விரும்பும் நம் உடல் வீட்டை, குடி, புகை, கட்டுப்பாடற்ற உணவு, பொய், தவறான சிந்தனை என்று எத்தனை அசுத்தப்படுத்திவருகிறோம் என்பதைப் பற்றி இனியாவது சிந்திப்போமா?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE