சவுல் அரசன் நிலைகுலைந்துபோனார். ‘என் அங்கியின் ஓரத்தை வெட்டி எடுக்கிற அளவுக்குத் தாவீதின் கைகளில் நான் தனியாகச் சிக்கிக்கொண்டேன். அப்படியும் அவன் என்னைக் கொல்லாமல் விட்டுவிட்டானே..! அவனல்லவா கடவுளின் அருள் பெற்றவன்’ என்று நினைத்துக் கதறி அழுதார். பின் தாவீதைப் பார்த்து “நீயே நல்லவன். எதிரியாக இருந்தும் என்னை நீ உயிருடன் விட்டுவிட்டாய். நீ நிச்சயம் அரசனாக ஆவாய். இஸ்ரவேல் ராஜ்ஜியத்தைக் காலங்காலமாகக் கட்டிக்காப்பாய்” என்று வாழ்த்திவிட்டு சவுல் அரண்மனைக்குத் திரும்பினார்.
ஆனால், தாவீதை அரண்மனைக்கு வந்துவிடும்படி சவுல் அழைக்கவில்லை. தற்காலிகமாகத் தாவீதிடமிருந்து தப்பிப் பிழைக்கவே திருந்திவிட்ட அரசனைப் போல் சவுல் நாடகமாடினார் என்ற உண்மையை, தாவீதுக்கு கடவுள் உணர்த்தினார். இதனால் தாவீது எச்சரிக்கையாகவே நடந்துகொண்டார். தாவீதும் அவருடைய வீரர்களும் தாங்கள் தங்கியிருந்த பாதுகாப்பான இடங்களுக்கே மீண்டும் திரும்பிப்போய்த் தங்கினார்கள். தாவீதின் மனைவியும் தன் மகளுமாகிய மீகாளை காலீமைச் சேர்ந்த பல்த்தி என்பவனுக்கு சவுல் அரசன் மறுமணம் செய்துகொடுத்துவிட்டார்.
மீண்டும் வனாந்தர வாழ்க்கை
சவுல், தாவீது ஆகிய இருவரையும் கடவுளின் ஆணைப்படி அபிஷேகம் செய்த தலைமைக் குருவாகிய சாமுவேல் இறந்துபோனார். இஸ்ரவேலர்கள் எல்லாரும் ஒன்றுகூடி அவருக்காகத் துக்கம் அனுசரித்தார்கள். அதில் தாவீதும் கலந்துகொண்டார். சாமுவேலுக்கு அஞ்சலி செலுத்தியபின், தாவீது பாரான் வனாந்தரப் பகுதிக்குப் போய் தன் படையணியுடன் தங்கினார். அது மாகோன் என்ற யூதா நகரத்தின் அருகில் இருந்தது. அங்கே செழுமையான மேய்ச்சல் நிலங்களும் வயல்களும் இருந்தன. அந்த நகரத்தில் ஒரு பெரிய பணக்காரன் இருந்தான். அவன் பெயர் நாபால். அவனுடைய மனைவி பெயர் அபிகாயில். நாபால் வேளாண்மையும் கால்நடைத் தொழிலும் செய்துவந்தான்.
அவனுக்கு 3,000 செம்மறியாடுகளும் 1,000 வெள்ளாடுகளும் இருந்தன. அபிகாயில் அதிபுத்திசாலி. மிகவும் அழகானவள். நாபாலோ ஒரு முரடன், அடுத்தவர்களை எடுத்தெறிந்து பேசுபவன்; அவமானப்படுத்துபவன். அது அறுவடைக் காலம். செம்மறி ஆடுகளின் உடலில் முடிகள் ‘புசுபுசு’வென்று வளர்ந்துவிட்டன. எனவே, கம்பளி ஆடைகளுக்காக அவற்றின் முடிகளைத் தன் பணியாட்களை வைத்துக் கத்தரித்துக்கொண்டிருந்தான் நாபால். அவற்றுக்கு நல்ல விலை கிடைக்கும். அறுவடைக் காலத்திலும் செம்மறி ஆடுகளுக்கு முடி கத்தரிக்கும்போதும் செல்வம் கொழிக்கும். இந்தச் சமயத்தில் யார் வந்து உதவி கேட்டாலும் மறுக்காமல் செய்வது இஸ்ரவேலர்களின் வழக்கமாக இருந்தது.
நாபால் தனது ஆடுகளுக்கு முடியைக் கத்தரித்துக் கொண்டிருப்பதைக் கேள்விப்பட்ட தாவீது, தன் வீரர்களில் பத்துப் பேரை அழைத்து, “நாபாலிடம் சென்று நான் சொல்கிறபடி அவரிடம் எடுத்துக் கூறி உதவிபெற்று வருங்கள்” என்று அனுப்பினார். அவர்கள் நாபாலிடம் சென்று, “ நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சந்தோஷமாக நீடூழி வாழ வேண்டும்! வனாந்தரத்தில் உங்களுடைய மேய்ப்பர்கள் எங்களோடு இருந்தபோது, நாங்கள் அவர்களுக்கு எந்தக் கெடுதலும் செய்யவில்லை. உங்கள் ஆடுகளை விலங்குகளிடமிருந்தும் திருடர்களிடமிருந்தும் பாதுகாத்திருக்கிறோம். இதை உங்கள் ஆட்களிடமே கேட்டுப் பாருங்கள், அவர்கள் சொல்வார்கள். நீங்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்கும் இந்தத் தருணத்தில் என்னுடைய ஆட்களை உங்களிடம் அனுப்பியிருக்கிறேன். அதனால் கொஞ்சம் கருணை காட்டுங்கள். உங்கள் ஊழியர்களாகிய இவர்களுக்கும் உங்கள் மகன் தாவீதுக்கும் உங்களால் முடிந்த உணவையும் பொருளையும் தயவுசெய்து கொடுத்தனுப்புங்கள்” என்று எங்கள் தலைவராகிய தாவீது உங்களை வாழ்த்தி உதவிபெற்று வரும்படி எங்களை அனுப்பினார்” என்றார்கள்.
தடுத்து நிறுத்திய அபிகாயில்
ஆனால், நாபாலோ தாவீதின் ஆட்களை அவமானப்படுத்தி, கடுஞ்சொற்களால் திட்டி அனுப்பிவைத்தார். ஏமாற்றத்துடன் திரும்பிய தாவீதின் ஆட்கள் தாங்கள் அவமானப்படுத்தப்பட்டதை எடுத்துக் கூறினார்கள். அதைக் கேட்டுக் கொதித்துப் போனார் தாவீது. 600 பேர் கொண்ட தனது அணியில் 400 பேரை ஆயுதங்களுடன் அழைத்துக்கொண்டு நாபாலுக்குப் பாடம் புகட்டி, அவனை அழித்தொழிக்கக் கிளம்பினார். இதற்கிடையில், நாபாலின் வேலைக்காரர்களில் ஒருவன், அவருடைய மனைவி அபிகாயிலிடம் போய், நடந்ததை விரிவாக எடுத்துக்கூறி, வரவிருக்கும் ஆபத்தை எடுத்துக்காட்டியதும் பதறிப்போனாள். தாவீது கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பதும், இஸ்ரவேல் மக்கள் அனைவரையும் பல போர்களிலிருந்து கடவுளின் அருளால் காத்து வருபவர் என்பதும் அபிகாயிலுக்கு நன்கு தெரிந்திருந்தது. ஆபத்து நடக்கும் முன் அதைத் தடுத்து நிறுத்த விரும்பிய அபிகாயில் 200 ரொட்டிகளையும் 2 பெரிய ஜாடி நிறைய திராட்சை ரசத்தையும் ஐந்து ஆடுகளின் இறைச்சியையும் ஐந்து படி வறுத்த தானியங்களையும் 100 திராட்சை அடைகளையும் 200 அத்திப்பழ அடைகளையும் அவசர அவசரமாக எடுத்துக் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு தாவீது தங்கியிருந்த வனாந்தரப் பகுதியை நோக்கித் தனது பணியாட்கள் சிலருடன் விரைந்தாள்.
சில மணி நேரப் பயணத்துக்குப் பின் தாவீதையும் அவரது படையணியையும் எதிர்கொண்டு சந்தித்தாள். தாவீதைப் பார்த்தவுடன் கழுதையைவிட்டு அவசர அவசரமாக இறங்கிய அபிகாயில், அவருக்கு முன்னால் போய் மண்டிபோட்டு, தரைவரைக்கும் குனிந்து வணங்கினாள். பின்பு அவரைப் பார்த்து, “உங்களிடம் பேச இந்த அடிமைப் பெண்ணை அனுமதியுங்கள், என் கணவர் நாபால் பேசியதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ளாதீர்கள். நாபால் என்றாள் முட்டாள் என்று பொருள். அவர் தனது பெயருக்கு ஏற்ற மாதிரிதான் அனைவரிடமும் நடந்துகொள்கிறார். இந்த அடிமைப் பெண் கொண்டுவந்த உணவுப்பொருட்களைத் தயவுசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள். என் கணவனை மன்னித்துவிடுங்கள். நீங்கள் கடவுளின் போர்களைத் தலைமை தாங்கி நடத்துபவர். இந்த நாள்வரை நீங்கள் எந்தக் கெட்ட காரியத்தையும் செய்தது இல்லை. இனியும் செய்ய வேண்டாம்” என்று வேண்டுகோள் வைத்தாள்.
நன்றி சொன்ன தாவீது
அப்போது தாவீது அபிகாயிலிடம், “இன்றைக்கு உன்னை என்னிடம் அனுப்பிய நம் கடவுளாகிய யகோவாவுக்குப் புகழ் சேரட்டும்! புத்திசாலியாக நடந்துகொண்டு அமைதியைக் கொண்டுவந்த உன்னைக் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்! கொலைப்பழிக்கு ஆளாகாதபடிக்கும் பழிக்குப் பழி வாங்காதபடிக்கும் இன்று என்னைத் தடுத்த உன்னைக் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்! நீ புறப்பட்டு வந்து என்னைத் தடுக்காமல் இருந்திருந்தால், நாபாலின் ஆட்கள் அத்தனை பேரையும் வெட்டிச் சாய்த்திருப்பேன். இப்போது நான் நிம்மதி அடைந்தேன். அதற்காக உனக்கு நன்றி. நீயும் நிம்மதியாக உன் வீட்டுக்குப் போ” என்று கூறிவிட்டுத் தன் ஆட்களுடன் தாவீது திரும்பிச் சென்றார்.
அதன் பின், அபிகாயில் தன் கணவன் நாபாலிடம் திரும்பிப்போனாள். அவனோ தன்னுடைய வீட்டில் தொண்டைவரை மது அருந்திவிட்டு, குஷியாக ராஜபோக விருந்து உண்டபடி இருந்தான். காலையில், அவனுக்குப் போதை தெளிந்த பிறகு அபிகாயில் எல்லா விஷயங்களையும் எடுத்துச் சொன்னாள். அப்போது, அவன் பயத்தால் வாடி பத்து நாட்களுக்குப் பின் செத்துப்போனான். நாபால் இறந்த செய்தியைத் தாவீது கேள்விப்பட்டதும், “கடவுளுக்கு நன்றி. கடவுள் எனக்கு நீதி வழங்கியிருக்கிறார். அபிகாயிலை அபலைப்பெண்ணாகவிட மனமில்லை. எனவே, அவளை மணந்துகொள்ள விரும்புகிறேன். அவளது சம்மதத்தைக் கேட்டு வாருங்கள்” என்று கூறித் தன் ஆட்களை அனுப்பினார். அபிகாயில் இதைக் கேட்டு, “அவருக்குச் சேவை செய்யக்கூட நான் தகுதியற்றவள். இருந்தும் என்னை உயர்த்த நினைத்த என் எஜமானுக்கு நான் எவ்வாறு நன்றிசொல்வேன்.” என்றபடி எழுந்து கழுதை மேல் தன் பணிப்பெண்களுடன் தாவீதை அடைந்தாள். தாவீது அபிகாயிலை மணந்துகொண்டார். மீகாளைப் பிரிந்த பிறகு தாவீது அகினோவாமைத் மணந்திருந்தார். அகியும் அபிகாயிலும் தாவீதுக்கு அன்பான மனைவிகளாக இருந்தார்கள்.
(பைபிள் கதைகள் தொடரும்)
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago