பைபிள் கதைகள் 59: பிறன்மனை நாடிய மன்னன்!

By அனிதா அசிசி

உலக வாழ்வில் ஐந்து பேருடைய உறவிலிருந்தும் நட்பிலிருந்தும் ஒதுங்கி இருக்க வேண்டும் என்பது விவிலியம் சொல்லிச் சென்ற பாடம். அந்த ஐவரில் பொய்யனுக்கு ஐந்தாவது இடம். பொய்யன் நிச்சயம் திருடனாகவும் இருப்பான். எனவே, அவனது கயமை, களவு ஆகியவற்றில் நமக்கும் பங்கு கொடுத்துவிடுவான். நான்காவது இடத்தில் கோழை. ஆபத்தான நேரத்தில் நம்மை விட்டுவிட்டு ஓடிவிடுவான். மூன்றாவது இடத்தில் இருப்பவன் முட்டாள்.

இவனால் நஷ்டம் மட்டுமல்ல, உங்கள் திறமையும் மங்கிவிடுவதோடு, அதற்கு அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடும். இரண்டாவது இடத்தில் வைத்துப் பார்க்கப்படுவன் கஞ்சன். இவனது உறவால் உங்கள் நேரமும் நியாயமான கோரிக்கையும் வீணாகிவிடும். முதலிடம் பிறன்மனை நாடி, அதைத் தனதாக்கிக்கொள்பவன்.

பிறன்மனை நாடுபவன் அழகும் வீரமும் திறமையும் மிக்கவனாக இருந்தாலும், அவற்றால் எந்தப் பயனும் இல்லை. முகத்துக்கு முன்னால் சிரித்து முதுகில் குத்தும் வஞ்சகமும் துரோகமும் இவனிடம் குடிகொண்டிருக்கும். இவனிடம் முகம் கொடுத்தும் பேசத் தேவை இல்லை என்பது முன்னோர் வகுத்துத் தந்த பாதை. இஸ்ரவேல் மக்களை மட்டுமல்ல; பிறவின மக்களையும் கம்பீரமாகத் திரும்பிப் பார்க்க வைத்த வீரர், கடவுளுக்கே தனது வெற்றிகள் அனைத்தையும் அர்ப்பணித்து வந்த தாவீது இஸ்ரவேலின் பேரரசனாக ஆனார். ஆனால், பிறன்மனை நாடியதால் கடவுளின் கோபத்துக்கு ஆளாகி அடுக்கடுக்கான பிரச்சினைகளைச் சந்தித்துத் தன் ஆயுளை அற்பமாக்கிக்கொண்டார்.

ஒரு நல்ல அரசனின் பலகீனம்

எருசலேம் எனும் எழில்மிகுந்த நகரத்தைக் கைப்பற்றி, இஸ்ரவேலின் தலைநகராக அதை அறிவித்து, அங்கே தன் ஆட்சியைத் தொடங்கினார் தாவீது. கடவுள் கொடுத்த கட்டளைகளின்படி வாழ்ந்துவந்த அவர், ஒரு நல்ல அரசனாகவும் மக்களிடம் புகழை ஈட்டினார். கடவுளே அரசனைவிட உயர்ந்தவர் என்பதை உணர்ந்திருந்த தாவீதின் மீது கடவுளாகிய யகோவா தன் அருளைப் பொழிந்தார். முன்பு வாக்களித்தபடியே கானான் தேசத்தை தாவீதின் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார்.

கடவுளின் உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமுக்குக் கொண்டு வந்து, அதைப் புனிதமாக வைத்துக் காப்பதற்கான ஒரு மாபெரும் தேவாலயத்தைக் கட்ட விரும்பினார். கடவுளின் நேசத்துக்குரியவராக இருந்த தாவீதை ‘சபலம்’ என்ற பலவீனம் பாதாளத்தில் தள்ளியது.

ஒரு மாலை நேரத்தில், அரண்மனையின் உப்பரிகையில் உலாவிக்கொண்டிருந்த தாவீது, அங்கிருந்து கீழே பார்த்தார். அந்தச் சமயத்தில் தற்செயலாக அங்கே ஒரு பெண் அமைதியாக நடந்து சென்றுகொண்டிருந்தாள். அழகின் மொத்த உருவமாக இருந்த அவளைத் தன் கண்கள் கொள்ளாமல் நோக்கினார். அவள் கடந்துசென்ற பிறகு தாவீதின் மனது அமைதி அடையவில்லை. அந்தப் பெண்ணின் பெயர் பத்சேபாள். மணமானவள்.

அவளுடைய கணவரின் பெயர் உரியா. அவர் தாவீதின் தலைசிறந்த போர் வீரர்களில் ஒருவர். பிறன்மனை நாடுதல் மிகத் தீங்கான பாவம் என்று தெரிந்திருக்க, தாவீதோ தனக்கு விசுவாசமான ஊழியம் புரியும் தன் போர் வீரனின் மனைவி என்று தெரிந்தும் அவள்மேல் ஆசை கொண்டார். அப்போது போர் நடந்துகொண்டிருக்கிறது. பத்சேபாளின் கணவன் போர்க்களத்தில் இஸ்ரவேலின் எதிரிகளோடு நாட்டுக்காகச் சண்டைபோட்டுக்கொண்டிருக்கிறார்.

இந்தச் சமயத்தில் தன் அதிகாரத்தின் கொடுக்கைப் பயன்படுத்தி பத்சேபாளை அரண்மனைக்கு அழைத்து வரும்படி உத்தரவிடுகிறார். அரசனுக்குப் பணியாதுபோனால் தலை மிஞ்சாது அல்லவா?

மனக்குழப்பத்துக்குள்ளான தாவீது

பத்சேபாள் தாவீதின் அந்தரப்புரத்தை அலங்கரித்தாள். பின் கர்ப்பமாகி, அவரது கருவை வயிற்றில் சுமந்தாள். இதை அறிந்த தாவீது மிகுந்த மனக்குழப்பத்துக்கு ஆளானார். தனது தளபதியான யோவாபுக்கு ஆள் அனுப்பி, பத்சேபாளின் கணவன் உரியாவைப் போர்க் களத்தின் முன்னணியில் கேடயமாக நிறுத்தும்படி உத்தரவிட்டார்.

இதன்மூலம் போரில் உரியா கொல்லப்பட்டுவிடுவார், பின்னர் பத்சேபாளை நிரந்தமாகத் தனக்குரியவளாக மாற்றிக்கொண்டுவிடலாம் என்பது தாவீதின் எண்ணம். அவர் நினைத்தபடியே உரியா கொல்லப்பட்டார். இப்போது நிம்மதி அடைந்தவரைப் போல பத்சேபாளை தாவீது மணந்துகொண்டார்.

பறிபோன நிம்மதி

ஆனால், அந்த நிம்மதி நிலைக்கவில்லை. தாவீது இப்படி நடந்துகொண்டது கடவுளை மிகவும் கோபப்படுத்திவிட்டது. மோசே வழியே கடவுள் கொடுத்த திருச்சட்டங்களில் செய்யக் கூடாத தீய பாவத்தை தாவீது செய்துவிட்டார். இதை தாவீதுக்கு உணர்த்துவதற்காகத் தன் ஊழியக்காரனாகிய நாத்தானை அவரிடம் கடவுள் அனுப்பினார்.

தாவீதைச் சந்தித்த நாத்தான், “ கடவுள் உனக்கு மரண தண்டனை கொடுக்கவில்லை என்று இறுமாந்து இருக்காதே, நீ செய்யக் கூடாத தீய செயலைச் செய்ததால் உன் உறவுகளால் நிறைய பிரச்சினைகளைச் சந்திப்பாய்” என்று கூறிச் சென்றார். இதைக் கேட்டு மிகவும் வருத்திய தாவீது தனது மோசமான நாட்களுக்காகக் காத்திருந்தார். நாத்தான் கூறியபடியே தாவீதுக்கு அடுக்கடுக்காகப் பிரச்சினைகள் வந்தன.

இழப்புகளும் முதுமையும்

தாவீதுக்கும் பத்சேபாளுக்கும் பிறந்த மகன் மரணமானான். அதன்பின் தாவீதின் முதல் மகனாகிய அம்னோன் தன் சகோதரி தாமாரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினான். இதையறிந்து கொதித்துப்போன தாவீதின் மற்றொரு மகன் அப்சலோம் அம்னோனைத் தனது வாளுக்கு இரையாக்கினான். இதனால் அப்சலோமுக்கு மக்களின் ஆதரவு பெருகியது. இதைப் பயன்படுத்தி அப்சலோம் எருசலேமின் ராஜாவாகத் தன்னை அறிவித்துக்கொண்டான்.

இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத தாவீது, தன் மகனுக்கு எதிராகப் போரை அறிவித்தார். அந்தப் போரில் அப்சலோம் கொல்லப்பட்டு தாவீது வெற்றியடைந்தார். தாவீது மீண்டும் அரியணையில் அமர்ந்தாலும் சொந்த உறவுகளால் விளைந்த குழப்பங்களாலும் மரணங்களாலும் தளர்ந்துபோனார். இதற்கிடையில் தாவீதுக்கும் பத்சேபாளுக்கும் இரண்டாவதாக சாலொமோன் என்ற மகன் பிறக்கிறான். தாவீது தன் முன்னோர்களைப் போல் அல்லாமல் 70 வயதிலேயே முதுமையை எட்டி நோய்வாய்ப்பட்டார்.

அந்தச் சமயத்தில் அவருடைய மற்றொரு மகன் அதோனியா தன்னை அரசனாக ஆக்கிக்கொண்டான். ஆனால், தாவீது இதை ஏற்றுக்கொள்ளவில்லை. சாலொமோனே தனக்குப் பிறகு அரசனாக இருப்பான் என்பதை இஸ்ரவேல் மக்களுக்கு உணர்த்தும்விதமாக அவனது தலையில் அபிஷேக எண்ணெயை ஊற்றும்படி தலைமை ஆசாரியர் சாதோக்கிடம் தாவீது கட்டளையிட்டார்.

மரணத்துக்கு முன்

தாவீது மரணப்படுக்கையில் இருந்தபோது தன் மகன் சாலொமோனை அழைத்து “ நான் மரிக்க இருக்கிறேன். ஆனால், நீ என்னைப் போல் இல்லாமல் இரு. கடவுளின் கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிந்து நட. மோசேயின் சட்டங்களில் எழுதப்பட்ட அனைத்துக்கும் கீழ்ப்படிந்திரு. நீ இவற்றைச் செய்தால், பின்னர் நீ செய்கிற அனைத்திலும் வெற்றிபெற்றவன் ஆவாய். கடவுளுக்குக் கீழ்ப்படிந்தால், அவர் தன் வாக்குறுதியைக் காப்பாற்றுவார்.

கடவுள் என்னிடம், ‘நான் சொல்லிய வழிகளில் உன் பிள்ளைகள் கவனமாகவும் மனதுக்கு உண்மையாகவும் நடந்தால், இஸ்ரவேலரின் அரசன் உன் குடும்பத்தில் உள்ள ஒருவனாகவே இருப்பான்’ என்றார். எனவே, இதை மனதில் வைத்துக்கொள் என்று கூறி கண்களை மூடினான். அப்போது தாவீதுக்கு 70 வயது.

(பைபிள் கதைகள் தொடரும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்