கோலாகலமாக நடந்த திருச்செந்தூர் சூரசம்ஹாரம்

By செய்திப்பிரிவு

திருச்செந்தூர் கடற்கரையில் நடந்த சூரசம்ஹார விழாவில், லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன், சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர்.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்த சஷ்டி விழா முக்கியமானது. சூரபத்மனை, முருகப்பெருமான் வதம் செய்த இடம் என்பதால், இங்கு நடைபெறும் சூரசம்ஹாரம் விழா உலகப் பிரசித்தி பெற்றது.

கந்த சஷ்டி விழா

கந்த சஷ்டி விழா கடந்த 3-ம் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் காலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், யாகசாலை பூஜை, மூலவருக்கு உச்சிகால பூஜை, ஜெயந்திநாதருக்கு யாகசாலையில் தீபாராதனை, தங்க சப்பரத்தில் ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து எழுந்தருளுதல், வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் சண்முக விலாசம் சேருதல், திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், தங்க ரதத்தில் கிரி வீதி உலா போன்ற வழிபாடுகள் நடைபெற்றன.

சூரசம்ஹாரம்

விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், 6-ம் நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், மற்றும் இதர கால வேளை பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து யாகசாலை பூஜைகள் தொடங்கின. பகல் 12 மணிக்கு மூலவருக்கு உச்சிகால பூஜை நடந்தது. பின்னர் தங்க சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையிலிருந்து எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன், மேளவாத்தியங்களுடன் சண்முகவிலாசம் சேர்ந்தார். அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாலை 4 மணியளவில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

ஆணவம் அழிந்தது

மாலை 4.35 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்வதற்காக கடற்கரைக்குப் புறப்பட்டார். 5 மணிக்கு மேல் சூரசஹாரம் தொடங்கியது. முதலில், கஜமுகத்துடன் வந்த சூரபத்மனை, மாலை 5.25 மணிக்கு, ஜெயந்திநாதர் வதம் செய்தார்.

இரண்டாவதாக சிங்க முகத்துடன் வந்த சூரனை 5.42 மணிக்கும், மூன்றாவதாக சுயரூபத்துடன் வந்து போரிட்ட சூரபத்மனை 6.05 மணிக்கும் வதம் செய்து, சேவலாகவும், மயிலாக வும் மாற்றி, தன்னுள் ஆட்கொண்டார். அப்போது பக்தர்கள் எழுப்பிய, ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது.

சூரசம்ஹாரத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் கூடியிருந்தனர். கடலா; கடல் அலையா? என வியக்கும் வண்ணம் கடற்கரை முழுவதும் மனிதத் தலைகளாகக் காட்சியளித்தன.

சூரசம்ஹாரம் முடிந்ததும் சுவாமி ஜெயந்திநாதர் சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. சுவாமி பூஞ்சப்பரத்தில் கிரிபிரகாரம் உலா வந்து, கோயிலை சேர்ந்தார். இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயா அபிஷேகம் நடைபெற்று, பக்தர்களுக்கு சஷ்டி பூஜை தகடுகள் கட்டப்பட்டன. விரதமிருந்த பக்தர்கள் கடலில் நீராடி விரதத்தை முடித்தனர். விழாவின் இறுதி அம்சமாக சனிக்கிழமை திருக்கல்யாணம் நடை பெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணைய ஆணையர் (பொறுப்பு) ஞானசேகர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

இதுபோல், தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE