ஆகமம் தோன்றிய புண்ணிய ஊர்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து 10 கி.மீ. தூரத்திலும் மயிலம் முருகன் கோயிலுக்கு அருகிலும் கீழ் இடையாலம் எனும் கிராமம் உள்ளது. அங்கு முதல் தீர்த்தங்கரர் ஆதிபகவன் கோயில் இருக்கிறது. இது கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கீழ் இடையாலத்தின் அருகிலுள்ள சமணர் கிராமக் கோயில்களைவிடக் காலத்தால் முந்திய கோயில் இது.

தவம்செய்யத் தனி அறைகள்

பத்தாவது தீர்த்தங்கரர் பகவான் சீதளநாதரின் யட்சன் பிரம்மதேவர், தனிக் கருவறையில் அருள்பாலிக்கிறார். யட்சன், யட்சி என்பவர் தீர்த்தங்கரரை வழிபட்டும், அவரது தவத்திற்கு இடையூறு வராமல் தடுத்தும், வழிபடும் மக்களுக்கு நன்மைகளைச் செய்பவராக உள்ளனர். தேவ, தேவியர் கோயிலில் தவத்தோர்கள் தங்கித் தவம் செய்ய தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக சமணர் கோயில் மண்டபத்தின் வெளியிலிருக்கும் மானஸ்தம்பமெனும் அமைப்பு இக்கோயிலில் மண்டபத்தினூடே அமைந்துள்ளது தனிச்சிறப்பானது.

இவ்வூரில் மல்லிசேனர், வாமனர், விமலஜினதேவர் ஆகிய மாமுனிவர்கள் வாழ்ந்தனர். வாமனமுனிவர் மேருமந்திர புராணம் எனும் நூலை இயற்றித் தமிழ்த் தாய்க்குப் பெருமை சேர்த்தார். இவ்வூரிலுள்ள கற்பாறையில் மல்லிசேனர் மற்றும் வாமன முனிவரின் பாதங்கள் உள்ளன, கமண்டலமும் மயிற்பீலியும் புத்தகம் வைக்கும் சிக்குப்பலகையும் பொறிக்கப்பட்டுள்ளன. சிக்குப் பலகைகள், அறவோர்களின் அறநூல்கள் மீதிருந்த ஆர்வத்தைக் காட்டுகின்றன. கல்வெட்டுகளும் காணப்படு கின்றன. இவ்விடத்தை சித்தாந்தப்பாறை என்கின்றனர். ஆண்டுதோறும் யுகாதி நாளன்று இங்கு சமணர்கள் ஒன்றுகூடி திருவடிகளுக்குச் சிறப்புப் பூஜை வழிபாடு நடத்துகின்றனர்.

இடம்பெயர்ந்த ஓலைச்சுவடிகள்

இந்தக் கோயிலிலிருந்த சமண சித்தாந்த ஓலைச்சுவடிகள் முக்கியமானவை. ஆடுமேய்ப்பவர் மழைக்காக ஆலமரத்தடியில் ஒதுங்கும்போது ஓர் பெட்டியில் சித்தாந்த ஓலைச்சுவடிகளைக் காண, அவ்வூர் சமணர்கள் அவற்றைக் கோயிலில் வைத்தார்களாம்.பின் அவை மாயமாகப் பறந்து,கர்நாடக மாநிலத்திலுள்ள மூடுபத்திரை ஜைனமடத்திற்குச் சென்றுவிட்டன எனக் கூறுகின்றனர். அவ்வூர் பெரியவர் ஒருவர் அவற்றைப் பாதுகாக்கக் கொடுத்துவிட்டார் என்றும் சொல்கின்றனர். எப்படியாயினும் அவை இன்றும் மூடுபத்திரையில் உள்ளன. கீழ் இடையாலத்தை ஆகமம் தோன்றிய புண்ணிய ஊர் என சமணர்கள் கொண்டாடுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE