கடவுளை நீங்கள் காணலாம்

By செய்திப்பிரிவு

சுவாமி விவேகானந்தர், ஆன்மிகத்துக்குப் புதிய பொருள் தந்த மேதை. கடவுளை அறிதல், மோட்சம் தேடுதல் ஆகியவை எல்லாம் பெரிய ஞானிகளுக்கு மட்டுமே உரியவை என்பதை மாற்றி, சாதாரண மனிதர்களும் ஆன்மிக தரிசனம் பெற முடியும் என்பதை உரத்துச் சொன்னவர். வேதாந்தம் என்பதை வெறும் மாயாவாதமாகவே பலரும் புரிந்துகொண்டிருந்த காலகட்டத்தில் வேதாந்தத்துக்குப் புதிய விளக்கம் அளித்தவர். அது எப்படி நம் அன்றாட வாழ்வுடன் தொடர்புகொண்டது என்பதை விளக்கியவர். செயலின் மூலமாக எப்படி ஒருவர் கடவுளை அடைய முடியும் என்பதை உணர்த்தியவர். ஆன்மிகம், வழிபாடு ஆகியவை பற்றி அவரது எண்ணங்கள் சிலவற்றை இங்கே தருகிறோம்.

• நீங்கள் இறைவனை உணர்ந்தால் உங்கள் முகம் மாறிவிடும். உங்கள் குரல் மாறிவிடும். உங்கள் தோற்றமே மாறிவிடும். நீங்கள் மனிதகுலத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக இருப்பீர்கள்.

• உடலையும் புலன்களையும் வழிநடத்தும் போது, மனம் என்ற கடிவாளத்தை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.

• இல்லறத்தில் வாழ்ந்தபடியே காமத்தையும், பணத்தாசையையும் துறந்தவர்கள் பாக்கியசாலிகள்.

• மதத்தின் ரகசியம் கொள்கைகளில் இல்லை. செயல்முறையில் தான் உள்ளது. நல்லவனாக இருப்பது, நன்மை செய்வது தான் மதத்தின் முழுப்பரிமாணமாகும்.

• ஒருவன் தன்னை வெறுக்கத் துவங்கிவிட்டால், அவன் கீழ்நிலைக்குச் செல்வதற்கான கதவு திறந்துவிட்டது என்று பொருள்.

• சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்தபோதும் சுயநலம் இல்லாதவனாக இருந்தால் அவனிடம் கடவுள் இருக்கிறார்.

• தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும் பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் இறைவனைக் காண்பவனே உண்மையான வழிபாடு செய்பவன் ஆவான்.

• கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு கடவுள் ஒருவர் உலகில் இல்லை.

• அனைத்திலும் இறைவனைக் காண்பது நம்முடைய லட்சியமாகும். அனைத்திலும் காண முடியாவிட்டால், நாம் நேசிக்கும் ஒன்றிலாவது பார்க்க வேண்டும்.

• இயற்கையின் ரகசியத்தை அறியும் போது மனிதன் இயற்கையின் உதவியால் இயற்கைக்கு அப்பாற்பட்ட பரம்பொருளை உணர்வதுடன் மரணத்தையும் வெல்கிறான். இயற்கையைக் கடந்த அந்தப் பொருளின் உதவியால் அவன் எல்லையற்ற ஆனந்தத்தை அனுபவிக்கிறான்.

• பிரார்த்தனையால் நுண்ணிய ஆற்றல்கள் எளிதாக விழிப்படைகின்றன. பக்தியுணர்வுடன் பிரார்த்தனை செய்தால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.

• முதலில் உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். அதன்பிறகு, ஆண்டவனை நம்புங்கள்.உணர்வதற்கு இதயமும், எண்ணுவதற்கு அறிவும்,உழைப்பதற்கு உறுதியான உடலும் நமக்கு வேண்டும். இதயத்துக்கும் அறிவுக்கும் போராட்டம் மூளுமானால், இதயத்தைப் பின்பற்றி நடங்கள்

நாம் எல்லாரும் குழந்தைகள்

கடவுள் ஒருவர் இருக்கிறார், அவர் எங்கும் நிறைந்துள்ளார் என்று நீங்கள் எல்லாரும் சொல்கிறீர்களே, எங்கும் நிறைந்திருக்கிறார் பற்றி உங்கள் கருத்து என்ன? சற்றுக் கண்களை மூடிக்கொண்டு சிந்தியுங்கள். அது என்ன என்பதை எனக்குக் கூறுங்கள்.

உங்கள் சிந்தனையில் விரிவதுதான் என்ன? ஏற்கனவே நீங்கள் கண்ட பரந்த கடல் அல்லது விரிந்த நீல வானம், அல்லது அகன்ற புல்வெளி அல்லது இவை போன்ற வேறு எதோ ஒன்று, அப்படித்தானே?

இதுதான் எங்கும் நிறைந்தவர் என்பதற்கு நீங்கள் சொல்லும் பொருளானால் அது பயனற்றது, நீங்கள் அதன் பொருளை உணரவே இல்லை.

இறைவனின் மற்ற குணங்களும் அப்படித்தான். அவர் எல்லாம் வல்லவர், எல்லாம் அறிந்தவர் என்று கூறும்போது நாம் என்ன புரிந்துகொள்கிறோம்? எதுவும் இல்லை. மதம் என்பது அனுபூதி. இறைவனை பற்றிய உங்கள் கருத்தை நீங்கள் அனுபூதியில் அறியும்போதுதான் நீங்கள் இறைவனை வழிபடுகிறீர்கள் என்று கூறுவேன். அதை அடையாதவரை, நீங்கள் அந்தச் சொற்களிலுள்ள எழுத்துக்களை எழுத்துக்கூட்டிப் படிக்கத் தெரிந்தவர்கள் அவ்வளவுதான்.

இந்த அனுபூதி நிலையை அடைய, நாம் கண்ணுக்குப் புலனாகின்றவற்றின் வாயிலாகச் செல்ல வேண்டும். குழந்தைகள் எண்ணிக்கை கற்கும்போது முதலில் புறபொருட்களின் மூலம்தான் ஆரம்பிக்கிறது, பிறகுதான் மனத்தாலேயே செய்ய கற்றுக்கொள்கிறது. ஒரு குழந்தையிடம் 5 x 2 = 10 என்று கூறினால் அதற்்கு ஏதும் புரியாது. ஆனால் பத்துப் பொருட்களைக் கொடுத்து, அது எப்படி என்பதைக் காட்டி விளக்கினால் புரிந்துகொள்ளும்.

இது நிதானமான நீண்ட பாதை. இங்கு நாம் எல்லாரும் குழந்தைகள். நாம் வயது முதிந்தவர்களாக இருக்கலாம் , உலகிலுள்ள எல்லா நூல்களையும் படித்திருக்கலாம். ஆனால் ஆன்மிகத் துறையில் நாம் எல்லாரும் குழந்தைகளே. கொள்கைகள், தத்துவங்கள், அறக் கோட்பாடுகள் எல்லாவற்றையும் எவ்வளவுதான் உங்கள் மூளைக்குள் திணித்தாலும் அவற்றால் பெரிதாகப் பலன் ஒன்றும் இல்லை.

நீங்கள் யார்? அனுபூதியில் என்ன உணர்ந்திருக்கிறீர்கள்? இவைதான் பயனுள்ளவை, சாரமானவை. நாம் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் அறிந்திருக்கிறோம், அனுபூதியில் எதையும் உணரவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

7 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்