வெயிலுகந்தம்மன் திருக்கோயில், சூரபத்மனை வதம் செய்த கந்தனுக்கு பராசக்தி, பலவடிவம் கொண்டு கைகொடுத்த திருத்தலம் ஆகும்.
அன்னையிடம் ஆசிபெறும் கந்தன்
அசுரனை அழிக்க உதவிய அன்னைக்கு மரியாதை செலுத்தும் விதமாக, திருச்செந்தூர் முருகப் பெருமானுக்கு ஆவணி மற்றும் மாசி மாதத்தில் நடைபெறும் திருவிழாக்களுக்கு முன்னதாக வெயிலுகந்தம்மனுக்கு பத்து நாள் உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சூரசம்ஹாரம் நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் இரவு முருகப் பெருமான், சூட்சும உருவில் அம்மன் திருக்கோயிலுக்கு வந்து அன்னைக்கு பூஜைசெய்து அருளாசி பெற்று வேல் வாங்கிச் செல்வதாக ஐதீகம்.
குதிரை முகத்துடன் குழந்தை
அம்மன் திருத்தலத்தில் உள்ள திருச்செந்தூரின் பிரசித்திபெற்ற தீர்த்தமான வதனாரம்பத் தீர்த்தத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. 1200 ஆண்டுகளுக்கு முன்பு, வரகுண பாண்டியன் என்னும் மன்னன் புத்திர பாக்கியம் இல்லாது கவலையுற்றான். திருச்செந்தூர் வந்து சஷ்டி விரதம் இருந்த பின் மன்னனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், அக்குழந்தையின் முகம் குதிரையின் முகமாகவும் உடல் மனித உருவிலும் இருந்தது கண்டு மன்னன் மேலும் மனதொடிந்தான்.
கந்தனிடம் தன் குறையையெண்ணி நெக்குருக வேண்டி நின்றான் மன்னன். அவனது கனவில் காட்சிகொடுத்த கந்தப்பெருமான், “அன்னை பார்வதி தேவியால் மட்டுமே போக்க முடியும். எனவே, நீ அன்னையிடம் போய் நில்; அபயம் அளிப்பாள்” என்று சொன்னார். அதன்படி மன்னனும் காடுமலை கடந்து வெயிலுகந்தம்மன் திருத்தலத்தை அடைந்தான். அங்கே அன்னையிடம் தனது மகளின் குறைதீர வேண்டுதல் வைத்தவன், அங்கேயே குடில் அமைத்துத் தங்கிக் கடும் விரதமும் மேற்கொண்டான்.
அம்மன் சொன்ன உபாயம்
அவனது வேண்டுதலுக்கு இறங்கி வந்த அன்னையவள், “ஆடிச் செவ்வாயில், என்னெதிரே இருக்கும் இந்தக் கடலில் இறங்கித் தீர்த்தமாடினால் உன் குழந்தை சுய உருவம் பெறுவாள்” என்று அசரீரியாய் அருள்வாக்கு தந்தாள். அதுபடியே அன்னையை நெஞ்சில் நிறுத்திக் கையில் குழந்தையுடன் கடலில் இறங்கினான் மன்னன். அதுவரை ராட்சத அலைகளால் ஆர்பரித்துக்கொண்டிருந்த கடல் சாந்தமானது. மன்னன் கடலில் மூன்று முறை மூழ்கி எழுந்தபோது குழந்தையின் முகம் மனித முகமாக மாறியிருந்தது.
குழந்தையின் வதனம் மாறிய இடம் என்பதால் இந்த இடம் ‘வதனாரம்ப தீர்த்தம்’ என்று பெயரானது. மகளின் அழகு முகம் பார்த்து ஆனந்தம் கொண்ட பாண்டியன், குழந்தையின் உடம்பில் மஞ்சளும் குங்குமமும் கலந்த நலங்கு மாவு பூசி, அரளி மாலை அணிவித்து அலங்காரம் செய்து அன்னையை தரிசிக்கச் சென்றான். சன்னிதிக்குப் போனதும் அன்னையின் முகம், குதிரை முகமாக மாறி இருந்தது கண்டு திடுக்கிட்டான். அரசன் இதயம் நெகிழ்ந்து பதறி அம்மனிடம் கேட்டான்.
மாறியது அம்மன் முகம்
“இங்குவந்து அம்மா என்றழைக்கும் எனது குழந்தைகளுக்கு அவர்கள் கேட்பதை என்னால் கொடுக்காமல் இருக்க முடியாது. நீ செய்த கர்ம பலன்படி அனுபவிக்க வேண்டிய துன்பங்களை நான் ஏற்றுக் கொண்டேன். உனது கர்ம பலன் தீர்ந்ததும் இதோ எனது இந்த குதிரை முகமும் மாறிவிடும்” என்று கூறினாள். அதன்படியே சிறிது காலம் கடந்த பின் அன்னையின் முகம் மாறியது. அதன்பிறகு வரகுண பாண்டியன் அம்மனுக்குக் கோயில் எழுப்பி நிலங்களை மானியமாக எழுதிவைத்தான்.
இன்றைக்கும் வதனாரம்ப தீர்த்தத்திற்கு அந்த மகத்துவம் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆடி செவ்வாய்களில் அதிகாலையில் பெண்கள் வதனாரம்பரத் தீர்த்தத்தில் நீராடி நலங்கு மஞ்சள் அணிந்து செவ்வரளி மாலை அணிந்து அன்னையை வணங்கினால் முகம் அழகு வடிவம் பெறுவதோடு தீர்க்க சுமங்கலிகளாகவும் இருப்பார்கள் என்பது நம்பிக்கை.
திருச்செந்தூரின் வடபுலத்தில் வீற்றிருக்கும் வெயிலு கந்தம்மனுக்கு ஆவணி, மாசி மாதங்களில் பத்து நாள் திருவிழா களைகட்டுகிறது. அப்போது அன்னை சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வருவாள். இரண்டு திருவிழாக்களிலும் பத்தாம் நாள் உற்சவத்தின்போது அன்னைக்குக் கடலில் தீர்த்தவாரி நடக்கும். பிறகு, திருச்செந்தூர் முருகப் பெருமானுக்கு எதிரே உள்ள சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி, புதல்வனுக்கு அருளாசி வழங்குகிறாள் அன்னை.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago