அஞ்சலி 1938 - 2016
தொழில்ரீதியாக ஒரு பொறியாளர் டி.கே.வி. தேசிகாச்சார். தனது தந்தையும் புகழ்பெற்ற யோகாசிரியருமான டி. கிருஷ்ண மாச்சார்யா நோயுற்ற மக்களுக்கு உதவுவதைப் பார்த்த பிறகு தனது வாழ்வையும் யோகாவுக்காக அர்ப்பணிப்பதற்கு முடிவுசெய்தார். ஆரோக்கியத்துக்கும் குணப்படுத்துவதற்குமான கருவியாக யோகாவைப் பார்க்க ஆரம்பித்தது இந்த மாற்றத்துக்குக் காரணம். இந்தக் காரணம்தான், யோகாவைப் பயன்படுத்தித் துயரத்தைக் களைவது என்பதை அவரது வாழ்நாள் தேடலாக ஆக்கியது.
கடந்த திங்கள்கிழமை சென்னையில் தனது 78-வது வயதில் மறைந்த தேசிகாச்சார், புராதன தத்துவ மரபுகளைப் பற்றிப் பெருமையடித்தோ அசாதாரணமான யோகாசனங்களைக் காண்பித்தோ உலகைக் கவர்வதற்கு முயன்றவர் அல்ல. “இதயம் என்ற விஷயத்தை யோகா மூலம்தான் நான் கண்டறிந்தேன்” என்று ஒருமுறை கூறினார். தனது ஆத்மார்த்தமான எளிமை மூலமாகத்தான் மற்றவர்களுடன் அவர் உறவு கொண்டார்.
அவரிடம் சிகிச்சைக்காக வருபவர்களிடம், யோகா சார்ந்த கருத்தியலை அவர் வலுக்கட்டாயமாகப் புகுத்தியதில்லை. ஆனால் அதற்குப் பதிலாக அவர்கள் கூறுவதைக் குழந்தை போல ஆர்வத்துடன் கேட்டார். அவர்கள் சொல்லும் பிரச்சினைகளுக்குக் கவனம் அளிப்பதோடு அவர்களது சமூக, கலாச்சாரப் பின்னணிகளையும் அவர் புரிந்துகொள்வார். அவரது யோகா என்பது, அந்த க்ஷணத்துக்கான யோகமாகும். பெரும் வரலாற்றுச் சுமைகொண்டதும், பாதுகாத்தே ஆக வேண்டியதுமான நிர்பந்தமான நடைமுறையல்ல அவரது யோகா.
நான் பல ஆண்டுகளுக்கு முன்னர் எனது யோகா பள்ளியை ஆரம்பித்தபோது, அவரது ஆசிர்வாதம் வேண்டும் என்று அவரைக் கூப்பிட்டேன். நாங்கள் கற்றுக்கொடுக்கும் யோகாவை எந்த வகையென்று அடையாளம் சொல்வது என்று கேட்டேன். யோகா என்று மட்டும் கூறினால் போதும் என்று உறுதியாக வலியுறுத்தினார். அதிகபட்சமாக பதஞ்சலி யோகா என்று கூறலாம், அதற்கு மேல் எந்தப் பெயரும் வைக்க வேண்டியதில்லை என்றார். முத்திரை குத்துவதும், நிலைப்படுத்துவதும்கூட யோக அறத்துக்கு எதிரானது என்று அவர் பார்த்தார். யோகத்தின் அடிப்படை இயல்பே நெகிழ்வானது என்பதே அவரது பார்வை.
“எனது கடைசி மூச்சு இருக்கும்வரை, இதற்கெல்லாம் எதிராக நான் போராடுவேன்” என்று அவர் தனது அமெரிக்க மாணவர் லெஸ்லி காமினாப்பிடம் கூறியுள்ளார். “ நபர்தான் முக்கியம், பாணி அல்ல. எந்த முறை நமக்குப் பயனுள்ளதாக இருக்கிறதோ அதுதான் நமக்கானது” என்று கூறியவர்.
புகழ்பெற்ற யோகாசிரியரான தனது தந்தையிடம் அவர் யோகப் பயிற்சியைப் பெற முடிவுசெய்தபோது, கடவுள் என்ற விஷயத்தைக் கலக்காமல்தான் யோகப் பயிற்சியை அளிக்க வேண்டும் என்பதே அவரது முதல் நிபந்தனை. அதற்கு அவரது தந்தை கிருஷ்ணமாச்சார்யாவும் உடனடியாகச் சம்மதித்தார்.
தேசிகாச்சாரின் யோகா அணுகுமுறை தனித்துவமானது; கட்டுப்பட்டித்தனமில்லாதது, அனைத்துப் பிரிவினருக்கு மானது, மதச்சார்பற்றது, மாறிக்கொண்டே இருப்பது, திறந்த மனம் கொண்டது. எல்லாவற்றுக்கும் மேலாக வேர் வரை தொடர்ந்து விசாரணையில் இருப்பது.
இதுபோன்ற சம்பிரதாயமற்ற தேர்வுகளை அவர் செய்தது அவருக்கு எளிமையாக இருந்திருக்கலாம். அறிவுசார் சொத்துரிமையாக்கம், பிராண்டிங் மற்றும் மதரீதியிலான முத்திரை கொடுத்து யோகாவை ஒரு வழிபாட்டு முறையாகவே மாற்றியிருக்கும் தற்காலச் சூழலிலிருந்து பார்க்கும்போது, அவரது தேர்வுகள் நம்பவே முடியாத தெளிவையும் முன்னோக்கிய பார்வையையும் கொண்டவை. வரும் காலத்திலும் அடிப்படைவாதத்திலிருந்து யோகப் பயிற்சியைப் பாதுகாப்பதற்கு, தேசிகாச்சாரின் நேர்மையையும் பார்வைக் கூர்மையையும் நாம் இழத்தல் ஆகாது.
மிகப் பிரபல மான யோகப் பாரம்பரியத்திலிருந்து வந்த அவர், அந்த அந்தஸ்தை மிகவும் லேசாகவே எடுத்துக் கொண்டார். சுதந்திரத்துக்குப் பிந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவின் கடந்த காலத்தை உன்னதமான ஒன்றாகவும் வீர மரபாகவும் பிரஸ்தாபித்தார்கள். அதே காலகட்டத்தில் வளர்ந்த தேசிகாச்சார், பொதுப்போக்குக்கு மாறாக, யோகாவுக்கு ஏற்றப்பட்டிருந்த புனிதத்தை அகற்றி எளிமையானதாக ஆக்கினார். தற்கணத்தின் மீதும் மனிதார்த்தத்தின் மீதும் கவனம் குவிக்க வைத்தார்.
இறந்த காலம் தொடர்பாகப் பெரிய பிரஸ்தாபங்களையோ, புராதன அறிவுக் கோட்பாடுகளைப் பாதுகாப்பதற்கான கோஷங்களையோ அவர் முன்னிறுத்தவேயில்லை. அவரைப் பொறுத்தவரை வற்றாத மரபு என்பது ஒன்றுதான். அது மனித துயரமும், சந்தோஷத்திற்கான மனிதத் தேடலும்தான். “எதைப் பாதுகாக்கிறோமோ இல்லையோ, இது எப்போதும் தொடரவே செய்யும்” என்பதே அவரது நம்பிக்கை.
இந்த அடிப்படையான, மிகவும் பொதுவான மனித நிலைமைகளைச் சார்ந்துதான் தனது நுட்பமும் மதிப்பும் வாய்ந்த யோகப் பயிற்சியை அவர் அமைத்துக்கொண்டார்.
எனது ஆசிரியர் மறைந்த சோகமான நாள் இது. ஆனாலும் அவரது பெருமையும் அவர் கற்றுக்கொடுத்த பாடங்களும் தொடரவே செய்யும். இந்தத் தருணத்தில் அவரிடமிருந்து நான் பெற்றவற்றை எண்ணிப்பார்க்கிறேன். எனது நோக்கிலிருந்து, அவருக்கு எனது மரியாதையையும் விசுவாசத்தையும் பணிவுடன் அவருக்கு தட்சணையாகச் செலுத்தினேன். அதற்குப் பதிலாக நான் விடுதலையைப் பெற்றேன். உண்மையான விடுதலை அது. ஒரு வளமான அறிவுச்செல்வமான யோகா குறித்து ஆய்ந்துபார்ப்பதற்கும், அதில் பரிசோதனை செய்துபார்ப்பதற்கும், அதைத் தகவமைத்துக் கொள்வதற்கும், இன்னும் சொல்லப்போனால் அதனுடன் விளையாடிப் பார்ப்பதற்குமான விடுதலை அது. அதன் மூலம் இந்த க்ஷணத்துக்கான பயிற்சியாக யோகாவை மாற்றிக்கொள்ள முடியும்.
நமது பொதுப் புத்தியையும் உணர்வறிவையும் எப்படிப் பயன்படுத்துவது என்பதை அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன்; மேலும் மனிதராக இருப்பது எப்படி என்பதையும் காதைத் திறந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். அனைத்துக்கும் மேலாக, அவர் சில சமயங்களில் ‘எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட’ பெயரற்ற ஒரு விஷயம் என்று ஒன்றைப் பற்றிச் சொல்வாரல்லவா, அதை அளவிடுவதற்கு ஏற்ற வகையில் உடல், மூச்சு, மனம் ஆகியவற்றின் நுட்பமான, மென்மையான எதிர்வினைகளை ‘கவனிக்க’வும் அவர் எனக்குக் கற்றுக்கொடுத்தார். ‘சாதாரணத்தன்மையை’ மிகச் சிறப்பான அம்சமாக மாற்றிய அந்த மாபெரும் ஆசிரியருக்கு எனது ஆழ்ந்த நன்றியும் வணக்கங்களும்!
(இந்தக் கட்டுரையை எழுதியவர் பரதநாட்டியக் கலைஞர்) | தி இந்து ஆங்கிலம், தமிழில்: ஷங்கர்
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
5 hours ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
12 days ago
ஆன்மிகம்
18 days ago
ஆன்மிகம்
19 days ago
ஆன்மிகம்
20 days ago
ஆன்மிகம்
20 days ago
ஆன்மிகம்
20 days ago
ஆன்மிகம்
21 days ago
ஆன்மிகம்
25 days ago
ஆன்மிகம்
25 days ago