நற்செய்தி

By சாம் செல்லதுரை

இயேசு நாதர் தாம் உலகத்திற்கு வந்த நோக்கத்தை கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்:

“தரித்திரருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், இருதயம் நருங்குண்டவர்களை குணமாக்கவும், சிறைப்பட்டவர்களை விடுதலையாக்கவும், குருடருக்குப் பார்வையும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும் வந்தேன்”.

இயேசு நாதர் சொன்ன இந்தப் பட்டியலில் பல காரியங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பது தரித்திரருக்கு நற்செய்தி என்பதே. இதற்கு முதலிடம் கொடுத்ததால், தரித்திரருக்கு நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்பது கடவுளுக்கு எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது என்பது விளங்குகிறது.

வேதனையில் வாடுபவர்களுக்கு நற்செய்தி

இருதயம் நருங்குண்டவர்கள் என்பது, பல விதங்களில் ஏமாற்றப்பட்டு, நொந்துபோய் இருக்கிறவர்களைக் குறிக்கிறது. இப்படிப்பட்ட மக்கள் சொல்லொண்ணா வேதனையை ஒவ்வொரு நாளும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். நம்பி இருந்த கணவன், மனைவி, குடும்பம் மற்றும் நண்பர்களால் கைவிடப்பட்டு, ஏமாற்றப்பட்டு, கசக்கிப் பிழியப்பட்டு, தூக்கி எறியப்பட்டவர்கள் இன்றைக்கும் ஏராளம் இருக்கிறார்கள். இப்படி இருதயம் நருங்குண்டவர்களை நற்செய்தி குணமாக்குகிறது.

சிறைப்பட்டவர்களுக்கு விடுதலை என்பது, பல்வேறு விதங்களில் அடிமைத்தனத்தில் இருக்கிறவர்களுக்குக் கிடைக்கும் விடுதலையைக் குறிக்கிறது. கடன்பட்டு, அதை திரும்பச் செலுத்த முடியாமல், கடன் கொடுத்தவர்களுக்கு அடிமைப்பட்டிருக்கிறவர்கள், பல்வேறு கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்பட்டு, அதிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கிறவர்கள் என பல்வேறு விதங்களில் சிறைப்பட்டவர்கள் விடுதலையைப் பெற வேண்டும் என்பது கடவுளுடைய சித்தமாயிருக்கிறது. இப்படி சிறைப்பட்டவர்களுக்கு கிறிஸ்துவின் நற்செய்தி விடுதலையை அறிவிக்கிறது.

குருடருக்குப் பார்வை என்பது, உடல் ரீதியாக பார்வையற்று இருக்கிறவர்களுக்கு கண் பார்வை கிடைப்பதைக் குறிப்பது மட்டுமல்ல, கடவுளைக் குறித்தும், தங்களைக் குறித்தும், வாழ்க்கையைக் குறித்தும் அறிந்து கொள்ளாதபடி மனக் கண்கள் குருடாக்கப்பட்ட மக்களின் மனக் கண்கள் திறக்கப்பட்டு, அவர்கள் சத்தியத்தை அறிந்து கொள்வதையும் குறிக்கிறது. இந்த விதமான இருளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இயேசு நாதர் அறிவிக்கும் நற்செய்தி ஒளியைக் கொண்டு வருகிறது.

நொருங்குண்டவர்களை விடுதலையாக்குவது என்பது, சமுதாயத்தில் பல்வேறு விதங்களில் ஒடுக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் விடுதலையைக் குறிக்கிறது. இந்த உலகத்தில் ஒடுக்குதல் என்பது பல விதங்களில் நடைபெறுகிறது. இன்றைக்கு சமுதாயத்தில் பலர் பல காரணங்களால் ஒடுக்கப்படுகிறார்கள். தங்களை முன்னேற விடாமல் தடுத்து, தலைதூக்க விடாமல், என்றைக்குமே தலை குனிந்து வாழச் செய்கிற சமுதாய ஒடுக்குதலால் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சில நேரங்களில் குடும்பத்துக்குள்ளேயே இப்படிப்பட்ட ஒடுக்குதல்கள் நடப்பதைப் பார்க்கலாம். கணவன் மனைவியை ஒடுக்குவது, மனைவி கணவனை ஒடுக்குவது, பிள்ளைகள்

பெற்றோரையும், பெற்றோர் பிள்ளைகளையும் ஒடுக்குவது என்று இப்படி அன்றாடம் ஒடுக்குதலை அனுபவிப்பவர்கள் ஏராளம். அதுமட்டுமல்லாமல், வேலை செய்யுமிடத்தில் அதிகாரிகளாலும், முதலாளிகளாலும் அநியாயமாய் அடிமைகள் போல் நடத்தப்பட்டு, ஒடுக்கப்படுகிறவர்களும் அநேகர். இப்படி ஒடுக்கப்பட்டவர்களுக்கு விடுதலை உண்டாக வேண்டும் என்பதுதான் கடவுளுடைய விருப்பம். இப்படி ஒடுக்கப்பட்டவர்களுக்கு இயேசு நாதரின் நற்செய்தி விடுதலையைக் கொண்டு வருகிறது.

தரித்திரருக்கு நற்செய்தி

ஆனால், இந்தப் பட்டியலில் ‘தரித்திரருக்கு நற்செய்தி’ என்பது முதலிடம் வகிப்பதைப் பார்க்கிறோம். அது கடவுள் இதற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. இந்தப் பட்டியலில் காணப்படுகிற பிரச்சினைகள் எல்லாவற்றைக் காட்டிலும் தரித்திரப் பிரச்சினையை கடவுள் மிகப் பெரிய பிரச்சினையாகக் காண்கிறார். ஏனென்றால், தரித்திரம் மனுஷனை சிறுமைப்பட வைக்கிறது. கடவுளுடைய சாயலிலும், ரூபத்திலும் உண்டாக்கப்பட்ட மனுஷனை தரித்திரம் சிறுமைப்படுத்தி, ஒன்றுமில்லாதவனாக்குகிறது. ஆனால், “நீ கீழாய் இல்லாமல் மேலாக இருப்பாய். வாலாய் இல்லாமல் தலையாய் இருப்பாய்” என்று விவிலியம் சொல்லுவதின் மூலமாக மனுஷன் எப்படி வாழும்படியாக உண்டாக்கப்பட்டவன் என்பதை கடவுள் வெளிப்படுத்துகிறார். மனிதன் ஒரு அரசனைப் போல எல்லாவற்றையும் ஆண்டு கொள்ள வேண்டும் என்பதுதான் கடவுளுடைய நோக்கம். ஆனால் பாவத்தின் மூலம் பல்வேறு பிரச்சினைகள் மனிதனுடைய வாழ்க்கையில் நுழைந்து, அதன் மூலமாக அவன் சிறுமைப்பட்டு, நருங்குண்டு, சிறைப்பட்டு, மனக்கண்கள் குருடாகி, நொறுங்குண்டு போனவனாக இருக்கிறான். இப்படிப் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியிருக்கிற மனிதனை விடுவிக்கத்தான் இயேசு நாதர் வந்தார்.

இன்னொரு சமயம் இயேசு நாதர் தான் செய்து வந்த ஊழியத்தைக் குறித்து இவ்வாறாகச் சொன்னார்: “குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது” என்றார்.

இங்கேயும் இயேசு நாதர் சில காரியங்களைப் பட்டியலிட்டுச் சொல்லுகிறார். இவைகள் இவர் இந்த உலகிற்கு வரும்போது என்னவெல்லாம் செய்வார் என்று விவிலியத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசனங்கள். இந்த காரியங்கள் அவருடைய உலக வாழ்க்கையின்போது நிறைவேறிற்று. இந்த பட்டியலில் ‘தரித்திரருக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது’ என்பது கடைசியில் இடம் பெறுவதால், தரித்திரருக்கு நற்செய்தி முக்கியமற்றது என்று எண்ணி விடக் கூடாது. ஒரு காரியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த இரண்டு விதங்கள் உண்டு. ஒன்று, முக்கியத்துவம் வாய்ந்ததை முதலாவது குறிப்பிட்டு, அதைக் காட்டிலும் குறைந்த முக்கியத்துவம் உள்ளவைகளை அதற்குப் பிறகு குறிப்பிடுவது. அடுத்தது, குறைந்த முக்கியத்துவம் உள்ள காரியங்களை முதலில் குறிப்பிட்டு, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காரியத்தை கடைசியாகக் குறிப்பிடுவது. அதன்படி ‘தரித்திரருக்கு நற்செய்தி’ என்பது, மற்றெல்லாவற்றைக் காட்டிலும் பிரதானமானது என்பதால்தான் இங்கே இறுதியில் சொல்லப்படுகிறது.

இந்தப் பட்டியலில் முதல் நான்கு காரியங்களும் மனிதனுடைய நோய்கள் குணமாவதைக் குறிக்கிறது, அதன் பிறகு வரும் ‘மரித்தோர் எழுந்திருக்கிறார்கள்’ என்பது நோய்கள் குணமாவது என்பதைக் காட்டிலும் மிகப்பெரிய காரியம். இப்படி நோய்கள் குணமாவதைச் சொல்லிவிட்டு, ‘மரித்தோர் எழுந்திருக்கிறார்கள்’ என்று சொன்னவுடன், இதைக்காட்டிலும் பெரியது ஒன்றும் இருக்க முடியாது என்றுதான் எண்ணத் தோன்றும். ஆனால் இயேசு அதற்குப் பிறகு இறுதியாக, ‘தரித்திரருக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது’ என்று சொல்லி, அந்த ஏறுவரிசையில் மற்ற இரண்டு காரியங்களைக் காட்டிலும் இதற்கு பிரதானமான இடத்தைக் கொடுக்கிறார். வியாதி குணமாவதே பெரிய காரியம். மரித்தோர் உயிரோடு எழுந்திருப்பது அதை விட பெரிய காரியம். ஆனால் இயேசுவுக்கோ, தரித்திரர் தரித்திரத்தில் இருந்து விடுதலையாவது என்பது இந்த இரண்டைக் காட்டிலும் மிகப் பெரிய காரியம்.

தரித்திரம் ஏன் மிகப்பெரிய பிரச்சினை?

தரித்திரத்தை ஏன் இவ்வளவு பெரிய பிரச்சினையாக விவிலியம் கருதுகிறது என்பதை கவனிக்க வேண்டும். ஆதியிலே கடவுள் உலகத்தையும், மனிதனையும் உண்டாக்கினபோது, அங்கு தரித்திரமே இல்லை, செழிப்பு மட்டுமே இருந்தது. மனிதனுக்காக கடவுள் எல்லாவற்றையும் உண்டாக்கினது மட்டுமல்லாமல், அவையனைத்தும் மேலும் பலுகிப் பெருகக்கூடிய விதத்தில் உண்டாக்கினார் என்றும் விவிலியம் விவரிக்கிறது. இப்படிப் பெருக்கமும், நிறைவும், ஏராளமும், தாராளமும்தான் ஆதியிலே இருந்தது. ஆனால் மனிதன் கடவுளை தள்ளி விட்டு தன் இஷ்டப்படி வாழ தீர்மானித்து இப்படி பாவத்தில் விழுந்தவுடன், பொருளாதாரத்தில் ஒரு பெரிய பாதிப்பு ஏற்பட்டது. குறைவே இல்லாமல் வாழ்ந்த மனிதன் இப்பொழுது பொருளாதார சாபத்தை தன்னுடைய வாழ்க்கைக்குள் அனுமதித்து, பூமியின் பலனை வருத்தத்தோடு புசிக்கிறவனாகி விட்டான். ஏனென்றால், அன்றுமுதல் பூமி சாபத்திற்குள்ளாகி, அதற்கு அடையாளமாக முள்ளையும் குருக்கையும் பிறப்பிக்க ஆரம்பித்து விட்டது. ஆகவே, முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிக்க வேண்டிய நிலைக்கு அவன் தள்ளப்பட்டான்.

இன்றைக்கு இந்த தரித்திரப் பிரச்சினை வளர்ந்து, பெருகி, மனுவர்க்கத்தையே பெரிதும் பாதிக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக உருவெடுத்து விட்டது. இன்றைக்கு உள்ள உலக மக்கள் தொகையில் பல பில்லியன் மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கிறார்கள் என்பது வருந்தத்தக்கது. இப்படி தரித்திரத்தில் இருப்பவர்கள், அதன் காரணமாக அநேக நேரங்களில் படிப்பறிவு இல்லாதவர்களாக, வியாதிப்பட்டவர்களாக, ஒடுக்கப்படுகிறவர்களாக, துன்பப்படுகிறவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படி தரித்திரத்தில் வாழும் மக்கள் மத்தியில் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒவ்வொரு வருடமும் எளிதாகத் தடுக்கப்படக்கூடிய தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு மரணமடைகிறார்கள். இப்படி தரித்திரம் மனித வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்கிறது.

கடவுள் தரித்திரத்திற்கு ஏற்படுத்தியிருக்கிற தீர்வு

ஆகவேதான் தரித்திரப் பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் விளைவாக, பல சமூக சேவை நிறுவனங்கள் உருவாகி, ஏழைகளுக்கு அதன் மூலம் உதவிகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. உணவு, கல்வி, மருத்துவம் என்று பல விதங்களில் உதவி செய்து, தரித்திரத்தில் இருப்பவர்களை தூக்கி விட உலகெங்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இவையனைத்தும் பாராட்டப்பட வேண்டிய நல்ல முயற்சிகள்தான். ஏனென்றால், தரித்திரப் பிரச்சினைக்கு மனிதன் தன்னால் இயன்றதைச் செய்து, ஒரு தீர்வை ஏற்படுத்த முயற்சிக்கிறான். ஆனால், சர்வ வல்லமையுள்ள இறைவன் இவை எல்லாவற்றைக் காட்டிலும் சிறந்த ஒரு தீர்வை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்.

தரித்திரருக்கு நாம் செய்யும் பல்வேறு உதவிகள் நிரந்தரமாக அவர்களது தேவையை நிவர்த்தி செய்ய முடியாது. ஆனால் கடவுள் ஏற்படுத்தி வைத்திருக்கும் தீர்வு நிரந்தரமான பரிகாரமாயிருக்கிறது. ஆகவே, வெறும் சமூக சேவை செய்து, இதுதான் தரித்திரருக்குத் தீர்வு என்று திருப்தி அடைந்து விடாமல், அதோடுகூட, தேவன் ஏற்படுத்தியிருக்கிற தீர்வை நற்செய்தியாக அறிவிக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது. சமூக சேவைகள் பெருகி, வளர்ந்து, பரவியிருந்தாலும், தரித்திரப் பிரச்சினை அதைவிட வேகமாகப் பெருகி, பெரிதாக வளர்ந்திருக்கிறது என்பதுதான் உண்மை. இவ்வளவு செய்தும் இன்னும் இந்த தரித்திரப் பிரச்சினை தீர்ந்தபாடில்லை என்ற நிலைதான் உலகத்தில் காணப்படுகிறது. ஆகவேதான் இயேசு நாதர், “உலகமெங்கும் போய், அனைத்து மக்களுக்கும் நற்செய்தியை அறிவியுங்கள்” என்று தன் சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.

தரித்திரருடைய வாழ்க்கையில் தரித்திரம் நீங்கி, அவர்கள் சுபிட்சமாக வாழும் வழிகளை கடவுள் நற்செய்தியாக அறிவித்திருக்கிறார். அந்த நற்செய்தி என்ன? நாம் எப்படி வாழ்க்கையில் வெற்றியையும் வாழ்வையும் அனுபவிக்க முடியும் என்பதை வரும் நாட்களில் நாம் தொடர்ந்து பார்க்கலாம்.

சாம் செல்லதுரை அவர்கள், முக்கியமான இறையியல் வல்லுநர்களில் ஒருவர். இவர் சென்னையில் 1985 ஆம் ஆண்டிலிருந்து இறையியல் சேவை புரிந்து வருகிறார். சாம் செல்லதுரை அவர்களின் மின் அஞ்சல் முகவரிrevsam@revsam.org

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

17 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்