பிறப்பினால் உயர்வு தாழ்வு காணும் குறுகிய மனப்பான்மை பண்டைக் காலத்தில் சமணச் சமயத்தில் இல்லை. எக்குலத்தைச் சேர்ந்தவரானாலும், தங்களது சமயக் கொள்கையைப் பின்பற்றினால் அவரைச் சமணர்கள் போற்றி வந்தனர். அருங்கலச் செப்பு எனும் நூலில் "பறையன் மகனெனினும் காட்சி யுடையான் இறைவன் எனஉணரற் பாற்று" என்று கூறப்பட்டுள்ளது.
பண்டைக் காலத்தில் சாதி பேதம் பார்க்காத தமிழகத்தில், சாதி பேதம் பாராட்டாத சமணச் சமயம் பரவியதில் ஆச்சரியமில்லை. மேலும் உணவு, அடைக்கலம், மருந்து, கல்வி ஆகிய நான்கு தானங்களைச் செய்வதைச் சமணர்கள் பேரறமாகக் கருதினர். இந்த நான்கும் அன்ன தானம், அபய தானம், ஔடத தானம், சாத்திர தானம் எனப்பட்டன. அன்ன தானம், சாத்திரம் போன்ற வார்த்தைகள் இப்படிப் பிரபலமானவைதான். இது குறித்துத் தமிழ் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி விரிவாக எழுதியிருக்கிறார்.
உணவு இல்லாத ஏழைகளுக்கு உணவு கொடுத்துப் பசியைப் போக்குவது தலை சிறந்த அறம் என்பதில் சந்தேகமில்லை. அதனால்தான், அன்ன தானத்தைச் சமணர்கள் முதல் தானமாகக் கொண்டிருந்தனர்.
அடைக்கலத் தானத்தையும் அவர்கள் பெரிதாகக் கருதியுள்ளனர். அச்சத் தால் தங்களை நாடி அடைக்கலம் அடைந்தவர்களுக்கு, அபயமளித்துக் காப்பது அபய தானம் எனப்பட்டது. இதற்காகச் சமணக் கோயில்களை அடுத்துக் குறிப்பிட்ட சில இடங்கள் இருந்திருக்கின்றன. இவற்றுக்குப் பொதுவாக அஞ்சினான் புகலிடம் என்று பெயர். இந்த இடங்களுக்கு வந்தோரைச் சமணர்கள் பாதுகாத்திருக்கிறார்கள். தென்னார்க்காடு மாவட்டம் ஜம்பை, வடஆர்க்காடு மாவட்டம் தெள்ளாறு, மின்னல், தேவிமங்கலம் ஆகிய இடங்களில் கிடைத்த சாசனங்கள், இதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன.
மூன்றாவதான ஔடத தானத்தை (மருத்துவ உதவி) பௌத்தர்களைப் போலவே சமணப் பெரியார்களும் செய்து வந்துள்ளனர். இதற்காக மருத்துவம் கற்று, நோயாளிகளுக்கு மருந்து கொடுத்து நோயைத் தீர்த்து வந்திருக்கின்றனர். சமண மடங்களில் இலவசமாக மருந்து கொடுக்கப்பட்டது, மக்களின் நன்மதிப்பைப் பெற உதவியது. சமணத் துறவிகள் இயற்றிய நூல்களுக்குத் திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்சமூலம் என்று மருந்துகளின் பெயரைக் கொடுத்திருப்பதில் இருந்து இதை அறியலாம்.
நான்காவதாகிய சாத்திர தானத்தை மற்ற எல்லாவற்றையும்விடப் பெரிதாகச் சமணர்கள் மதித்திருக்கிறார்கள். தமிழகத்தில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கல்வியை இலவசமாக முதலில் கொடுத்தவர்கள் சமணப் பெரியோர்கள்தான்.
சமண மதம் இயற்கையை அழிக்காது வாழ வேண்டும் என்ற கொள்கையை உடையது என்பதால், சமணத் துறவிகள் மலைகளில் இயற்கையாக அமைந்த படுகை, குகைகளில் வாழ்ந்து வந்தனர். அந்த இடங்கள் உறங்குவதற்குப் பயன்பட்டதால் பள்ளிகள் எனப்பட்டன. இந்தச் சமணப் பள்ளிகள் தமிழகம் முழுவதும் பரவலாக இருந்துள்ளன. சிறந்த எடுத்துக்காட்டு, திருச்சிராப்பள்ளி.
சமணத் துறவிகள் தாங்கள் தங்கிய இடங்களில் இலவசமாகக் கல்வி அளித்த இடங்கள் பள்ளிகள் எனப்பட்டதால்தான், நவீன காலத்தில் மாணவர்கள் கல்வி கற்கும் இடங்கள் பள்ளிக்கூடங்கள் எனப்படுகின்றன.
மேலும், அச்சுப் புத்தகம் இல்லாத அந்தக் காலத்தில் பனை ஏடுகளில்தான் நூல்கள் எழுதப்பட்டன. வசதி படைத்த சமணர்கள் தங்கள் வீடுகளில் நடை பெறும் திருமணம், நீத்தார்கடன் செலுத்தும் நாட்களில் தங்கள் சமய நூல்களைப் பல பிரதிகள் எழுத ஏற்பாடு செய்து, அவற்றைத் தானமாகக் கொடுத்து வந்திருக்கிறார்கள். இதற்கு ‘எழுதுவித்து' என்று பெயர். இதனால் வசதி இல்லாதோரும் அந்தப் புத்தகங்களைப் படிக்க முடிந்தது. இந்தச் செய்திகள் அனைத்தையும் மயிலை சீனி. வேங்கடசாமியின் எழுத்துகள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.
இந்த தானங்கள் அனைத்தையும் சமணத் துறவிகளும், மற்ற சமணர்களும் செய்துவந்தது சமயத்தை வளர்க்கும் நோக்கத்துடன் நடைபெற்றவைதான். ஆனால், இவை அனைத்துமே மனித இனத்தின் அடிப்படைத் தேவைகள். மற்ற மதங்களைப் போதித்தோர், இவற்றைப் பரவலாக்குவதில் அந்தக் காலத்தில் பெரிய ஈடுபாடு காட்டவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.
இன்றைக்கு நாடு முழுவதும் அபய தானத்தைத் தவிர்த்த மற்ற மூன்று தானங்களையும் எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் போற்றுகிறார்கள். அன்ன தானம், மருத்துவம், கல்வி சார்ந்த சேவைகளை இலவசமாகவும், அனைத்துத் தரப்பினருக்கும் வழங்கியது சமண மதம்தான் என்பதை உணர வேண்டும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
7 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
9 days ago