பள்ளிக்கட்டு சபரிமலைக்கு!

By எஸ்.ரவிகுமார்

எந்த ஒரு விரதமும் நல்லபடியாக முடிய அனைத்துத் தேவர்களின் அருளாசியும் வேண்டும். 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், நவ கிரகங்களின் அருளும் வேண்டுமென்றால் (27+12+9) 48 நாட்கள், அதாவது ஒரு மண்டலம் விரதம் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், சபரிமலை விரதத்தைப் பொறுத்தவரை ஒரு மண்டலம் என்பது 41 நாட்களையே குறிக்கிறது.

மலைக்கு மாலை அணிந்த நாள் முதல், தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிப்பது, நெற்றியில் சந்தனமிட்டு, சாமியின் 108 சரணங்களைச் சொல்வது, உணவிலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது, தலையணையின்றி உறங்குவது, ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்திக்கொள்வது என எல்லாமே நமது சுயகட்டுப்பாடு, ஒழுங்குமுறைக்கான விரதங்கள்தான். அதனால் 41 நாட்கள் முழுமையாக விரதம் இருந்து மலைக்குச் செல்வது சிறப்பு. கடுமையான மலைப் பாதையில் சிரமம் இல்லாமல் ஏறுவதற்கு இது உதவியாக இருக்கும். சபரிமலைக்கு முதல் முறையாகச் செல்லும் கன்னிசாமிகள், கட்டாயம் 41 நாட்கள் விரதம் இருந்து செல்வதே நன்று.

பெரிய பாதை சிறிய பாதை

கேரளாவில் உள்ள எருமேலி என்ற இடத்திலிருந்து நடக்கத் தொடங்கி பேரூர்தோடு, காளைகட்டி, அழுதை மலை, கரிமலை வழியாக பம்பை சென்று நீலிமலையைக் கடந்து சபரிமலையை அடைவது பெரிய பாதை எனப்படுகிறது. இதில் பம்பைவரை பஸ் மற்றும் வாகனங்கள் செல்கின்றன. பெரிய பாதையில் நடக்க முடியாதவர்கள் பம்பைவரை வாகனத்தில் சென்று, அங்கிருந்து நீலிமலை வரை ஏறி சன்னிதானத்துக்குச் செல்லலாம். இது சிறிய பாதை எனப்படுகிறது.

பேட்டைத்துள்ளல்

எருமேலியிலிருந்து பயணத்தைத் தொடங்கும் முன்பு பக்தர்கள் உடலில் பல வண்ணப் பொடிகளைப் பூசி, சரங்கள் குத்தியபடி ஆடிக்கொண்டு வருவார்கள். இது ‘பேட்டைத்துள்ளல்'. இதை முடித்துக்கொண்டு பெரிய பாதையில் நடக்க ஆரம்பிப்பார்கள்.

பெரும்பாதையில் அழுதை மலை ஏற்றமும் கரிமலை ஏற்றமும் சற்றுச் சிரமமாக இருக்கும். பல ஆண்டுகளாக மலைக்குச் செல்பவர்கள்கூட, இங்கு சற்று சிரமப்படத்தான் செய்வார்கள். அழுதை, கரிமலை ஏற்றங்கள் ஒரு வகையான கஷ்டம் என்றால், கரிமலை இறக்கம் அதைவிட ஒரு படி மேல். ஏறும்போதாவது தேவைப்பட்டால் அங்கங்கே சிறிது நின்றுவிட்டுப் போகலாம். இறக்கத்தில், அது முடியாது. காலை எடுத்துவைத்தால் அடுத்தடுத்து அடி வைத்து இறங்கிக்கொண்டே இருக்க வேண்டும்.

ஏற்றத்திலும் இறக்கத்திலும் சிரமப்படும் சாமிகளை முகம் தெரியாத யாரோ ஒரு சாமி கைகொடுத்துத் தூக்கிவிடுவார்கள். சோர்ந்திருக்கும் முகங்களைப் பார்த்து, கை நிறைய குளுக்கோஸ் கொட்டுவார்கள். துணியால் விசிறிவிடுவார்கள். இந்த அனுபவங்கள் சபரிமலைக்கு மட்டுமே உரித்தானவை. எழுத்துக்களில் இதை வர்ணிப்பது கடினம், அனுபவித்தால் மட்டுமே புரியக்கூடியது.

புனிதமான பம்பை நதி

கரிமலை இறங்கியதும் வருவது, கங்கை நதிக்குச் சமமாக மதிக்கப்படும் பம்பை ஆறு. அதன் தண்ணீர் ஐஸ் போலச் சில்லிடும். நடுக்கும் குளிரில் அதில் ஒரு குளியல் போட்டால், அலுப்பும் களைப்பும் பறந்துவிடும்.

பம்பை முதல் சன்னிதானம் வரையிலான சிறிய பாதை பெரிதாகச் சிரமமாக இருக்காது. இதுவும் சற்று ஏற்றம்தான். ஆனால், பிடித்துக்கொள்ள கம்பிகள், வழிநெடுகிலும் விளக்குகள், கடைகள் என்று இருப்பதால் அசதி தெரியாது ஏறிவிடலாம். இதிலும் மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்குகிற ஏற்றங்கள் ஒன்றிரண்டு உண்டு. மெதுவாக, நிதானமாக நடந்தால்கூட 4 மணி நேரத்தில் சன்னிதானத்தை அடைந்துவிடலாம்.

நெய் மணக்கும் சபரிமலை

சன்னிதானத்தை நெருங்க நெருங்க அந்தப் பனியோடு சேர்ந்து ஓமகுண்டப் புகையும் சுற்றிச்சுற்றி அடிக்கும். நெய்யை வழித்த பிறகு பக்தர்கள் வீசும் தேங்காய் அனைத்தும் மொத்தமாகப் பிரம்மாண்டமாக எரிந்துகொண்டே இருக்கும். அதன் வெப்பமும் நெய்த் தேங்காய் வாசமும் நீண்ட தொலைவுக்கு வீசும்.

ஜொலிக்கும் ஐயப்பன்

வீட்டில் புறப்பட்டதில் இருந்து சரியாக ஓய்வு, தூக்கம் இல்லாதது, தொடர்ச்சியான பயணம், ஊர் ஊராக இறங்கிப் பல கோயில்களுக்கும் சென்று வந்தது, மலைகள் ஏறி இறங்கியது... எனப் பக்தர்களின் கால்கள் சன்னிதானப் பந்தலில் துவண்டபடிதான் நிற்கும்.

உழைப்பின் வியர்வை காய்வதற்குள் கூலி கிடைப்பதுதானே சந்தோஷம். அத்தனை களைப்பிலும், இருமுடியோடு ஐயப்பனைப் பார்த்துவிடும் மகிழ்ச்சிதானே நாம் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் கூலி. நீண்ட வரிசையில் காத்திருந்து சன்னதியை நெருங்கி வந்து, தங்கத்தில் ஜொலிக்கும் சுற்றுச்சுவரையும் துவார பாலகர்களையும் கடந்தால் சன்னதிக்குள் தேஜோமயமான நெய் விளக்குகளுக்கு மத்தியில் தகதகவென ஜொலிப்பார் ஐயப்பன்.

அவரைப் பார்த்த மாத்திரத்திலே பக்தர்கள் எழுப்புகிற ‘சுவாமியே சரணம் ஐயப்பா' என்ற கோஷம். கண்ணில் நீர்வழிய நிற்கும் ஒவ்வொரு பக்தனின் ஒவ்வொரு மயிர்த் துளை வழியாகவும் உள்ளே ஊடுருவி ஏற்படுத்தும் சிலிர்ப்பு, அந்தச் சன்னிதானத்துக்கு மட்டுமே உரியது. இதுதான் ஒவ்வோர் ஆண்டும் புதிது புதிதாக லட்சக்கணக்கான கன்னிசாமிகளை, அந்த சன்னிதானம் நோக்கி வரவைக்கிறது. போன வருஷம் வந்த பக்தரை இந்த வருஷமும் இழுக்கிறது. ஆண்டுதோறும் இழுக்கிறது.

ஏகாதசி, பிரதோஷம், சோமவாரம் என்று விரத நாட்கள் இருந்தாலும் வாரக் கணக்கில் விரதம் இருக்கிற நடைமுறை எல்லா மதங்களிலும் இருக்கிறது. அதுபோலத்தான் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருப்பதும்.

மாலை அணிந்த பக்தர்கள் ஒருவருக்கொருவர் ‘சாமி’ என்று கூப்பிட்டுக்கொள்வதும், அவர்கள் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் காலைத் தொட்டு வணங்கிக் கொள்வதும் சாதாரணமாக அனைவரும் பார்க்கக் கூடியது. மற்ற நாட்களில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் இருக்கிற சாமானிய மனிதரின் கழுத்தில் சந்தனமாலையும் நெற்றியில் சந்தனக் கீற்றும் இடுப்பில் நீல வேட்டியும் ஏறிவிட்டால்... அடுத்த நாளே எல்லோரும் அவரைச் ‘சாமி’ என்கிறார்கள். வீட்டில் அப்பா, அம்மா, மனைவி, குழந்தை மட்டுமின்றி, வழியில் எதிர்ப்படுகிறவரும் ‘வாங்க சாமி’, ‘போங்க சாமி’ என்கிறார். இதைக் கேட்கக் கேட்க.. ‘நான் ஒருவேளை சாமியோ' என்ற ஆன்மிக சந்தேகம் அந்தச் சாமானிய மனிதனிடம் ஏற்படுகிறது. அவர்கள் அவ்வாறு கூப்பிடுகிறார்களே என்பதற்காவது, ‘சாமி’யாக நடந்துகொள்ள முயல்கிறார் அந்தச் சாமி.

வேதத்தின் சாரமாகக் கருதப்படும் ‘அஹம் பிரம்மாஸ்மி' (நான் பிரம்மன். நான் கடவுள்) என்ற எண்ணம் ஒரு துளசி மாலையை, சந்தன மாலையைக் கழுத்தில் போட்டுக்கொண்டதும் வந்துவிடுவது எவ்வளவு பெரிய விஷயம்!

வீட்டில் இருந்துகொண்டே தாமரை இலைத் தண்ணீர் போன்ற வாழ்க்கை. சுக துக்க நிகழ்ச்சிகளில் இருந்து சற்று விலகியிருத்தல். ருசியில் தொடங்கி அனைத்துப் புலன்களையும் அடக்குதல். ராஜயோகம், கர்மயோகம், பக்தியோகங்களைப் படித்து உணர்ந்து பின்பற்றிப் பார்த்தாலும் அவ்வளவு எளிதில் கைகூடாத ‘இல்லறத்தில் துறவறம்' என்பதை வெகு சாதாரணமாக ஒரு ஐயப்பசாமி கடைபிடிக்கிறார். ஈடு இணை இல்லாத விரத மகத்துவம் அது!

நீயே கடவுள்

சபரிமலையில் ஐயப்பன் கோயில் சன்னிதானத்தின் பிரதான முகப்பில் ‘ஐயப்பன் துணை' என்றோ, ‘சுவாமியே சரணம் ஐயப்பா' என்றோ எழுதப் பட்டிருக்காது. அங்கிருக்கும் வாசகம் ‘தத்வமஸி'.

அதென்ன தத்வமஸி. தத் + த்வம் + அஸி.

அதாவது, ‘நான் வேறு நீ வேறு இல்லை. நீதான் கடவுள்’.

மண்டல பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானம் நவம்பர் 16-ம் தேதி திறக்கப்பட்டு, டிசம்பர் 27-ம் தேதி அடைக்கப் படும். 2 நாட்களுக்குப் பிறகு, மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ம் தேதி நடை திறக்கப் படும். மகரஜோதி தரிசனம் 2015 ஜனவரி 14-ம் தேதி நடைபெறும். ஜனவரி 20-ம் தேதிவரை நடை திறந்திருக்கும்.

இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நவம்பர் 17-ம் தேதி பிறக்கிறது. குருசாமியின் கையால் அன்றைய தினம் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவது சிறப்பு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

36 mins ago

ஆன்மிகம்

5 hours ago

ஆன்மிகம்

20 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்