கணபதி என்று அழைக்கப்படும் தேவ கணங்களின் அதிபதியான விநாயகர் அருள் பாலிக்கும் அன்பு தெய்வமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறார். பிள்ளை யார்பட்டி ஆனைமுகனின் பெருமைகள் பல. அதனால் சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகே உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் வசிப்பவர்களின் குல தெய்வம் மற்றும் கஷ்டம் நீக்கும் இஷ்ட தெய்வமாகப் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் விளங்குகிறார்.
கற்பக விருட்சம் என்னும் மரத்தினடியில் அமர்ந்து மனதார வேண்டினால், வேண்டுவனவற்றை எல்லாம் தருமாம் அக்கற்பக மரம்.
இந்த விநாயகரும் வேண்டுவார் மனம் போல் வேண்டுவனவற்றை எல்லாம் வழங்குவதால் கற்பக விநாயகர் என்று பெயர் தாங்கி இருப்பதாக ஐதீகம். இந்த விநாயகரை வணங்கினால் கல்வி, கேள்வி, ஞானம், திருமணம், குழந்தை பாக்கியம், குடும்ப நலம், உடல் பலம், வியாபாரச் செழிப்பு உட்பட சகல நற்பலன்களும் ஏற்படும் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து வழிபடுகிறார்கள்.
இத்திருக்கோவிலின் தல வரலாறு மிகவும் சுவாரசியமானது.
குன்றைக் குடைந்து அமைக்கப்பட்ட இந்தக் குடைவரைக் கோயில் சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டது என இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. பிள்ளையார்பட்டி என்பது இன்றைய வழக்கில் இருக்கும் பெயர் . கல்வெட்டுக்கள் மூலம் அறியப்பட்ட பிறபெயர்கள்: எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்வரம், இராச நாராயணபுரம், மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் என்பன.
கி.பி.12ஆம் நூற்றாண்டிலிருந்து செட்டிநாட்டு, நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் மேற்பார்வையில் ஆகம முறை தவறாமல் தெய்வீகத் திருப்பணிகள் நடைபெறுகின்றன என்பது வரலாறு.
இந்தக் கற்பக விநாயகர் வலது கையில் லிங்கம் ஏந்திய திருவுருவத்துடன் காட்சி அளிக்கிறார். வலம்புரியாகச் சுழித்த தும்பிக்கையைக் கொண்டிருப்பதால் வலம்புரி விநாயகர் என்ற ஒரு பெயரும் உண்டு. கோயிலின் உட்பகுதி குடைவரைக் கோயிலாகப் பாண்டியர்கள் அமைத்த நிலையிலும், வெளிப்பகுதி நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் நிர்மாணித்த பகுதியாகவும் இன்றும் காணக் கிடைக்கின்றன.
இக்கோயிலின் உள்ளே செல்ல நியதிகள் உண்டு. விநாயகர் சந்நிதிக்கு எதிர்ப் புறம் அமைந்த வடக்குக் கோபுர வாயில் வழியாகச் சென்று வழிபாடு முடித்துக் கிழக்கு ராஜ கோபுர வாயில் வழியாக வெளியே வர வேண்டும். உள்ளே நுழைந்ததும் ஆறு அடி உயரக் கற்பக விநாயகர் காட்சி தருகிறார். இக்கற்பக விநாயகருக்குச் செய்யப்படும் விபூதி அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த அபிஷேகத்தின்போது பக்தர்களின் கண்களுக்கு விநாயகர் நிதர்சனமாக எழுந்தருளியிருப்பது போன்ற தோற்றத்துடன் காணக் கிடைப்பார். முக்குறுணி மோதகம் என்னும் கொழுக்கட்டை இங்கே நிவேதனம் செய்யப்படுகிறது.
வியாபாரம் செழிக்க வேண்டிக்கொள்ளும் பக்தர்கள் இத்திருக்கோவிலில் கணபதி ஹோமமும், இவ்விநாயகருக்குப் பால் அபிஷகமும் செய்வது வழக்கம். இதனால் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும் என்பது
பக்தர்களின் நம்பிக்கை. பொதுவாக விநாயகரின் உடல் பகுதியில் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு கிரகம் வீதம் நவக்கிரகங்கள் வீற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே விநாயகருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் இத்திருக்கோவிலில் சொந்த வீட்டில் இருப்பதுபோல நவக்கிரகங்கள் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கின்றனர்.
திருக்குளத்தில் துள்ளி விளையாடும் மீனும், கோயில் அமைந்துள்ள சிறு குன்றமும் பிள்ளையார்பட்டியை இயற்கை அழகு தவழும் இடமாக ஆக்கியிருக்கின்றன. காரைக்குடிக்கு அருகில் உள்ள இந்த அழகிய திருக்கோயிலுக்கு மதுரையிலிருந்தும் செல்லலாம்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
20 hours ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago