பைபிள் கதைகள் 49: இஸ்ரவேலர்களின் கடைசித் தலைவர்!

By அனிதா அசிசி

கானான் தேசத்தில் எப்பிராயீம் என்னும் மலைகள் சூழ்ந்த நாடு இருந்தது. அதன் முக்கிய நகரமாக ராமா விளங்கிவந்தது. அதில் பரலோகத் தந்தையாகிய கடவுளுக்குப் பணிந்து வாழ்ந்துவந்த இஸ்ரவேலர் ஒருவர் இருந்தார். அவரது பெயர் எல்க்கானா. இஸ்ரவேல் மக்களில் எப்பிராயீம் என்னும் கோத்திரத்திலிருந்து வந்தவர். அவருக்கு அன்னாள், பெனின்னாள் என இரு மனைவியர் இருந்தனர். பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தனர். ஆனால் அன்னாளுக்கோ பிள்ளைகள் இல்லை. இதனால் பெனின்னாள் மிகவும் கர்வம் கொண்டவளாக அன்னாளை “மலடி” என்று தூற்ற ஆரம்பித்தாள். இதனால் அன்னாள் மிகவும் துயருற்றுவந்தாள். கணவன் எல்க்கானா எவ்வளவோ எடுத்துக் கூறியும் அன்னாளை அவமானப்படுத்துவதையும் ஊரார் முன் தூற்றுவதையும் அவள் நிறுத்தவில்லை.

கடவுள் காட்டிய கருணை

கடவுள் மீது மிகுந்த பக்தியும் பணிவும் கொண்டிருந்த எல்க்கானா, பிள்ளையின்றி வாடி வந்த தன் மனைவி அன்னாளைக் கண்டு வருந்தினார். அவளை அழைத்துக்கொண்டு, ஆண்டுதோறும் தனது சொந்த ஊரான ராமாவிலிருந்து கிளம்பி, கடவுளைத் தொழுதுகொள்ள அமைக்கப்பட்டிருந்த ஆசாரிப்புக் கூடாரத்தை விட்டுவிட்டு சீலோவுக்குப் போக ஆரம்பித்தார். அங்கே அவர் சர்வ வல்லமையுள்ள கடவுளை வணங்கித் துதித்து அவருக்குப் பலிகளும் செலுத்தித் திரும்பினார். இம்முறை சீலோவுக்குச் சென்று பலி செலுத்திய பின் கடவுளிடம் கைகளை ஏந்தி அன்னாள் இறைஞ்சி நின்றாள்.

“உலகைப் படைத்துக் காக்கும் தந்தையே, என்னை மறந்துவிடாதீர் அப்பா! எனக்கு ஒரு ஆண் குழந்தையை அருளும். அவ்வாறு எனக்குக் கருணை காட்டினால் வாழ்நாளெல்லாம் சேவை செய்ய அவனை உமக்குக் கொடுத்து விடுவேன், இது சத்தியம்” என்று கண்ணீரோடு ஜெபம் செய்தாள். அவளது கண்ணீர் புனிதமான ஆசரிப்புக் கூடாரத்தின் தரையில் விழுந்து சிதறியது. கடவுள் அன்னாளின் ஜெபத்துக்கு மனமிறங்கினார். சீலோமிலிருந்து திரும்பியபோது அன்னாளின் மனத்துக்குள் அமைதியையும் சந்தோஷம் குடிகொள்ளும்படி செய்தார். மனைவியின் முகத்தில் முன்னெப்போதும் இல்லாத பிரகாசத்தைக் கண்ட அல்க்கானா, அவளை மேலும் அதிக அக்கறையுடன் பார்த்துக்கொண்டார். அவளோடு அதிகமாய் தன் நேரத்தைச் செலவிட்டார்.

புதுமணத் தம்பதியர்போல் அவர்கள் காதலில் களித்திருந்தனர். பல மாதங்களுக்குப் பின் அன்னாள் கர்ப்பமுற்றாள். அவள் பெற்ற அவமானங்கள் துடைத்தெறியப் பட்டன. கடவுளை இன்னும் அதிகமாகத் தொழுதுகொள்ள ஆரம்பித்தாள். தன் ஜெபம் கேட்கப்பட்டு, தனக்குத் தாய்மை அருளப்பட்டதில் மகிழ்ச்சியடைந்த அன்னாளின் வயிற்றுக்குள் அவளது குழந்தை துள்ளிக் குதித்தது. பின்னர் அவள் குழந்தையை ஈன்றபொழுது அது ஆண் மகவாக இருந்தது. அவனுக்குப் பெற்றோர் சாமுவேல் என்று பெயரிட்டு வளர்த்துவந்தார்கள். சாமுவேல் என்றால் கடவுளின் பரிசு, கடவுள் கேட்பார் என்பது பொருள்

மகனை ஒப்படைத்த தாய்!

அன்னாள் சாமுவேலைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தாள். அவன் மீது உயிரையே வைத்திருந்தாள். அவனுக்கு விவரம் தெரியத் தொடங்கியது. முதல் கடவுளாகிய யகோவா, இஸ்ரவேல் மக்களை அடிமைத் தளையிலிருந்து மீட்டு, செங்கடலை வற்றச்செய்து, அதன் தரைவழியே அதைக் கடக்கச்செய்து, பாலைவனத்தில் உணவளித்து, கானான் நாட்டை இஸ்ரவேலர்களுக்கு வென்று கொடுத்த வரலாற்றைக் கூறி வளர்த்துவந்தாள். சிறு வயது முதலே யகோவாவைப் பற்றி சாமுவேல் நன்கு புரிந்துகொண்டான்.

அன்னாள், தன் கணவரைப் பார்த்து, “சாமுவேல் தாய்ப் பாலை மறந்ததுமே ஆசரிப்புக் கூடாரத்தில் கடவுளுக்குச் சேவை செய்ய அவனைக் கொண்டுபோய் விட்டுவிடலாமா?” என்று கேட்டாள். அதற்கு கணவர், “கடவுளுக்கு நீ வாக்களித்தபடியே செய்” என்றார். எனவே சாமுவேலை அழைத்துக்கொண்டு, அவர்கள் சீலோமுக்குச் சென்றார்கள். அங்கே ஆசாரிப்புக் கூடாரத்தின் பிரதான ஆசாரியராக இருந்தவர் ஏலி. வயது கூடிய கிழவனாக இருந்த ஏலியைப் பெற்றோர் சந்தித்தனர். சாமுவேலை கடவுளுக்கு சேவை செய்ய அர்ப்பணிப்பதாக அவர்கள் ஏலியைப் பார்த்துக் கூறினார்கள்

வியந்துபோன ஏலி

ஐந்து வயதே நிரம்பிருந்த சாமுவேலைக் கண்டதும் ஏலி அதிர்ச்சியடைந்தார். “பால்மணம் மாறாத இந்தப் பாலகனையா இங்கே விட்டுச் செல்லப்போகிறீர்கள்?! நன்றாக யோசித்துத்தான் சொல்கிறீர்களா” என அந்த வெண்தாடிக் கிழவர் நா தழுதழுக்கக் கேட்டார். அதற்கு சாமுவேல், “அய்யா.. என் தாய், தந்தையின் விருப்பபடி கடவுளின் பக்கத்தில் இருந்து நான் அவருக்குச் சேவை செய்யவே விரும்புகிறேன்” என்றான். இதைக் கேட்டு ஏலி சிலிர்த்துப் போனார். அவனை அருகே அழைத்து ஸ்பரிசித்து அணைத்துக்கொண்டார். அவனையும் அவனது பெற்றோரையும் ஆசீர்வதித்த ஏலி, “கடவுளின் சித்தப்படியே ஆகட்டும்” என்று அனுமதித்தார்.

சாமுவேலை ஆசாரிப்புக் கூடாரத்தில் விட்டுவிட்டு அன்னாளும் எல்க்கானாவும் ராமாவுக்குக் கிளம்பிச் சென்றார்கள். சாமுவேல் யகோவாவின் ஆசரிப்புக் கூடாரத்தில் சேவை செய்வதில் மிகவும் மகிழ்ந்துபோனான். தொடக்கத்தில் மகனைப் பிரிந்த துன்பம் அன்னாளை வாட்டினாலும் பின்னர், அவளுக்குக் கடவுள் மேலும் பல குழந்தைகளை அருளியதால் ஆறுதல் அடைந்தாள். இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் அன்னாளும் எல்க்கானாவும் கடவுளை வணங்கவும், தங்கள் மகனைக் கண்ணாறாக் காணவும் சீலோமுக்கு வரத் தொடங்கினார்கள். இப்படி வரும்போதெல்லாம் தனது அன்பு மகனுக்காகத் தான் கைப்பட நெய்த கையில்லாத வெண் அங்கியை அன்னாள் கொண்டுவருவாள்.

புனிதத்தைச் சிதைத்த வாரிசுகள்

காலம் உருண்டோடியது. சீலோமின் ஆசரிப்புக் கூடாரத்தில் சாமுவேல் கடவுள் சேவையை மிகுந்த பணிவுடனும் பக்தியுடனும் செய்துவந்தான். அவனது தூய்மையும் பனித்துளிபோல் மென்மையான அவனது மனமும் கடவுளுக்கு பிடித்திருந்தன. வளர்ந்து பெரியவனாகிவிட்ட அவனை ஜனங்களுக்கும் பிடித்துப்போய்விட்டது.

பிரதான ஆசாரியாரான ஏலிக்கு ஓப்னி பினெகாசு என இரு மகன்கள் இருந்தார்கள். ஆசரியாரின் வாரிசுகள் என்ற அடிப்படையில் அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தில் தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்தி வந்தார்கள். அங்கே தொழவரும் பக்தர்களின் பலிகளை இழிவுப்படுத்தினார்கள். கடவுள் மீது அவர்களுக்குப் பயமில்லாமல் இருந்ததால் பல கெட்ட காரியங்களைச் செய்துவந்தார்கள். அவர்களது செயல்களைக் கண்ட பலர், அவர்களின் பாதையை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் நடக்க ஆரம்பித்தனர்.

மகன்களின் தீய நடத்தை கண்டு ஆசாரிப்புக் கூடாரப் பதவியிலிருந்து ஏலி அவர்களை நீக்கவில்லை. பாசம் அவரைத் தடுத்தது. இதனால் கடவுள் கோபம் கொண்டார். ஆசரிப்புக் கூடாரத்தின் புனிதத்தைச் சிதைத்த அவர்களைத் தண்டிக்க விரும்பினார். இத்தனைக்கு மத்தியிலும் சாமுவேல் தன் கடமைகளைப் பொறுமையாகவும் சரியாகவும் செய்துவருவதைக் கடவுள் கண்ணுற்றார். எனவே தீயவர்களை தனது இடத்திலிருந்து அற்றிவிட்டு சாமுவேலை உயர்த்தக் கடவுள் விரும்பினார்.

சாமுவேலுடன் பேசிய கடவுள்

ஆசரிப்புக் கூடாரத்தில் சாமுவேல் தூங்கிக் கொண்டிருந்தபோது “சாமுவேலே… சாமுவேலே” என்று கடவுள் அவனை அழைத்தார். தன்னை அழைத்தது கடவுள்தான் எனத் தெரிந்துகொண்டதும், “தந்தையே பேசும், உம்முடைய அடியேன் கேட்கிறேன்” என்று பணிவுடன் கூறினான். அப்போது கடவுள், “ஏலியையும் அவருடைய மகன்களையும் தண்டிக்கப் போகிறேன்” என்றார். இதை ஏலியிடம் சாமுவேல் கூற, “கடவுளின் சித்தப்படியே நடக்கட்டும்” என்றார் ஏலி. கடவுள் சொன்னபடியே ஓப்னியும் பினெகாசும், பெலிஸ்தருடன் நடந்த போரில் மாண்டுபோனார்கள். மகன்கள் இறந்ததைக் கேள்விப்பட்ட ஏலியும் இறந்துபோனார். இப்போது சாமுவேல் இஸ்ரவேலர்களின் கடை நியாயாதிபதியாக ஆனார். அவரது தலைமையில் இஸ்ரவேலர்கள் அமைதியுடன் வாழ்ந்தார்கள்.

(பைபிள் கதைகள் தொடரும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்