என்றென்றும் புன்னகைக்கும் கண்ணன்

By என்.ராஜேஸ்வரி

ஆகஸ்ட் 25: கிருஷ்ண ஜெயந்தி

தேவகிக்குக் கண்ணன் பிறந்தவுடன் மனக்கவலை நீங்கியது. நான்கு திருக்கரங்களுடனும், பொருத்தமான சிறிய சங்கு சக்கரத்துடனும் குட்டிக் குழந்தையாக நாராயணன் தோன்றினான். முதலில் சத்தமில்லாமல் ஆனந்தக் களிப்பு எய்திய தேவகி, பின்னர் நாற்கரங்களை மறைத்து இருகரத்துடன் விளங்குமாறு குழந்தையிடம் கேட்டுக் கொண்டாள். அழகிய அக்குழந்தையின் திருமுகத்தைக் கண்ட மாத்திரத்தில், பட்ட துன்பமெல்லாம் மறைந்து, மனம் மகிழ்ந்தனர் தேவகியும் வசுதேவரும்.

அந்த சிருங்காரக் கண்ணன் குறித்து, கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் மட்டுமல்ல, தமிழ் மும்மூர்த்திகளான அருணாசல கவிராயர், மாரிமுத்தாப் பிள்ளை, முத்துத் தாண்டவர் ஆகியோரும் கண்ணனைப் பற்றி கீர்த்தனைகள் இயற்றி உள்ளனர். ஊத்துக்காடு வேங்கட கிருஷ்ணனின் ‘ஆடாது அசங்காது வா’ என்ற பாடலில், கண்ணன்பால் கொண்ட அன்பினை உயிரைக் குழைத்து ஊனில் செலுத்தும் மாயத்தைக் காணலாம். மேலும் ஈரேழு புவனமும் கண் முன்னே சுழலும் அற்புதமும் காணக் கிடைக்கிறது. மீரா, ஆண்டாள் ஆகிய பெண் கவிஞர்களின் கண்ணன் குறித்த காதல் பாடல்களுக்கு, துக்காராம், அன்னமையா ஆகியோரின் பக்திப் பரவசப் பாடல்கள் சற்றும் சளைத்தவை அல்ல.

கிருஷ்ண பூஜை செய்வது எப்படி?

பத்ரம், புஷ்பம், பலம், தோயம் என்று கிருஷ்ணர் பகவத் கீதையில் குறிப்பிடுகிறார். ஒரு இலையாவது தந்து பூஜை செய். முடியவில்லையா? ஒரே ஒரு பூ தா. அதுவும் முடியவில்லையா? ஒரே ஒரு பழம் தா. இது எதுவும் முடியவில்லையா? ஒரு சொட்டு நீர் தா. பக்தனே, பக்தியால், உன் கண்ணில் துளிர்க்கும் ஒரு துளி நீர் போதுமானது என்கிறார். பயணத்தில் விமானத்திலோ, கப்பலிலோ, ரயிலிலோ, பஸ்சிலோ, காரிலோ செல்லும்போது, பூஜை செய்வதற்கான வழி வகை இருக்காது. அந்த நிலையில் பக்தியால் மனம் கரைந்து, கண்ணில் துளிர்க்கும் அந்த ஒரு துளி நீர் போதும். கிருஷ்ண ஜெயந்தியன்று மாலை ஆறு மணிக்கு மேல் வாசல் தெளித்து கோலமிட்டு, செங்காவி இடவேண்டும். இல்லத்தின் வாயிலில் இருந்து பூஜை அறை வரை கிருஷ்ண பாதம் என்று சிறு குழந்தை பாதங்களை வரைய வேண்டும். இப்பொழுதெல்லாம் தரையில் ஒட்டும் `ஸ்டிக்கர்’ பாதங்கள் கிடைக்கின்றன. அதனைக்கூட ஒட்டி, தரையை அழகுபடுத்தலாம். நிலைப்படியில் மாவிலை செருகி, தோரணம் கட்ட வேண்டும்.

பசு, கன்று சூழ, ராதையுடன் உள்ள கிருஷ்ண விக்கிரகத்துக்கு மலர் மாலை சூட்ட வேண்டும். பின்னர் தெருக்கடையில் விற்கும் வன்னிக் கிளையை வாங்கி வந்து கிருஷ்ண விக்கிரகத்துக்குப் பின்னால் வைக்க வேண்டும். இது வன்னி மரத்தடியில் கிருஷ்ணன் இருப்பது போன்ற பாவனை.

துளசி, சாமந்தி, மல்லிகை, ஜாதி, ரோஜா போன்ற மலர்களை உதிரியாக வைத்துக்கொள்ள வேண்டும். பழம், வெற்றிலை பாக்கு, தேங்காய் இவற்றுடன் வெல்லச் சீடை, உப்புச் சீடை, முறுக்கு, தட்டை, பால் கோவா, திரட்டிப்பால், சேமியா பால் பாயசம், வடை, களவடை ஆகியவற்றை முன்னரே செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

முதலில் மஞ்சள் பிள்ளையார் பூஜை. பின்னர் மனதில் வேண்டுவனவற்றை எல்லாம் பிரார்த்தித்துக் கொண்டு கிருஷ்ணனின் நாமங்களைச் சொல்லி, பூப்போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். மகாலஷ்மி நாமங்களைச் சொல்லி ஆராதிக்க வேண்டும். கிருஷ்ணன் குறித்த பாடல்களைப் பாடலாம். பட்சணங்களை நிவேதனம் செய்ய வேண்டும். பின்னர், கிருஷ்ணார்ப்பணம் என்று சொல்ல வேண்டும். பிரசாதங்களை இல்லத்தில் உள்ளவர்கள் முதலில் சிறிதளவு உண்ட பின்னர், அக்கம்பக்கத்தவர்கள், ஏழை, எளியவர்கள் ஆகியோருக்கு அன்போடு வழங்க வேண்டும். பகிர்ந்துண்டு வாழ்தல் பல்லுயிர் காக்கும் என்பது பண்டிகைக் கலாச்சாரத்தின் நோக்கம்.

அந்த சிருங்காரக் கண்ணன் குறித்து, கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் மட்டுமல்ல, தமிழ் மும்மூர்த்திகளான அருணாசல கவிராயர், மாரிமுத்தாப் பிள்ளை, முத்துத் தாண்டவர் ஆகியோரும் கண்ணனைப் பற்றி கீர்த்தனைகள் இயற்றி உள்ளனர். ஊத்துக்காடு வேங்கட கிருஷ்ணனின் ‘ஆடாது அசங்காது வா’ என்ற பாடலில், கண்ணன்பால் கொண்ட அன்பினை உயிரைக் குழைத்து ஊனில் செலுத்தும் மாயத்தைக் காணலாம். மேலும் ஈரேழு புவனமும் கண் முன்னே சுழலும் அற்புதமும் காணக் கிடைக்கிறது. மீரா, ஆண்டாள் ஆகிய பெண் கவிஞர்களின் கண்ணன் குறித்த காதல் பாடல்களுக்கு, துக்காராம், அன்னமையா ஆகியோரின் பக்திப் பரவசப் பாடல்கள் சற்றும் சளைத்தவை அல்ல.

காதுக்குள் ரீங்காரமிடும், உணர்வுபூர்வமான கண்ணன் பாடல்கள் குறித்து பெரும் பட்டியலே உண்டு. ஹரி துமஹாரோ, சாமஜ வரகமனா, தாயே யசோதா, மன் நாராயணா, ஸ்வாகதம் கிருஷ்ணா, குறையொன்றுமில்லை என்று தொடங்கும் பாடல்கள் அவற்றில் ஒரு சில. கிருஷ்ணன் அருளிய பகவத் கீதையை உச்சரித்தாலே கீர்த்தனை போலவே சுநாதமாக இருக்கிறது.

துன்பங்களிலும் சிரிப்பவன்

கிருஷ்ணன், பிறந்தது சிறையில். பிறந்தவுடனேயே பெற்ற தாயைப் பிரிந்தான். கோகுலம் சென்றபின் பெற்ற தந்தையைப் பிரிந்தான். சிறு வயதில் சானூரன், பூதகி, சகடாசுரன் ஆகியோரிடம் சிக்கிக் கொண்டான். காளிங்கன் என்ற பாம்பிடம் அகப்பட்டுக் கொண்டான். இளைஞனாய் வளர்ந்த பின் தாய்மாமன் கம்சனிடம் மாட்டிக் கொண்டான். பாண்டவருக்காக தூது சென்றபோது, துரியோதனனின் வலையில் சிக்கி, பள்ளத்தில் தள்ளப்பட்டான். பாண்டவர்களுக்காகப் போரில் துணை செய்ய தேரோட்டியபோது, முகத்தில் அம்புக் காயங்கள் பெற்றான். இகலோகம் விட்டு, வைகுந்தம் செல்லும் முன் வேடனின் அம்பு, அவனது கால் கட்டை விரலைப் பதம் பார்த்தது. பிறந்ததில் இருந்து, இவ்வுலகை விடுக்கும்வரை அவன் பட்ட உலகாய துன்பங்கள் ஒன்றல்ல இரண்டல்ல ஓராயிரம். ஆனால் கண்ணனின் சிலா ரூபங்கள், ஓவியங்கள் அனைத்திலும் கண்ணனின் திருமுகத்தில் புன்னகையையே காணமுடிகிறது. அழுத முகமாக எவ்விடத்திலும் அவனைக் கண்டதில்லை. கண்டதுண்டோ கண்ணன் போல் புன்னகையால் எதனையும் வெல்லும் ஜாலம்.

அதனால் புன்னகை வாழ்வை வளமாக்கும் என்பது திண்ணம். புன்னகை செய்யத் தேவை என்ன காசா? பணமா?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

14 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்