வேதத்தில் இருப்பதை எல்லோருக்கும் நன்றாக விளங்க வைப்பதற்காக, வேதங்களை வகுத்துக் கொடுத்த அதே வேத வியாஸர் பதினெட்டுப் புராணங்களை உபகரித்தார். பதினென் புராணங்களை அஷ்டாதச புராணம் என்பார்கள்.
வியாஸரைத்தான் நான் முதல் ‘ஜர்னலிஸ்ட்' (பத்திரிகை எழுத்தாளர்) , இன்றைய ஜர்னலிஸ்ட்களுக்கெல்லாம் ‘ஐடிய' லாக (முன்னுதாரணமாக) இருப்பவர் என்று நினைக்கிற வழக்கம். கதை, சரித்திரம், பூகோளம், தத்வம், தர்மம், கலைகள் எல்லாவற்றையும் புத்திமான்களுக்கு மட்டுமில்லாமல் பாமர ஜனங்களுக்கும் ஸ்வாரஸ்யமாகத் தருவதற்கே அவர் புராணங்களை எழுதிப் பெரிய செல்வமாகக் கொடுத்திருக்கிறார்.
இதைத்தானே ஜர்னலிஸ்ட்களும் செய்கிறார்கள்? ஆனால் இவர்கள் பெரும்பாலும் ஸ்வாரஸ்யம், ஜன ரஞ்ஜகம் என்பதோடு நிறுத்திக்கொண்டு விடுகிறார்கள். வியாஸர் பாமர ஜனங்களையும் தர்மத்தில் கொண்டு சேர்க்கவே, பரமாத்மாவிடம் கொண்டுபோய் விடுவதற்கே ஸ்வாரஸ்யத்தை ஸாதனமாக வைத்துக்கொண்டார். அந்த ஸ்வாரஸ்யத்தையே 'கோல்' (லட்சியம்) என்று வைத்துக்கொண்டால் பத்திரிக்கைகள் தர்ம விருத்தமான (தர்மத்துக்கு முரணான) விஷயங்களையும் பிரசாரம் செய்யும்படி ஆகிறது.
வியாஸரை முன்னோடியாக வைத்துக்கொண்டால் பத்திரிகைக்காரர்களின் எழுத்து சுத்தமாகிவிடும். லோகத்துக்கு ஒரு பெரிய நல்லது பிறக்கும்.
நாலு லட்சம் கிரந்தங்களில் வியாஸர் இந்த 18 புராணங்களை எழுதியிருக்கிறார். ஒரு கிரந்தம் என்பது 32 எழுத்துக் கொண்ட ச்லோகம். இந்த நாலு லட்சத்தில் கால்வாசியை, அதாவது ஒரு லட்சம் கிரந்தத்தை ‘ஸ்காந்த புராண'மே எடுத்துக் கொண்டு விடுகிறது. உலகத்தின் மிகப் பெரிய புஸ்தகம் அதுவாகத்தான் இருக்கும். 17 புராணங்களுமாக மூன்று லட்சம் கிரந்தம். இது தவிர லட்சம் கிரந்தம் கொண்ட மஹாபாரதத்தையும் வியாஸர் உபகரித்திருக்கிறார். (‘புராணம்'என்கிற பதினெட்டில் சேராமல் ‘இதிஹாஸம்'என்று இருப்பவை பாரதமும், ராமாயணமும்.)
ஒவ்வொரு தேவதா மூர்த்தியைப் பற்றியும் ஒவ்வொரு புராணம் சொல்லும். சைவமானவை, வைஷ்ணவமானவை, சாக்தமானவை என்றிப்படிப் பல தேவதைகளைக் குறித்துப் புராணங்கள் இருக்கின்றன.
பிரம்ம புராணம் (பிராம்மம்), பத்ம புராணம் (பாத்மம்), விஷ்ணு புராணம் (வைஷ்ணவம்), சிவ புராணம் (சைவம்), பாகவதம், நாரத புராணம் (நாரதீயம்), மார்க்கண்டேய புராணம், அக்னி புராணம் (ஆக்னேயம்), பவிஷ்ய புராணம், பிரம்ம வைவர்த்த புராணம், லிங்க புராணம், வராஹ புராணம் (வாராஹம்) , ஸ்கந்த மஹா புராணம், வாமன புராணம், கூர்ம புராணம் (கௌர்மம்), மத்ஸ்ய புராணம் (மாத்ஸ்யம்) , கருட புராணம் (காருடம்), பிரம்மாண்ட புராணம் என்பவை பதினெட்டுப் புராணங்கள்.
இந்தப் பதினெட்டில் பத்து சிவபரமானது என்று சொல்கிறார்கள். இப்போது நமக்குப் பிரஸித்தமாகத் தெரிகிற அநேக விருத்தாந்தங்கள் இவற்றிலேதான் வருகின்றன. சரித்திரம், கதை, தத்துவம் எல்லாம் இவற்றிலே இருக்கின்றன.
விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யத்தில் ஆசார்யாள் விஷ்ணு புராணத்திலிருந்து நிறைய மேற்கோள் காட்டுகிறார். வியாஸ மஹரிஷியின் பிதாவான பராசரர் பண்ணின புராணம் அது. ஸ்ரீ ராமாநுஜரின் ஸித்தாந்தத்தில் விஷ்ணு புராணம் ஒரு முக்கியமான அதாரிடி (ஆதார நூல்) .
ஸ்ரீ ராமநுஜருக்கு முந்தி விசிஷ்டாத்வைதத்தின் மூல புருஷர்களில் ஒருவராக இருந்தவர் ஆளவந்தார். அவரிடம் ராமாநுஜர் போய்ச் சேருவதற்குள்ளேயே அவருடைய உயிர் பிரிந்துவிட்டது. ராமாநுஜரிடம் முக்கியமாக மூன்று காரியங்களை ஒப்புவிக்க வேண்டுமென்று ஆளவந்தார் நினைத்தார். அதனால் பிராணன் வெளியே போன பிறகும் அவருடைய சரீரத்தில் மூன்று விரல்கள் மடங்கி இருந்தனவாம்.
ஒவ்வொரு விரலும் இன்ன ஆக்ஞையைத் தெரிவிக்கிறது என்று புரிந்து கொண்டு ராமாநுஜர் சொன்னவுடன், உயிரில்லாத அந்த உடம்பின் மடங்கின விரல்கள் ஒவ்வொன்றாக நிமிர்ந்தனவாம்!அந்த மூன்று ஆக்ஞைகளில் ஒன்று, பிரம்ம ஸூத்ரத்திற்கு விசிஷ்டாத்வைதப்படி பாஷ்யம் எழுதவேண்டும் என்பது. இரண்டாவது, திருவாய்மொழிக்கு வியாக்யானம் எழுதப் பண்ண வேண்டும் என்பது. மூன்றாவதாக வியாஸர், பராசரர் ஆகிய இருவரின் கீர்த்தியும் உலகில் இருக்கும்படியாகப் பண்ணுவது.
விஷ்ணு புராண கர்த்தா என்பதால் இப்படிப் பராசரருக்கு ஏற்றம் கொடுக்கப்பட்டது. இதை மனஸில் வைத்துக் கொண்டுதான் ராமாநுஜர் தம்முடைய முக்கியமான சிஷ்யரான கூரத்தாழ்வாரின் இரண்டு பிள்ளைகளுக்கும் பராசர பட்டர், வேத வியாஸ பட்டர் என்று பெயர் வைத்தார். பராசரருக்கு ஏற்றம் கொடுக்கப்பட்டது. இதை மனஸில் வைத்துக் கொண்டுதான் ராமாநுஜர் தம்முடைய முக்கியமான சிஷ்யரான கூரத்தாழ்வாரின் இரண்டு பிள்ளைகளுக்கும் பராசர பட்டர் பிற்காலத்தில் வைஷ்ணவ ஆசாரியர்களில் முக்கியமான ஒருவரானார்.
‘விஷ்ணு புராணம்' பண்ணியவர் பராசரர் என்றாலும், பதினெட்டுப் புராணங்களையும் நாம் பார்க்கிற ரூபத்தில் ஸரிபண்ணி எழுதிக் கொடுத்தது வியாஸர்தான். வேதங்களை அவர்தான் விபாகம் பண்ணினார் (வகுத்துக் கொடுத்தார்) என்ற விஷயத்தை முன்பே சொல்லியிருக்கிறேன். வேதத்திலுள்ள விதிகளை எல்லோருக்கும் நன்றாக மனஸிலே ஆழமாகப் பதியச் செய்ததற்காக அவரே புராணங்களையும் அநுக்ரஹித்தார்.
இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. வேதத்தை அத்யயனம் பண்ணும் அதிகாரம் சிலருக்குத் தான் இருக்கிறது. மற்றவர்களுக்கு இல்லை. அதனால் அப்படிப்பட்ட பொது ஜனங்களுக்கு வேத தத் வார்த்தங்கள் தெரிய வேண்டும் என்றே புராணங்களை வியாஸர் எழுதினார் என்பதே அந்தக் காரணம்.
விஷ்ணு புராணத்தை வியாஸரின் தகப்பனார் மூல ருபத்தில் சொன்னார் என்றால், பாகவதத்தை வியாஸரின் புத்திரரான சுகாசாரியார் பரீக்ஷித்துக்கு உபதேசிக்கிறார்.
பதினெட்டுப் புராணங்களில் ‘பாகவதம்’ என்று சொல்லப்படுவது, கிருஷ்ண பரமாத்மாவின் சரித்திரத்தை முக்கியமாக வைத்து மற்ற அவதாரங்களின் கதைகளையும் சொல்கிற விஷ்ணு பாகவதாமா என்ற இரண்டு விதமான அபிப்ராயங்கள் உண்டு. நமக்கு இரண்டும் வேண்டும். ‘விஷ்ணு பாகவதம்', ‘தேவி பாகவதம்'இரண்டும் உத்தமமான கிரந்தங்களாக இருக்கின்றன. சைதன்யர், நிம்பார்க்கர், வல்லபாசாரியார் போன்றவர்களின் ஸித்தாந்தங்களில் விஷ்ணு பாகவதம் வேதத்துக்கு ஸமதையான அந்தஸ்துப் பெற்றிருக்கிறது. அதே சமயத்தில் அவர்களை ஆட்சேபிக்கிற அத்வைதிகளும் அதைத் தலைக்கு மேல் கொண்டாடுகிறார்கள்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
7 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago